மனிதர்கள் சந்தோசமாக வாழ எது தேவையென்று சிந்தித்துப் பார் ."- வசந்தசீலனின் " மூன்றாம் விதி" குறும்படத்தை முன்வைத்து


"மனிதன் ஒரு கற்கும் மிருகம் நாம் தூண்ட வேண்டியதில்லை" என்பார் ஜோன் ஹோல்ட். தன்னெழுச்சியான கற்கும் விருப்பம் குறித்துப் பேசுவார் பெர்ட்ரன்ட் ரஸ்ஸல் . கற்பதற்கு ஒரு உயிரியல் பரிணாமம் உண்டு. தனது தேவைகளிற்கும் புற உலக எதார்த்தங்களிற்குமான இடைவெளியை மனிதன் தன்னெழுச்சியான கற்றலின் மூலம் நிரப்பிக் கொள்வான். மாறாக அவன் மீது விருப்புகள் திணிக்கப்படும் போது கல்வி பாரிய சுமையாக்கப்படுகின்றது. தேர்வுகள், மதிப்பீடுகள் போன்றவற்றின் மூலம் அவனை கற்றலின்பால் தள்ள வேண்டி இருப்பது இன்றைய உலக ஒத்தோடித்தனமாகவே உள்ளது. சாதாரண பாமர குடும்பம் முதல் படித்த மேட்டுக் குடியினர் வரை தமது குழந்தைகளை மதிப்பெண்களை நோக்கி விரட்டிக் கொண்டே இருக்கின்றனர். சமூக அந்தஸ்து என்ற போலி முகமூடியை அணிந்து மனிதம் சார்ந்த எண்ணக் கருக்களை, தன்னார்வ முயற்சிகளை குழந்தைகளின் மனதில் இருந்து ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விடுகின்றனர். இன்றைய கற்றல் செயல்பாடுகளை மாற்றுக் கல்வி சிந்தனையாளர்கள் முற்றாக எதிர்க்கின்றார்கள். கற்றல் சார்ந்த ஜனநாயக உரிமை பறிக்கப்டுகின்றதை அறிந்தே ஆசிரியர்கள் சிலவற்றை குற்றமாக குழந்தைகளிடையே இனம் கண்டு / வரையறை செய்து உடல், உள தண்டனைகளை வழங்குகின்றார்கள். இவ் நிகழ்கால செயற்பாடுகள் குழந்தைகள் உடல், உள வளர்ச்சியை மேலும் சிக்கல் நிறைந்த தன்மைகுள் தள்ளிவிடுகின்றது. மூன்றாம் உலக நாடுகளின் கல்வி செயல்பாடுகளை மேலும் மோசமடைய செய்கின்றது.

மேற்குறிப்பிட்ட மாற்றுக் கல்வி முறைமை பற்றிய சிந்தனையின் ஒரு வடிவமே 'வசந்தசீலனின்' அயராத உழைப்பின் மூலமாக உருவாகிய "மூன்றாம் விதி" குறும்பட படைப்பு. அண்மை காலத்தில் தன் முனைப்போடு ஈழத்து சினிமாவில் எந்த விதமான இலாப நோக்கமற்று தங்களின் சொந்த செலவில் படைப்புகளை உருவாக்கும் கலைஞர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அந்த வகையில் வசந்தசீலன் ஜனரஞ்சகமான முயற்சியில்  கல்வி பிரயோக முறைகள் ஒரு சமூகத்தை எவ்வாறு செயற்பட தூண்டுகின்றது என்பதை காட்சிகளின் ஊடாக மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து இருக்கின்றார். அண்மையில் ஈழ சினிமா படைப்புகளில் குழந்தைகளின் உளவியலை அழகாக வெளிக்கொண்டு வந்த இரண்டாவது படைப்பு இது எனலாம். முதலாவது தபின் (தங்கராஜா பிரபாகரன்) இயக்கத்தில் வந்திருந்த "கிளிக்".   வறுமையின் பிடியில் வாழத்துடிக்கும் ஒரு பாடசாலை சிறுமியின் உள்ளார்ந்த மனவோட்டங்களை அழகாக காட்சியமைத்து இருந்தார். இரண்டாவதாக அதிக சமூக அக்கறையோடு வெளிவந்திருக்கின்றது "மூன்றாம் விதி". ( மொத்தமாக ஈழத்தில் வெளிவந்த குறும்படங்கள் அனைத்தையும் நான் பார்த்து இருக்க வில்லை. வேறு இப்படி படைப்புகள் வந்து இருந்தால் தயவு செய்து பிரேரியுங்கள்).

