"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"


துவாரகனின் கவிதைப்பிரதி பல அம்சங்களையும் தன்னகத்தே கொண்டது. எளிமையான, செப்பனிடப்பட்ட , சிக்கனமான மொழி ஒரு காலகட்டத்தின் துயரப்பாடுகளை கவிமொழியாக கூறுகின்றது. இழந்து போன பொற்காலங்களை , அனுபவங்களை கூறுகின்றன. ரத்தமும் சதையுமான கதைகளை கண்ணீருடன் உதிரப்பூக்களாக வெளிப்படுத்துகின்றன.

குணேஸ்வரன் அவர்களது கவிதை பிரதியை நான்கு வகையான விடய தளங்களில்,உத்தி முறைகளை என்னால் வாசிக்க முடிந்தது.

1) ஈழப்போராட்டதில் ஏற்பட்ட மனித அவலங்களும், உடல், உள சிக்கல்களையும் நேர்கோட்டு பொதுமைபடுத்தி(direct generalization ) வெளிப்படுத்தும் கவிதைகள்.
2) அதிகாரம் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகின்றபோது எழுகின்ற சாதாரணனில் ஏற்படுகின்ற கோபங்களை குறியீட்டுவடிவமாக(symbolic ) வெளிப்படுத்தும் கவிதைகள்.
3) அரசியல் செயல்பாடுகளின் மேற்கொண்ட அவநம்பிக்கையை ஏளனஞ்செய்து(irony ) படைக்கப்பட்ட கவிதைகள்(சர்க்கஸ் கோமாளிகளும் னங்களும், படங்காட்டுதல்)
4) சமூகத்தின் கள்ள மௌனங்களை கேள்விக்கு உட்படுத்தும் உருவகமுறை(metaphor ) கவிதை வெளிப்பாடு.

இருந்தாலும் மேற்கிறிப்பிட்ட தளங்களில் இருந்து விலகல்களான இருந்த கவிதைகளும் இருக்கின்றன. "தலைப்பில்லாத கவிதைகள்" ஒருவகையான மாறுபட்ட பொருள் கொள்ளலிலும், சமூக வன்முறைகள் மீது வெறுப்புக் கொண்ட ஒரு மனநிலையை கூறிச்செல்கின்றது. அண்மையில் பிஞ்சுகளின் மீது வன்முறையை காட்டியவர்களை வெறுக்க செய்கின்றது. வித்தியாக்களையும், ஹரிஸ்ணவிகளையும், சோயாகளையும் நினைவுகூர்ந்து செல்கின்றது

'கனவிலும் நனவிலும் திடுக்கிட்டு விழித்து
எங்கே என் சின்னப்பெண் எனத் தவிக்கும்
ஈரவிழிகளின் உலகத்தில் நான்
இன்னும்
குறி கள் மட்டுமே உள்ளவர்
மனிதரென வாழ்கின்றனர்"

" தீராக்காதலியின் வினாக்கள்", "கனகியின் கொண்டைக்கு பூச்சூடும் அப்பையன்" சாதாரணர்களின் பெண் மீது கொண்ட காதலையும், காம இச்சையையும் பேசிசெல்ல, "அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்" எல்லாவற்றிலும் இருந்து மாறுபட்டு தாய் மீது கொண்ட பாசத்தையும் நினைவு தோய்தலையும் கவிதையாக கூறுகின்றது. கவிதை தொகுப்பின் பொதுவகைமைக்குள் அடக்கபடாததாலோ என்னவோ அம்மாவின் பட்சத்தையே தொகுப்பு பிரதியின் பெயராக்கியும் விட்டார்.

ஒரு கவிதை சொல்லி உருவாக்கப்படுகின்றான். அவனுடைய கவிதைகள் தாமாகவே அவனது நிரம்பி வழியும் இதயத்தில் இருந்து வெடித்துக் கிளம்புகின்றது. கவிதை சொல்லி குணேஸ்வரனின் மனம் உயர்ந்த சிந்தனைகளாலும், தீப் பொறி என மின்னும் கற்பனைகளின் பிரவாகமாகவும் காணப்படுகின்றது. கவிதைகள் என்பன ஒரு படைக்கப்பட்ட அழகு. அழகு சில சமயங்களில் வேதனைகளின் ஒப்பாரியாகவும், திகிலூட்டும் விவகாரத்தின் அழகாகவும் வந்து செல்கின்றது.

"கொடி சுற்றி பிறந்த பிள்ளை
குலத்துக்காகது என்றே
கோயிலெல்லாம் சுற்றிப்
பிணி நீக்கினார்
எங்கள் பாட்டி
வீட்டில் வளர்த்த மாட்டிற்கு பின்பக்கம் நாகபடம்
உடனே விற்றுவிடுங்கள் என்றார் அப்பா
உடம்பெல்லாம் நச்சுப் கொடி படரத் திரியும்
எங்கள் தனயன்மாரை
நாங்கள் யாரிடம் விற்றுத் தீர்ப்பது.?"

கவிதை செயன்முறையானது வளர்ச்சிபோக்கில் உள்ளதாகவும், பிரச்சினை களுக்கு தீர்வுகளை பிரயோகிக்கும் சிந்தனை காரணபடுத்தல்களையும் கொண்ட பரிசோதனை முயற்சியாக சில இடங்களில் கவிதை சொல்லி முயன்ற இடங்களில் ஒன்று "ஓளி" என்ற தலைப்பில் அமைந்த கவிதை.

"கொல்லைப் புறத்தால் கடவுள் வந்தார்
கையில் அணைந்து போன விளக்கு
ஒரு மின்மினிப் பூச்சியை
அடையாளமாக பிடித்திருந்தார்"

சீன இலக்கிய கொள்கையான one divided into two என்ற இணைமுரணியல் கொள்கையின் பரிகாரம் மெற்றாபிசிக்ஸ் (metaphysics) தொடர்புறும் தளம் பற்றி இக் கவிதையில் காணலாம். அமைந்து போன விளக்கும், மின்மினிப் பூச்சியும் இணைமுரணியல் என்று கருதினால் ஒளி என்பது மீபொருண்மையீயல் கருத்தாகும்.புதுயதார்த்தங்கள் (neorealism) முயற்சிக்கப்பட்ட ஒரு இடமாக இக் கவிதையைக் கொள்ளமுடியும். வாழ்த்துகள் குணேஸ்வரன்.

படைப்பாளிகளின் உலகம் மிக அகண்டது. அது வியாழன் கோளைவிட பருமனானது இந்த கலக்ஷியில். நான் ஒரு மூலையில், ஒரு புள்ளியை மட்டுமே தொட்டு செல்கின்றேன். பல இடங்களை தொட்டுச் செல்லும் ஆளுமையும், அறிவுப்போதாமையும், என்றுமே என்னிடம் உள்ளன. இருந்து கொண்டே இருக்கும் என்பது தேடல், வாசிப்பு பசி உள்ள அனைவரும் புரிந்து கொண்ட ஒன்றே! குறைபாடுகளை வைத்துக் கொண்டு "கவிதைப் படைப்பை" பற்றி பிடித்தபடி இருக்க நான் விரும்பவில்லை. இதனை கவிதை சொல்லி யின் கவிதை ஒன்றின் ஊடாக கூறுவது பொருத்தமாக இருக்கும்.

"எனக்கொரு ஊன்றுகோல் கிடைத்திருக்கின்றது
உடை யாருக்கு குடைபிடிக்கவும்
பக்கபாட்டு பாடவும்
என் முதிர்ச்சிக்கு முன்னரே
விசேடமாக கிடைத்த ஊன்றுகோல்
இதனை நன்றாக பற்றிக் கொள்ள வேண்டும்."

 "பறக்கும் தட்டு கிரகவாசிகளுக்கு
நல்ல விலைக்கு மூளை விற்றவர்கள்
செம்மறியாட்டினதும்
குரங்கினதும்
காண்டாமிருகத்தினதும்
மூளைகளை மாட்டிக் கொள்கின்றார்கள்
சித்தம் கலங்கி பேய்களாகின்றனர்"

சாதாரணமான நிகழ்வுகளில் உள்ள இயல்புத்தன்மையையும்(freaky ) இயல்பான விடயங்களில் ஒளிந்துள்ள ஆச்சரியமூட்டும் விஷயங்களையும் ஒருங்கிணைக்கும் ரசவாதம்(alchemy ) என பின்னூட்டம்(feedback) வழங்க தோன்றும் கவிதைகளாக பின்வருவனவற்றை கூறமுடியும்." அவளுக்கொரு புதுச் சைக்கிள் கிடைத்து இருக்கின்றது", செட்டிக்குளமும் பிரெஞ்சு மருத்துவனும்", "யாரோ போட்டு முடித்து தானமாக கிடைத்த இரவுச் சட்டை"
ஒரு பிரதியின் முக்கியத்துவம் என்பது பிரதியின் உள்ளே இருப்பதன் காரணங்களால் ஏற்படுத்தப்பட வேண்டும். பிரதிக்கு வெளியே யான காரணிகள் அந்த முக்கியத்துவத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதில் மிக்க நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இவ் கவிதை பிரதியில் காணப்படும் குறியீட்டுத் திறவுகோல்கள்(symbolic keys) பல மேலதிக தேடல்களை வழங்க முனைவதை மறுத்துவிட முடியாது. இலக்கிய வழிமுறையான விமர்சனம் பற்றி தெரிதா கூறும்போது
"வாசிப்பு விதிகள் வாசிக்கப்படும் குறிப்பான பிரதியால் தீர்மானிக்கப்படுகின்றது" என இவ் கூற்றிற்கு/ கட்டுப்பாட்டுக்கு 'அம்மாவிடம் சேகரமாயிருக்கும் முத்தங்கள்' கவிதை பிரதியும் விதிவிலக்கு ஆகவில்லை.  ஆனால் மாறுபட்ட ஒரு சிந்தனை போக்கில் இயங்கும் தற்கால உலகிற்கு பொருத்தமான முறையில் அறிவாதார முறையியல்(epistemological appreciation ) சார்ந்த மதிப்பீட்டுக்குள் கவிதை சொல்லியால் வரமுடியவில்லை. கருத்தியலில்(ideology ) முக்கியமான நோக்கம் நெறிசார்ந்த சிந்தனைகளின் ஊடாக மாற்றங்களை உண்டாக்குவதாகும். குணேஸ்வரனின் கவிதைகளில் கருத்தியலை பொது விடயங்களில் பிரயோகிக்கும் பொதுமை சிந்தனை(abstract thoughts ) வெளிப்படையாக கூறப்படாவிட்டாலும் உள்ளார்ந்த நிலையில் ஒரு 'அரசியலை' கொண்டே இயங்க முற்படுகின்றது.

கவிதை செயற்பாட்டினை பொறுத்தவரை புதிய வகையான செயற்பாடுகள் முயற்சிக்கப்படுவது மிகவும் அற்பமாகவே இருக்கின்றது. சொற் சிக்கனத்தோடும் ஒரு புள்ளியில் தொடங்கி இறுதி யை நோக்கி தெளிவாக நகர்ந்து ஒரு கண அதிர்ச்சியை மட்டும் உண்டாக்கிவிட்டுச் செல்லும் இன்றைய ஈழத்து கவிதைப்போக்கு சாதாரணமாக அனைவராலும் படைக்கப்படுகின்ற அழகாகவே உள்ளது. துவாரகன் என்னும் கவிஞன் கவிதை செயற்பாட்டில் அசாத்தியங்களை சாத்தியமாக்கும் புதுயதார்த்த படைப்பு முயற்சியில் ஈடுபடுவார் என்ற நம்பிக்கையை இப்பிரதி ஏற்படுத்துகின்றது. அவரது கவிதை செயற்பாடுகள் இன்னொரு பரிமாணம் கொண்டவையாக எதிர்காலத்தில் வெளிவர மேலும் சிறப்பு பெற பேரன்புமிக்க வாழ்த்துகள்.

தர்ஷன் அருளானந்தன்

Comments

Popular posts from this blog

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"