"பருத்தித்துறை துறைமுகமும் நல்லிணக்கத்தை செய்கின்றது...?"


இப்போது பழைய 'ஹோ' என்ற கடலின் இரைச்சல் சத்தம் இல்லை. அந்தகார வெளியை கிழித்துக் கொண்டு பயமூட்டும் காற்றசைப்பு சத்தம் மட்டும் கேட்கின்றது. இமைக்கும் அடங்க மறுக்கும் கறுப்பு சூனியத்தில் மெல்லென வருகின்றது ஆழ நீலக்கடல். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்வையை ஓட்டுகின்றேன்.

பொட்டுப் பொட்டாய் உடைந்த சுண்ணாம்புக்கற்கள்,  உடைந்த கூரையற்ற சிறிய கட்டிடம். அலை களின் வீச்சில் ஈரலித்த கற்சுவர்கள் பெரும் பாகங்களாய் விழுந்துள்ளன. முள்ளுக்கம்பி வேலிக்குள் அடைக்கப் பட்டிருந்தது கட்டடம்.  தனக்கும் விடுதலை வேண்டி அச்சிறு கட்டிடம்  "துறைமுகங்கள் அதிகாரசபை" என்ற சுலோகம் ஒன்றை தாங்கியிருந்து. உப்புக்காற்றில் குளிர்மையை  இழந்து பழுப்பும், பச்சையுமான பனைமரத்தூண்கள் தாங்கியிருந்த மூன்று வட்டக் கொட்டில்கள். அழகாக நேர்த்தியாக இருக்கைகள் வட்டமாக சப்பு பலகைகளை கொண்டு அடிக்கப்பட்டு இருந்தது. குச்சி அடைப்பு கூரையின் கீழே நான்கு ஐந்து இளைஞர்கள் 'பொல் ரொட்டியும் கட்டைச் சம்பலும்' சாப்பிட்டு கொண்டிருந்தனர். ஏசி பஸ்களில் வந்து இறங்கிய பெண்களையும், ஆண்களையும் பார்த்து ஏதோ பேசித் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.பஸ்களில் இருந்து இறங்கியவர்கள் ஏதோ அற்புதமான உலகத்திற்கு வந்ததாக நினைத்துக்கொண்டு 'செல்பீகள்' எடுத்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலான பெண்கள் இறுக்கமான உடைகளை அணிந்து இருந்தனர். ஆண்கள் அரைக்காற்சட்டையும், கறுப்பு கண்ணாடிகளையும் அணிந்திருந்தனர். அவர்கள் யௌவனத்தின் எழிற்காட்சிகளை இங்குதான் கண்டவர்கள் போல  துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தார்கள் அந்த துள்ளலில் காமம் தெரிந்தது- தெய்வேந்திர முனையில் இருந்து வந்து இருந்தவர்களாக இருக்கும் என நினைத்துகொண்டேன். தெற்கு முனையில் இருந்து வந்து வடக்கு முனையில் சீமந்தம் செய்வதும் ஒரு வகையான நல்லிணக்கம் தானே. ஒரு சீமேந்து மேடு அந்த இடத்திற்கு மக்களிற்கு நன்றாக தெரிந்து இருந்த பருத்தித்துறை முனையை  இவ்விடம் தான் என பிரகடனம் செய்யும் உலகவரைபடம் ஒன்றை உலகத்திற்கே புதிதாக தெரிய வைத்துக் கொண்டிருந்தது. அவ்விடம் இப்போது பச்சை சீருடைகளினால் புவியியல் சிறப்பை பெற்று இருந்து போன்று இருந்தது. இனிமேல் புவியியல் படிப்பவர்கள் உண்மையான பருத்தித்துறை முனையை குறிப்பதற்கு அவசியம் இருக்காது என்பதாக நினைத்துக் கொண்டேன்.

வரலாறு விசித்திரமான ஒன்று அது சில  சந்தர்பங்களில் நம்பிக்கைகளை சிதறடித்து விடும். சிலவேளைகளில் எதிர்பாராத நிகழ்சிகளை உருவாக்கி அமைக்கும். வரலாற்றின் வேடிக்கை நம் புரிதலுக்கும் , அறி வுக்கும் சிக்காத ஒன்றாக ஆகுவது இப்படியான சந்தர்ப்பங்களில் தான்.

இராணுவத்தினரால் நடாத்தப்படும் "கன்ரீன்" கொத்து ரொட்டிச் சத்தம் கடலின் காற்றசைப்பின் ஓசையையும் மீறி ஒலி எழுப்பிக்கொண்டிருந்தது. நான்கு பச்சைசீருடை அணிந்த இராணுவத்தினரும், நமது ஊர் பொடியளும் இருக்கைகளில் இருந்து சிகரெட் புகையை வளையம் வளையமாக விட்டத்திற்கு ஊதிக்கொண்டிருந்தார்கள். நீண்ட கால வெறுமைக்கு பின் கடல் தனது மூச்சை நிறுத்திவிடுவதற்கான துயரம் போல் அது இருந்தது.

கறுப்பு தங்கம் போல் கடலில் நீச்சலடித்து கொண்டிருந்த பெருந்தன்மை மிக்க, யாழ் குடாவிற்கே உணவளித்த அந்த இரண்டு  பாஜ் களும் நின்ற இடத்தை ' லியனகே' , 'பெர்ணாந்து', 'விக்கிரமசிங்கே ' , ' குமாரகே' என்ற பெயர்கள் பொறிக்கப்பட்ட சிங்க கொடி பறக்க விடப்பட்ட பெரிய மீன்பிடி இழுவைப்படகுகள் ஆக்கிரமித்து இருந்தன. இன்னும் பெயர் கண்ணுக்கு புலப்படாத இழுவை படகுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணக்கூடியதாக இருந்தது. துறைமுகத்தின் சீமேந்து தூண்களில் கட்டப்பட்டிருந்த அப் பெரிய படகுகளை வீச்சம் மிக்க கடல் அலைகளின் கரங்களால் அசைத்துக் கொண்டிருந்தது.  அது என்றுமே எங்களை அசைக்க முடியாது என்று மார்தட்டி ஆக்கிரமித்தவர்களிற்கு பல வரலாற்று கதைகளை மௌனமாக கூறிக்கொண்டு இருப்பதாக பட்டது.

நீலம் வேடிக்கை மிக்கது பல வேளைகளில்  கொடுத்தும் சில வேளைகளில் பறித்தும் உள்ளது. அதுவே சக்தி, அதுவே பொருள் என்று வாழ்ந்த கடலவ மக்களின் ஆத்மா பிரிக்கப்பட்டு உருக்குலைந்த கட்டுமரம் போல தூரத்தில்  கடல் நீரில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது. தூசி படிந்த உடலங்களோடு வரிசையாக நின்ற கூலர் வண்டிகளிலில் எங்கள் வளங்களை ஏற்றிக் கொண்டு போகின்றார்கள். சில அரைக்காற்சட்டை சிறுவர்கள் அந்த "கொன்வேயை" ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தார்கள் . அவர்கள் அனைவரும் ஆமிக்கடை பொல் ரொட்டி சாப்பிடுவதற்கு வந்தவர் களாக இருக்கக் கூடும். கூலர் வண்டிகளில் பெரிய பெரிய மீன்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.கடலின் மந்தமான இரைச்சல் ஓசையின் இடையே ஏச்சுக்களும், கூப்பாடுகளும், கெஞ்சல்களும், அதட்டல்களும் பெரும்பான்மை மொழியிலேயே கேட்டுக் கொண்டிருந்தன. பாணந்துறையில் நிற்கின்றேனோ...? என்னை நான் கிள்ளிப் பார்த்து க் கொண்டேன்.

சிறு மூச்சுத் திணறல், விசும்பல் அவ்வளவு தான். கண்களில் கண்ணீர் நிரம்பியது. நினைவுகளின் கசையடிகளை நான் மட்டும் எப்படி ஏற்றுக் கொள்கிறேன். நான் நிர்வாணமாக நிற்பதாய் உணர்ந்தேன். என் கழுத்தைச் சுற்றி யாரோ கயிற்றால் இறுக்குவதைப் போன்று இருந்தது. வலுமிக்க இலட்சியங்களும், மனித குலத்தின் மனிதாபிமானமும் உரித்து எறியப்பட்ட ஒரு தேசத்தில் அல்லவா நான் நிற்கின்றேன்...!  மரணம் அடைந்த மூளையின் திசுக்களை மறந்து அங்கொன்றும் இங்கு ஒன்றுமாய் மங்கலாக என் நினைவுகளில் ஒன்பது வயதுகளில்  கண்ட பருத்தித்துறை துறைமுகத்தின் கணங்களிற்கு செல்கின்றேன்.

தூரத்தில் நிற்கும் பெரிய கப்பல், அதற்கு அருகருகே மாறிமாறி சென்று வரும் இரண்டு தட்டையான "பாஜ்கள்" அவற்றில் வரும் மூட்டைகளை சீமேந்து மேடையிலே அடுக்கும் தொழிலாளிகள், வரிசையாக நிற்கும் லொறிகள்,  பாஜ் களில் இருந்து கூட்டி தட்டப்படும் 'கோறா' அரிசியை உண்ணவரும் மீன்களை பிடிப்பதற்கு காத்திருக்கும் தூண்டில் இளைஞர்கள், மீன் விற்கும் பெண்களின் பறிகள், அவர்கள் ஏலம் கூறும் "தீர்பாய் இருநூறு" தீர்ப்பாய் முன்னூறு " "ஒருதரம்" "இரண்டுதரம்" கத்தல்களும், மீன்வண்டிக் காறர்களின் பேரம் பேசும் கூச்சல்களும், சின்னதான தேனீர்கடை, வியர்வை வழிந்தோடும் மனிதர்கள், பீடி புகைத்துக் கொண்டிருக்கும் லொறிச் சாரதிகள், அவ்விடத்தில் இருந்து பார்த்தால் ஹாட்லிக் கல்லூரியை காணமுடியும். (இப்போது இராணுவ முகாம் இருக்கின்றது மறைத்துக் கொண்டு),சவுக்கு மரக்கன்றுகளை நாட்டி ஆழகாக இருந்து மேற்கு பக்கம். இவை தான் பருத்தி துறை துறைமுகமாக எனது பத்தாவது வயதில் சசி அண்ணையால் கூட்டிக் கொண்டு போய் காட்டப்பட்டது. மெலிதான நினைவுகளோடு அன்று கண்ட துறை முகம் இன்று இருபத்து ஐந்து வருடங்களில் பின்னர் எங்களிற்குரிய அடையாளங்களை இழந்ததாக காண்கின்றேன்.

ஏதோ ஒன்றை நேரடியாக நினைவுக்கு கொண்டுவர முடியாது இருக்கின்றது. அப்போதும் இது போலத்தான் இருந்தது. அடிமைகளிற்கான உணவுகளை அளந்து அளந்து கொண்டு வந்து இங்கு தான் இறக்கிச் சென்றார்கள். சங்க கடைகளில் கால் கடுக்க கியூவில் நின்று வாங்கிய "  கோறா அரிசியையும்",அவியாத பருப்பையும், மண்ணெண்ணெய் யையும் கொழும்பு என்ற நாட்டில் இருந்து ஆமிக்காறர்கள் யாழ்ப்பாணம்  என்னும் நாட்டிற்கு அனுப்புவதாகவே எனக்குள் எண்ணியிருந்தேன்.

கனத்த இதயத்துடன் மனதுள் கூறிக் கொள்ளுகின்றேன். "துறைமுகத்தின் சீமேந்து கற்களிற்கு தானும் வரலாற்றின் சிறிய பகுதி தெரிந்து இருக்கும். ஏனெனில் அவையும் எதிர் கொள்ளுகின்ற அடையாள மாற்றத்தை ஏற்கனவே கோறா அரிசியாகவும்,வேகாத பருப்பாகவும், உட்கொண்டு இருந்தன என்னைப்போலவே..... அந்த உணவு தந்த போசணை யில் இன்று நான் நல்லிணக்கம் பேசுவது போல பருத்தித்துறை துறைமுகமும் நல்லிணக்கத்தை சிங்களம் மட்டும்  பேசி கேரள கஞ்சாவும், பாலியல் மாத்திரைகளையும் பெரிய பெரிய மீனுக்குள் வைத்துக்  கடத்துகின்றது தனது பெயரை பருத்தித்துறை முனை என்று பெயர் மாற்றிக் கொண்டு."


#தர்ஷன் அருளானந்தன்#

Comments

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"