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் ஒரு பாடசாலை சிறுவனின் மன உளைச்சலை,  நிராசைகளின் உளவியலை சாதாரணமாக அனைவருமே புரிந்து கொள்வர். குறும்பட படைப்பின் ஆரம்பமே எதோ ஒரு விபரீதம் நடைபெற போகின்றது என்பதை கட்டியம் கூறியது போல என்னளவில் தோன்றியது. மையக் கருத்தோட்டத்தை இலகுவாக புரிந்து கொள்ள கூடிய யதார்த்தமான அந்த குடும்ப அங்கத்தவர்களின் பத்திர பொருத்தம், நடிப்பு மிகவும் அழகே..!
ஒரு பாடசாலை செல்லும் சிறுவன் ஒரு நாளில் எதிர்நோக்கும் மனசிதைவுகளை பல்வேறு நபர்கள் மூலமாக இயக்குனர் காட்சிப்படுத்தி இருக்கின்றார். இங்கு சிறுவனால் எதிர்நோக்கப்படும் மனவிகாரங்களைக் கொண்ட வயது வந்த மனித பாத்திரங்களின் மனநிலை ஒரே வகையான பாணியில் சலிப்பூட்டவும் தவறவில்லை.  சிறுவனின் தாய், தந்தை, தங்கை, தந்தையின் நண்பர், வகுப்பாசிரியை, ஆங்கில பாட ஆசிரியர் போன்ற கதாபாத்திரங்கள் ஒரே வகையமைப்பில் கட்டமைக்கப்பட்டிருந்தன.இலகுவாக உய்த்து உணரக்கூடிய, அல்லது நாம் அனுபவத்தால் உணர்ந்த செயல்களே காட்சியமைப்பை ஆதிக்கம் செலுத்தி செல்கின்றது. "மாற்று சிந்தனையாளராக" அறிமுகப்படுத்தப்பட்ட " நல்ல ஆசிரியர் " வருகை படைப்பை ஒரு செயற்கை தன்மைக்குள்   கொண்டுவந்து விட்டதுவோ என்ற வினாவை எனக்குள் ஏற்படுத்தி சென்றது. காட்சி உத்தி, இசை, என்பனவற்றில் படக்குழுவினர் பெற்றிபெற்றே உள்ளனர். மன உளைச்சலுக்குள் வலிந்து தள்ளப்படுகின்ற குழந்தைகள் எப்படியான வன்முறை உத்திகளின் ஊடாக தங்களை நிலைநிறுத்தி கொள்ள முற்படுகின்றனர் என்பது படத்தின் உச்சகட்டமாகவும், சாதாரண ரசிகர்களிற்கு எதிர்பாராத திருப்பு முனையாகவும் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் வசந்தசீலன். இறுதியில் திருப்ப திரும்ப கூறப்படும் நாடக பாணியிலான வசனநடை அற்புதம் பல கேள்விகளை சமூகத்தை கேட்கின்றது.

"மன்னா எதை வென்றாய் ?

ஏய் அசோக மன்னா ? இந்தப் போரின் மூலம் எதை நீ வென்றாய் ?

மாபெரும் நாட்டையா ? மங்காத புகழையா ?

அழியாத செல்வத்தினையா ?

இல்லை இல்லவே இல்லை . நீ வென்றது பிணங்களை வெறும் பிணங்களை .

உன் போர் வெறியினால் அயல் நாடு பிடிக்கும் ஆசையினால் பிற நாடுகளில் வாழும் மக்கள் மட்டுமல்ல . உனது மக்களும் தான் வேதனைகளை அனுபவித்தனர்.

எத்தனை அன்னையர் தம் அருமை மக்களை இழந்தனர்.எத்தனை விதவைகள் . எத்தனை அனாதைகள் .

