சந்திரா ரவீந்திரன் படைப்புக்கள்




இலக்கியப் படைப்புக்கள் என்னும் அழகான அறிவின் உயர்வான கவர்ச்சிகள் மனதிடத்துடன் உள்ள ஒருவருக்கே வெளிப்படுகின்றன. அதிலும் ஒரு பெண், தான் பெண்ணான பிறந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவும் பாரபட்சமான கருத்துக்களையும்,  எண்ணிலடங்கா தடைகளையும் எதிர்நோக்க வேண்டிய நிலையில் இருந்தும் கடினமான கணக்குகளை அறிந்து கொண்டு அந்த கடினமான கணக்குகளில் அறியப்பட்ட தடைகளையும் கடந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றார் சந்திரா ரவீந்திரன் அவர்கள். சந்தேகமே இல்லாமல் பெண்ணுக்கே உள்ள உன்னதமான மனோதிடமும், அசாதாரணமான திறமையும் அவரது சிறுகதைகள், குறுநாவல், கவிதைகள், உரையாடல்களில் வெளிப்படுத்த பட்டுக்கொண்டிருக்கின்றன.
தனது படைப்பு இலக்கியத்தில் வெளிப்படையான பேசு பொருளாக தாயக வாழ்க்கையின் நினைவு அனுபவங்களை,  ஈழத்தின் துயரம் நிறைந்த யுத்த அவலங்களிற்கு ஊடாக தனது சிறுகதைகளில் வெளிப்படுத்துகின்றார். மிதமிஞ்சிய புனைவுகள் அற்ற யதார்த்தமான சூழலுக்குள் வாசகனை அழைத்துச் செல்லும் எழுத்துக்கள் "காலச்சுவடு" சஞ்சிகையில் 2013 நவம்பர் வெளிவந்த "கடவுளின் உரை" என்ற சிறுகதை மூலமாக எனது வயது வந்த வாசிப்பு சூழலுக்குள் அறிமுகமான பெண்கள் இலக்கிய ஆளுமையானார். (சிறுவயதில் " நிழல்கள்" சிறுகதை தொகுப்பை படித்து இருந்தாலும். எழுத்தாளர்களை கண்டு கொள்ளும் ஆர்வம் அன்று இருந்து இருக்கவில்லை. அந்த காலம் எனது சந்தோஷமான வாசிப்பு(Reading for pleasure ) நாட்கள் ஆகவே இருந்தன.)
சந்திரா ரவீந்திரன் பருத்தித்துறை ஆத்தியடியை பிறப்பிடமான கொண்டவர். ஈழத்தின் அசாதாரணமான சூழ்நிலையால் புலம்பெயர்ந்து தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். 1981ல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான 'ஒரு கல்வி விக்கிரமாகின்றது' சிறுகதையில் மூலம் இலக்கிய உலகில் அறிமுகமாகி இருந்தார். வீரகேசரி, தினகரன், மல்லிகை, சிரித்திரன், முதலான அன்றைய ஈழத்து பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும், சஞ்சிகைகளிலும் வெளியாகும் அவரது படைப்புக்களில் சில "நிலவுக்கு தெரியும்"(2011), "நிழல்கள் "(1988) தொகுப்புக்களாக வெளியிடப்பட்டுள்ளன. அவர் அண்மையில் எழுதிய சிறுகதை "அபர்ணம் நனைந்த மழை" (லண்டன் தமிழர் தகவல் சஞ்சிகையில் வெளியானது- வாசிப்பதற்கு கிடைக்கவில்லை )
சமூக வரலாற்றில் மக்களின் ஒரு பகுதியினர் ஒதுக்கப்பட்டும், ஓடுக்கப்பட்டும் வருகின்றனர். இவ் ஒடுக்குமுறை அதிகாரங்களிற்கு எதிராக மக்கள் தமக்கே உரிய எதிர்ப்பு வடிவங்களை இயன்றவகையில் செயற்படுத்துகின்றனர். ஒடுக்கப்படுதலுக்கான காரணகாரியங்களை வெளிப்படுத்துகின்றனர். ஊமை வலி களை பேசிக் கொள்கின்றனர். அதன் வழியே எதிர்கால ஈழச் சந்ததியினரை மாற்றங்களை நோக்கி சிந்திப்பவர்களாகவும், கடந்த கால அனுபவங்களை, ஆற்றொணத் துயரங்களை நினைவுகூர்பவர்களாகவும் வைத்திருக்கிறனர் பல்வேறு செயற்பாட்டாளர்கள். அந்த வகையில் தனது எழுத்துச் செயற்பாட்டின் ஊடாக கச்சிதமாக முயற்சித்து கொண்டிருப்பவர்களில் சந்திராவும் ஒருவராகின்றார். " நிலவுக்கு தெரியும்" சிறுகதை தொகுப்பிற்கு முன்னுரை வழங்கியது மூத்த எழுத்தாளர் உமா வரதராஜன் அவர்கள் இதனை தெளிவாக கூறியிருக்கிறார்.
"துயரத்தின் வடிவம் ஒப்பாரியாகத்தான் இருக்க வேண்டுமென்றில்லை. மனதின்  உடைந்துபோன கண்ணீரின் பாறைகளாகவும் இருக்கக் கூடும். சந்திராவின் கதைகள் சுமந்து இருக்கும் துயரம் இரண்டாவது வகை சார்ந்தது.
பெருங்கடலின் சீற்றமான பேரலைகளாக இவை இல்லாது கரையோரம் மெல்ல வந்து தன் ரகசியத்தை திருப்பத் திருப்பதச் சொல்லி மீள்கின்ற சிற்றலைகள் போல வெளிப்படுகின்றன."
மேற்கூறப்பட்ட எடுத்துரைபே சந்திராவின் எழுத்துக்களை விளங்கி கொள்ள போதுமானது.  ஒரு காலகட்ட ஈழ சமூகத்தில் ஆயுதப்போராட்டங்கள், அந்நிய படைஎடுப்புக்களிற்கு இடையில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் உறவுமுறைக் கதைகளின் ஊடாகவும், கதைமுழுதும் மறைமுகமாக  படர்ந்து செல்கின்ற அன்பு என்னும் மெல்லுணர்வின் ஸ்பரிசங்கள் முலமாகவும் கதை சொல்லி செல்கின்றார்.
இருந்தாலும் சந்திரா ரவீந்திரனுடைய சிறுகதைகளை இரண்டு பரிமாணங்களில் உரையாடலுக்குள் கொண்டுவர முடியும் என நினைக்கிறேன்.
ஈழத்தின் 1990ற்கு முந்தைய தலைமுறை வாழ்ந்துமுடித்த நிதர்சனமான வாழ்வையும், ஏக்கங்களையும் ,உறவு களையும், போர் நெருக்கடி வாழ்வியலுக்குள் இணைத்து வெளிவந்து கொண்டிருப்பவை ஒன்று. இரண்டாவது உண்மைகளைக் கண்டு அஞ்சுபவர்களையும், பெண் உடலின் அழிவையும், அற்பத்தனத்தையும், புரிந்து வைத்திருக்கும் உறவுகளையும், சமூகத்தையும் ஒரு துணிவான பெண் குறியீட்டு சாவியாக(symbolic key) நின்று ஏளனஞ் செய்வதாகவும் உள்ளது.
காலம் காலமாக பெண்கள் மீது திணிக்கப்பட்ட உடல், உள ரீதியான வன்முறைகள் சொல்லில் அடங்காது. போர்க்காலங்களிலும், பின்பும் பெண்கள் மீது கலாச்சாரம், மரபு , ஒழுக்க நெறிகள் என்ற வடிவங்களில் சுமத்தப்பட்டிருக்கும் சமூக கட்டுக்களை கேள்விக்கு உட்படுத்தியிருக்கின்றார் 'பால்யம்', ' மடமையைக் கொழுத்துவோம்' என்கின்ற இரு சிறுகதைகளிலும். ஒரு மத்தியதர வர்க்கத்துப் பெண் வெளியே வருகின்ற போது என்ன என்ன சவால்களிற்கு முகம்கொடுக்க வேண்டி வருகின்றதோ அவை அனைத்தும் எதிர்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஈழத்தமிழர் பண்பாட்டு அரசியல் இன்றும் பெண்ணின் 'இடம்பெயர்வை', அவளால் தனித்து வாழ முடியும் என்பதை சகித்துக்கொள்ள முடியாததாகவே அஜீரணத்தில் அவதிப்படுகின்றமை அன்றும் , இன்றும் தொட்டுக்காட்டப்பட்டுள்ளது. ' நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்' குறுநாவலில் (இரசிகமணி குறுநாவல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றது.) குறித்துச் செல்லும் மையங்கள் பல. ஒரு சமூகத்தின் இருப்பு ம், அதற்குள் ஒரு பெண்ணின் பாடுகளும் விபரிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் அக வாழ்க்கையை,  கனவுகளை, வேட்கையை வெளிப்படையாக பேசியிருக்கின்றது. ஈழத்துப் பெண்களின் திருமணம் என்பது காதல், காமம் தாண்டி ஆயுதங்கள், சுற்றிவளைப்புக்கள், காணாமல் போதல்கள் போன்ற அந்நியர்களால் வலிந்து எம் மீது திணிக்கப்பட்ட துன்பியலைக் கடந்தே நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. ஒரு திருமணத்திற்கு தயாராகும் பெண்ணின் மன அவஸ்தை கள் நிஜ விம்பங்களாக வரையப்பட்டு இருக்கின்றது.
" யாசகம்" சிறுகதை பல அனுபவங்களை மீட்டிச் சென்றாலும் அதன் அடிநாதமாக இருப்பது ஒரு பெண்ணின் இளமையின் சுதந்திரத்தை அனுபவிக்கும் ஆவலே. சுதந்திரமாக பறந்த பறவை ஒன்றின் கூண்டுக்குள் அடைபட்ட துன்பியல் பாடலாகவே அது நனவு நிலையில் வாசகர்களுக்கு கேட்கின்றது.
" என் சின்ன சின்ன சந்தோஷங்களெல்லாம் பறிபோகின்ற கணங்கள் தான் அவனால் காதலிக்கப்படுகின்றேன் என்றால் அக் கணங்களிற்காகவே நான் காத்திருக்கலாமே என்று காற்று என் காதுக்குள் பரிகாசம் செய்கின்றது."
மேற்குறித்த சிறுகதையின் வரிகள் கவிதை பாணியிலே பெண்கொண்ட வலிந்த பிணைப்புகளின் கடுந்துயரக் கொடுங்கனவை பேசிசெல்கின்றது.
"காற்று" புலம்பெயர் தேசத்தில் உள்ள கணவனை அடையத் துடிக்கும்  ஈழத்தின் பண்பாட்டு கலாச்சாரத்திற்குள் பழக்கப்பட்ட ஒரு சாதாரண பெண்ணான "றஞ்சினியை" சுற்றி நடக்கும் துன்பியல் சம்பவங்களை கதையாடல் செய்து செல்கின்றது. லண்டனுக்கு செல்வதற்காக மத்திய கிழக்கு நாடு ஒன்றின் விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள், ஆண்களின் மனோநிலை எதிர்பார்ப்புகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பேசா மொழியில் பேசிக்கொண்டு செல்கின்றது சிறுகதை. தங்கியிருந்த விடுதியில் நடக்கும் விபச்சாரம் , ஏஜென்சி காரர்கள் பெண்ணுடல் மீது கொண்ட பித்து என அறியாக்கதைகளை கண்டு மனம் வெதும்புகின்றார் றஞ்சினி என்னும் பாத்திரத்தின் ஊடாக அந்நிய நாட்டுச் சிறுமியின் பருவம் அறியாத ' சொக்லேற்' ஆசையும், ஈழத்தின் வறுத்த புளியங்கொட்டை சப்பும் சொந்த தங்கச்சியையும் ஒரு நேர்கோட்டில் இணைந்து சிந்திக்க வைக்கின்றார்.சிறுகதையை வாசிப்பவரது நெஞ்சை பிடித்து அமுக்குகின்றது சம்பவ கோர்ப்புக்கள்.
"பன்னிரண்டு வயதில் எனக்கொரு தங்கச்சி இருக்கிறாள் அவளுக்கு இப்பவும் வடிவாக் கொலரை இழுத்துச் சரிப்படுத்திச் சட்டை அணியத் தெரியாது. வறுத்த புளியங்கொட்டை சப்பிக்கொண்டு ஊஞ்சல் ஆடுவாள்... றஞ்சினிக்கு ஆழவேணும் போலெல்லாம் இருந்தது. அன்றிரவு முழுவதும் இனம்புரியாத அவஸ்தையோடு ஊமையாக அழுதுகொண்டிருந்தாள்."
இப் பெண் அவஸ்தையை தன் காதல் கணவனிடம் அவள் கூறும்போது.
" மஞ்சு உதொண்டும் வெளிநாடுகளில் பெரிய விசயமில்லை. உதுக்கேன் நீர் கவலைப்படுகின்றீர்? அதை மறவும்,  நாளைக்கு அனுப்புற ஆக்களிலை நீர் வாறதைப் பற்றி ஜெகதீசனைக் கேளும்"
என்கிற கணவரின் பதில்
ஆண்தான் எப்போதும் பெண்ணை காப்பாற்றுபவனாக ,அவளுக்குமான இலக்கியத்தை படைப்பவனாக.  அவளது உடல்பற்றி, உணர்வுகளை வெளிப்படுத்துபவனாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறான்.பெண் தனக்காக போராடுவதும், தனக்காக எழுதுவதும் தன் உடல் குறித்து பேசுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தொன்றில்லை இதுதான் சமகாலத்து நீதி.
என்னளவில் சந்திராவின் எழுத்துகள் என்பது எம் சமூகத்துப் பெண்கள்  மீது திணிக்கப்பட்ட ