கல்வித் தொழிற்சாலைகள்

 நாம் கல்லூரிக்குச் செல்வது எதற்காக? பட்டப்படிப்பு ஏன்? வாசிப்பு எதற்காக? கற்பது எதற்காக? இவ்வினாக்களுக்கு நாமளித்த பதில்கள் முழு மனித இனத்தையும் அழிவின் விளிம்புக்கே இழுத்துச் சென்றுவிட்டன. அவை உருவாக்கிய கரையான்கள் எமது பரம்பரையை மட்டுமல்ல¸ இனி பிறக்கவிருக்கும் சிசுக்களின் எதிர்காலங்களையும் கூட அணு அணுவாக அரிக்கத் தொடங்கி விட்டன.


ஜோன் ஸ்டுவர்ட் மில் ‘யூடிலிடேரியனிஸ்ம்’ என்ற அவரது நூலில் தனி மனித நலன் சமூகப் பொது நலத்துடன் முரண்படும் போது அது சமூகத் தீமைகளுக்கு இட்டுச் செல்லும் என்றார். சுயநலம் என்பது ஒரு கொடிய நோய் என்பதையே அங்கு அவர் உணர்த்த நாடினார். ஏனெனில் சுயநலம் என்பது பரவி ஒரு சமூக நோயாக உருவெடுக்கும் போது அது சமூகக் கட்டமைப்பின் அத்திவாரத்தையே தாக்கி¸ நிலை குலையச் செய்து முழு சமூகக் கட்டிடத்தையே வீழ்த்த வல்லது என நியாயம் கற்பித்தார். மனித உள்ளத்தில் ஒற்றுமையையும்¸ பச்சாதாபத்தையும்¸ அன்பையும் வித்திடுவதையே தீர்வாக முன்வைத்தார். மேலும் கல்வி¸ சிந்தனை¸ நிறுவனங்கள் என்ற சாதனங்கள் அந்த இலக்கை நோக்கி நகர்த்தப்பட வேண்டும்¸ சமூக நலனை முதன்மையாகக் கருதும் சிறந்த மனிதர்களை உருவாக்குவதற்கு அவை பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் இதுவே ‘இன்பம்’ என்ற பிரபஞ்ச இலக்கிற்கு இட்டுச் செல்லும் எனவும் அவர் வாதிட்டார்.


எமது கல்வியமைப்பு நற்பிரஜைகளை உருவாக்குவதை இலக்காகக் கொள்ளவில்லை; தமது சிந்தனையாற்றலைப் பயன்படுத்தி தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கக் கூடிய சுதந்திர முடிவுகளை எடுக்கக் கூடிய பிரஜைகளை உருவாக்க அது தவறி விட்டது. மாறாக எமது தற்போதைய கல்வித் திட்டம் ஒரு குழந்தைக்கு இயல்பாகவுள்ள சிந்தனையாற்றலை வேரறுத்து அதற்குப் பகரமாக¸ பிள்ளையின் சிறு மூளைக்குள் ஒரே வார்ப்பில் வார்த்த தனது கருத்துக்களையும் சிந்தனைகளையும் பலவந்தமாகத் திணிக்கிறது. விளைவு! மனோ இச்சைக்கு அடிமைப்பட்டியங்கும்¸ சிந்திக்க மறந்த ஒரு ஜடமாக மனிதன் மாறுகிறான். முதலாளித்துவவாதிகளின் ஆதிக்க வலையின் எல்லைகளை மேலும் விஸ்தீரணப்படுத்த தேர்ச்சி பெற்ற ஊழியர்களையும்¸ மனித இயந்திரங்களையும்¸ அடிமைகளையும் உருவாக்குவதே எமது கல்வி நிறுவனங்களின் இலக்காகும். இதனை சாதிப்பதற்கு செல்வம்¸ புகழ்ச்சி¸ சுகபோகம் என்பவற்றின் மீதான இயல்பான பற்றை நீரூற்றி வளர்ப்பதில் மும்முரமாக எமது கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு வடிவமைக்கப்பட்ட நவீன மனிதனுக்கு மனித விழுமியங்கள் பற்றிய உணர்விருக்காது. அறியாமையாலும்¸ சுயநலத்தாலும் இயங்கும் இவன்¸ மனித அழிவிற்கு தன்னையறியாமலே ஒரு பங்காளியாகிறான். சாவு மணியை அடிக்க அவனுக்குத் தேவை மாத இறுதியில் ஒரு கொழுத்த பண முடிச்சு மட்டுமே. 


“...இன்றைய நுகர்வொழுங்கின் காரணமாக எமது வாழ்வுக்கு அவசியமான வளங்கள் அழிந்து கொண்டு வருகின்றன. மறுபுறம் இன்றைய நுகர்வொழுங்கானது சமத்துவமின்மை எமது சமூகங்களைப் பீடிப்பதற்கும் காரணமாகவுள்ளது.” ( UNDP 1998)


நவீன ரகக் கையடக்கத் தொலைபேசிகளுக்கும்¸ அதி உயர் ரக வாகனங்களுக்கும் உரிமை கொண்டாடவும்¸ செல்வச் செழிப்பில் நாம் உண்டு கழிக்கவும் உலகத்தில் ஒரு பகுதியையும்¸ அதன் மக்களையும் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 


இந்நிலையில் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுதான் என்ன? எம்மை மீண்டும் நல்ல மனிதர்களாக ஆக்க வல்ல¸ சுதந்திரமாக¸ கடமையுணர்வுடன் சிந்திக்கும் ஆற்றலுடைய நற்பிரஜைகளாக மாற்றும் சக்தியும் ஆற்றலும் ஒன்றிற்கு இருக்குமாகவிருந்தால் அது கல்விக்கு மட்டுமே. அப்படியானால் பாடசாலைகளும்¸ பல்கலைக்கழகங்களும்தான் இதற்குத் தீர்வா? அவை கல்வியைத்தானே கற்பிக்கின்றன!


கல்வித் தொழிற்சாலை


தரப்படுத்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து¸ பரீட்சை பெறுபேறுகளே எமது அறிவு வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரணியாக மாறிவிட்டது. அதிகப் புள்ளிகள் பெறுபவன் அறிவாளி எனவும் குறைவான புள்ளிகள் பெற்றவன் முட்டாள் எனவும் வகைப்படுத்தக் கற்றுக் கொண்டு விட்டோம். ஆனால் விடைத் தாளில் நாம் எழுதும் அந்த விஷயங்களுக்கும் புரிதலுக்கும் தொடர்புள்ளது என்று கூறி விட முடியாது. இருக்கலாம் அறவே இல்லாமலும் இருக்கலாம். இருந்த போதும் கூட மாணவன் அல்லது மாணவியின் வெற்றி அல்லது தோல்வி அவர்கள் அந்தக் குறிப்பிட்ட நாளில்¸ குறிப்பிட்ட நாழிகைக்குள் நினைவில் மீட்டி எழுதும் சில விடயங்களிலேயே தங்கியுள்ளது. அம்மாணவன் அல்லது மாணவி பரீட்சை நாளில் சுகவீனமுற்றிருந்தாலோ¸ தனது சக்திக்ப்பாற்பட்ட நிகழ்ச்சிகளால் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தாலோ அவையெதுவும் பரீட்சையைத் தள்ளிப் போடுவதற்கு போதுமான காரணங்களாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டா. அக்காரணங்கள் அரசின் கவனயீனத்தாலும்¸ புறக்கணிப்பாலும் உருவான காரணிகளாக இருந்தாலுமே கூட. இவ்வாறான நிர்ப்பந்தக்களுக்கும்¸ நியாயமற்ற கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் ஒரு பிள்ளை பரீட்சையை எழுதிய பிற்பாடுதான் வெற்றி¸ தோல்வி தீர்மானிக்கப்படுகிறது.


எமது பாடத்திட்டமும்¸ பரீட்சையொழுங்கும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகின்றன. விடைகளை எவ்வாறு பெறுவது என்றுதான் பெரும்பாலும் பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றன. மனனம் செய்யும் திறன் இந்த வகையில் ஓர் இன்றியமையாத தேவை. மாணவ மாணவிகள் சிறந்த பெறுபேறுகளுடன் பரீட்சைகளில் சித்தியடைவதுதான் இலக்கு என்பதால் அந்த இலக்கையொட்டியே அதன் நடவடிக்கைகள் அமைந்து விடுகின்றன. இதனால் கேள்வி கேட்பதற்கும்¸ சிந்திப்பதற்கும்¸ பாடத்தை விளங்குவதற்கும் மாணவர்கள் தூண்டப்படுவதில்லை¸ பெரும்பாலான ஆசிரியர்கள் இதற்காக சிரமப்படுவதுமில்லை. விளைவாக மாணவர்களின் சிந்தனை முடக்கப்படுகின்றது¸ படைப்பாற்றல் குன்றுகின்றது. ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றலற்ற¸ விமர்சனப் போக்கற்ற¸ ஆராய்ந்து கண்டுபிடிக்கும் திறனற்ற¸ சத்தியம் அசத்தியத்தைப் பிரித்துப் பார்க்கத் தெரியாத சொன்னதைச் செய்யும் சுப்பன் போலவே இன்றைய மாணவன் கல்லூரியிலிருந்து வெளியேறுகிறான். ஓரு காலத்தில் தான் பெற்ற ‘A’ பெறுபேற்றின் மூலம் அக்குறிப்பிட்ட பாடத்தில் அறிவாளியாகக் கருதப்பட்ட அதே மாணவன் கல்லூரியை விட்டு வெளியேறி¸ அந்தக் குறிப்பிட்ட பாடம் இனிமேலும் தனது வாழ்க்கைக்குத் தேவைப்படாது எனக் கருதியதும் தான் கற்ற விடயங்களை காலப்போக்கில் மறந்து விடுகிறான். மறப்பதை ஏன் படிப்பான்? 


மனித விருப்பங்கள்¸ ஆளுமைகள்¸ தேவைகள் பல்வேறுபட்டிருப்பதுதான் உண்மையாக இருந்த போதும் கூட எல்லா மாணவர்கள் மீதும் ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பாடங்களே திணிக்கப்படுகின்றன. ஒரு மாணவனுக்கு விவசாயத்தில் ஆர்வம் இருக்கும்¸ ஆனாலும் கூட அம்மாணவன் தனக்கு விருப்பமான அத்துறையைத் தெரிவு செய்து அதில் தன்னை விருத்தி செய்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அம்மாணவனிடம் எதிர்பார்க்கப்படுவது ஒன்று மட்டுமே. கல்லூரி சட்ட திட்டங்களுக்கு அவன் எவ்வித நிபந்தனையுமின்றி கட்டுப்பட்டு அடிபணிய வேண்டும். அவ்வாறு செய்ய மறுக்கும் பட்சத்தில் அம்மாணவன் ஒரு முரடனாகவோ¸ அடங்காப் பிடாரியாகவோ இனங்காணப்படுகிறான். குரங்கானாலும் மீனானாலும் யாருக்கு நன்றாக மரமேற வருமோ அவனே சாமர்த்தியசாலி என்ற தரப்படுத்தல் முறையை அடிப்படையாகக் கொண்டே எமது கல்லூரிகள் இயங்குகின்றன. 


எதிர்காலத் தலைமைகளாக வரவேண்டிய¸ சமூகத்தை வழிநடாத்த வேண்டிய எமது மாணவப் பிஞ்சுகளுக்குள் முத்துக்களாக ஒளிந்திருக்கும் அவர்களின் நிஜமான திறமைகளை இனங்கண்டு வெளிக்கொணர்வதற்கான போதிய வளங்கள் எமது கல்லூரிகளில் இல்லாததன் காரணமாக பல திறமையான மாணவர்கள் கூட கறிக்குதவாத ஏட்டுச்சுரைக்காய்களாக ஒதுக்கப்படுகின்றனர். ‘மடையன்’ என முத்திரை குத்தப்பட்ட மேதைகள்தான் எத்தனையோ?! 


நாமறிந்த கல்லூரிகளில் அதியுயர் மனிதப் பெறுமானங்களாகவும்¸ விழுமியங்களாகவும் கருதப்படுகின்ற பச்சாதாபம்¸ பரிவு¸ கருணை¸ வீரம்¸ அன்பு¸ நீதியுணர்வு என்பவற்றை கற்பிப்பதற்கான ஒரு ஆக்க பூர்வமான முறைமை இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை என்றே கூற வேண்டும். சிறந்த ஒழுக்க மாண்புகளைக் கற்பிக்க எமது பாடசாலைகள் என்ன வழி முறையைக் கையாளுகின்றன? இப்பண்புகளை அடிப்படையாகக் கொண்டு - பச்சாதாபம்¸ பரிவு¸ கருணை¸ வீரம்¸ அன்பு¸ நீதியுணர்வு - கட்டியெழுப்பப்படாத ஒரு குடும்பத்தின் அங்கத்தவர்கள் எவ்வாறு சுயநலமாகவும்¸ அநாகரீகமாகவும்¸ அநியாயமாகவும் நடந்து கொள்வார்களோ அவ்வாறுதான் அந்த சமூகமும் இருக்கும். அக்குடும்பம் எப்படி காலப்போக்கில் சிதைந்து¸ சின்னாபின்னமாகி பகைப் பிரிவுகளாக உடைந்து போகுமோ அதே போன்றே அச்சமூகமும் உடைந்து¸ சின்னாபின்னமாகி அழிந்து போகும்.


அறியாமையை அறியாமை


“சின்னஞ் சிறு பூச்சட்டிகளுக்குள் வளரும் இளஞ்செடிகளைப் போல எம்மால் வளரவோ¸ முதிர்ச்சியடையவோ முடியாது. தங்கி வாழ்தலுக்கு நாம் அடிமையாகி விட்டோம்: நாம் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதனைச் சொல்ல ஆசிரியர்கள் வரும் வரை காத்திருக்கிறோம்¸ ஆனால் அவர்கள் வருவதேயில்லை. பாலங்கள் இடிந்து விழுந்து கொண்டுதானிருக்கின்றன¸ ஆண்களும்¸ பெண்களும் வீதியோரங்களில் உறங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள்¸ வங்கிகள் ஏமாற்றிக் கொண்டுதானிருக்கின்றன¸ குடும்பங்கள் ஒருவருக்கொருவர் வஞ்சித்துக் கொள்கின்றன¸ அரசுகள் பொய்யுரைப்பதை ஒரு கொள்கையாகவே கொண்டுள்ளன – எங்கும் ஊழல்¸ அநாகரீகம்¸ நோய். பரவி விட்டது. ஆனால் இதற்கான தீர்வு இன்னும் எந்தக் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் வரவில்லை” (John Taylor Gatto, Dumbing us down)


காரணம் இருந்தால் காரியம் இருந்தாக வேண்டும். எனவே அறிவின் காரணமாக செயல் காரியமாக வேண்டும். இன்னும் தெளிவாகச் சொன்னால் அறிவின் விளைவாக செயல் உண்டாக வேண்டும். ஏனெனில் அறிவு என்பது ஒரு மனிதனுக்குள் ஒழிந்து கிடக்கும் காலம் வரைக்கும் அதற்கு எந்தப் பெறுமானமுமில்லை. அது அங்கிருந்து வெளியேறி சமூகத்தின் பல்வேறு கலைகளிலும் ஊடுருவி மனிதனுக்கு நன்மை பயக்கும் வகையில் விளைவுகளாகத் தோற்றம் பெறுவதனூடாகவே அதற்குரிய பெறுமானத்தை ஈட்கிறது. ஆனால் அறிவின் ஊற்றுக்கண்களாக விளங்கும் எமது கல்லூரிகளே இதனைக் கண்டு கொள்ளாததுதான் ஆச்சரியமான விடயம். எமது மாணவர்கள் மீது அறிவு திணிக்கப்படுவதன் நோக்கம் அது செயல்களாக உருப்பெற வேண்டுமென்பதல்ல ஆனால் அவர்கள் பரீட்சையில் சித்தி பெற வேண்டுமென்பதற்காகவாகும். அம்மாணவன் தனக்கேயுரிய ஒரு கருத்தியலுலகில் நீந்தியவாறு வெறும் கருத்துச் சொல்லலுக்கும்¸ விதண்டாவாதங்களுக்கும் தன்னை மட்டுப்படுத்திக் கொள்கிறான். பேச்சு வளம் நிறைந்த செயல் வளம் குறைந்த ஒரு அங்கவீனனாகவே அவன் வாழ்கிறான்.


நாம் வாழும் உலகம் ஒரு கருத்தியலுலகல்ல¸ இது ஒரு நடைமுறை சார் உலகம் என்பதுதான் யதார்த்தம். இவ்வுலகில் பிரச்சினைகளும்¸ சிக்கல்களும் உண்மை. இவற்றை நடைமுறைத் தீர்வுகளினூடக மட்டுமே தீர்க்க முடியும் என்பதுவே உண்மை. 


ஆனால்¸ ஒரு மாணவன் கல்லூரியிலிருக்கும் காலம் வரையிலும் வாழ்க்கையின் யதார்த்தங்களுக்கும் அவனுக்குமிடையில் ஒரு திரையிடப்படுகிறது. சிறைக்கைதிகள் எவ்வாறு நடைமுறை உலகை விட்டும் ஒதுக்கப்படுகின்றனரோ அதே போன்று மாணவர்களும் தமது பொன்னான இளமை நாட்களையும்¸ வருடங்களையும் வாழ்க்கையின் யதார்த்தபூர்வமான பிரச்சினைகள்¸ சவால்கள் என்பவற்றிலிருந்து ஒதுங்கி கல்லூரியின் நான்கு சுவர்களுக்குள் புத்தகப் பூச்சிகளாகக் கழிக்கின்றனர்.


இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் பேராசிரியர் ஹரினி அமரசூரிய பின்வருமாறு கூறுகிறார். “அறிவு தேடல் என்பது பொருளாதார இலாபத்தை முன்னிட்டு நாம் மேற்கொள்ள வேண்டிய ஒரு செயல் மட்டுமே என்ற கருத்து மேற்படிப்பைத் தொடரும் எமது மாணவர்கள் மத்தியில் நிலை கொண்டுவிட்ட ஒரு கருத்தாகும். தனிப்பட்ட முறையில் கல்வியென்பது ஒரு வேலைக்கான சான்றிதழாகும்¸ தேசிய மட்டத்தில் அது தேசிய பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான ஒரு சாதனமாகவே கணிக்கப்படுகிறது... ஆகையால் இன்று; எமது பல்கலைக்கழகங்களினதும்¸ மேற்படிப்புக்கான நிறுவனங்களினதும் பங்களிப்பு¸ ‘முதன்மையான பொருளாதார இலக்குகள்’ என்ற ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடக்கப்பட்டு விட்டது.”


இருண்ட எதிர்காலம்


கல்வியின் இலக்கு நற்பிரஜைகளை அல்லது சிறந்த மனிதர்களை உருவாக்குவதாகும்; தமது தனிப்பட்ட நலன்கள் சமூக நலன்களுடன் முரண்படாது¸ சமூக நலன்களைக் கருத்தில் கொண்டு¸ சிந்தித்துத் தூய்மையாக செயலாற்றக் கூடிய உயர்ந்த ஒழுக்க மாண்புகளைக் கொண்டவர்களே நற்பிரஜைகள் அல்லது சிறந்த மனிதர்கள் எனப்படுகின்றனர். இந்த அடிப்படையில் உருவான ஒரு கல்விமான் சுதந்திரமாகச் சிந்திக்கவும்¸ கேள்வி கேட்கவும்¸ ஆராய்ந்து விமர்சிக்கவும் மட்டுமல்ல அன்பு¸ பச்சாதாபம்¸ கருணை¸ நீதியுணர்வு என்ற உணர்வுகளைத் தனது சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அறிந்திருப்பான். இதன் காரணமாக அம்மனிதன் சமூகப் பொது இன்பத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய செயல்களில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்து கொள்வான். மாறாக சமூக இன்பத்தைப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பதற்கே இவன் உழைப்பான்¸ பாடுபடுவான்.


ஆனால் எமது கல்வித் திட்டம் பொருளாதாரத்தை பேணிப் பாதுகாத்து வளர்ப்பதிலேயே குறியாக உள்ளது. முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு தீனி போட்டு வளர்க்கத் தேர்ச்சி பெற்ற கொழுத்த ஊழியர்களை வளங்களாக வாரி வழங்குவதிலேயே குறியாக உள்ளது. கல்லூரி என்ற நிறுவனத்திலிருந்து வெளியேறும் நவீன கால ரோபோ மனிதனின் உள்ளத்தில் ஒரு விஷயம் மட்டும் காதலியின் அழகிய முகம் போல் ஆழமாகப் பதிந்தும் படர்ந்தும் விட்டது. “பணம்”.


கல்வித் தொழிற்சாலைகள் - By : Farweez Imamudeen

Comments

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"