இவையெல்லாம் உன் தனியொருவனின் புகழ் பெரும் சுயநல வெறியினால் ...
இது தேவையோ என சிந்தித்துப் பார் .
 நன்றாக சிந்தித்துப் பார் .
மனிதர்கள் சந்தோசமாக வாழ எது தேவையென்று  சிந்தித்துப் பார் ."

இலங்கையின் கல்விமுறையே இளைய தலைமுறையின் நடத்தை பிறழ்வுகளிற்கு காரணமாகிவிடுகின்றது. ஆசிரியர்களின் மனோநிலை, அவர்கள் சார்ந்த தேவைகள், அழுத்தங்கள் , சுமைகள், அவர்களையும் மன உளைச்சல் கொண்டவர்களாக தண்டனை வழங்கும் விம்பங்களாக இயக்குனர் காட்டிச் சென்றமை வரவேற்பிற்குரியதே...! இருந்தும் "நல்லஆசிரியர்" மூலமாக ஆசிரிய பண்புகளை வெளிக்கொண்டு வருவதில் சற்று பின்னடைவு தான் ஏற்பட்டு இருக்கின்றது. மிகவும் இயல்பான காட்சிக் கோர்வைகள். வகுப்பாசிரியையின் உளபாங்கும், ஆங்கில ஆசிரியரின் கண்டிப்பும் இயல்பிற்கு சற்று அதிகமாகவே இருந்து இருக்கின்றது என்ற ஐயப்பாடு ஏற்பட்டு இருந்தது. இன்றைய பாடசாலைகளில் அனேகமாக தண்டனைகள் வழங்கப்படுவது குறைவாகவே இருக்கின்றது. பெரும்பாலும் மனரீதியாக மாணவர்களை துன்புறுத்தும் செயற்பாடுகளையே அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இருந்த போதிலும் முயற்சிக்கு மிக்க பாராட்டுக்கள். குறைவான வளங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டு நிறைவான ஒரு படைப்பை தனது தனிப்பட்ட சொந்த முயற்சியால் வெளிப்படுத்தி இருக்கின்றார் வசந்தசீலன்.  சிறுவனின் பாத்திர தெரிவு மிக கச்சிதமாக பொருந்தியிருக்கின்றது. சிறுவனின்  இயல்பான நடிப்பு வியந்து பாராட்டத்தக்கது.

இந்தக் குறும்படம் மிகவும் முக்கியமானது. வன்முறை எப்படியெல்லாமோ உருவாகும் . ஸ்கொலர்ஷிப்பிலிருந்து பள்ளிக் கூடம் வரை எப்படி அதிகாரம் இயங்குகிறது . போலியான தமிழ் சமூக கல்வி பற்றிய கொடும் மன நிலை ஆகியவற்றை இயல்பாக கொண்டு வந்திருக்கின்றார் இயக்குனர். பாடசாலை கல்வி முறைமை கொண்டிருக்கின்ற அபத்தங்களை , வெறும் மதிப்பெண்களைக் கொண்டு திறமைகளை அளவிடும் தன்மையை கேள்விக்குட்படுத்திய " மூன்றாம் விதி" தன் மையக்கருவில் இருந்து சில விலகல்களைக் கொண்டிருந்தாலும் சமூக விழிப்புணர்வு சார்ந்த ரீதியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி மனதில் அழுத்தமான அதிர்வை ஏற்படுத்தி சென்று இருக்கின்றது. குழந்தைகள் மீது வன் திணிப்புக்களை மேற்கொள்கின்ற தமிழ் ஈழ குடும்பங்கள் நிச்சயமாக பார்க்க வேண்டிய குறும் படம். சமூகத்திற்கு இயக்குனரால் இன்னும் நிறைய பங்களிப்புக்களை படைப்பு ரீதியாக வழங்க முடியும் என்ற எதிர்பார்ப்பை தனது முதல் முயற்சியிலேயே நிதர்சனமாக்கி இருக்கின்றார்.

"சீலனின்  திறன் மிகுந்த படைப்பு எந்திரம் நன்றாகவும் வேகமாகவும் வேலை செய்ய வாழ்த்துக்கள். ...!"

#தர்ஷன் அருளானந்தன்#

Comments

  1. தங்களது ஆழமான சிந்திக்கத் தூண்டும் விமர்சனத்திற்கு நன்றி சேர்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"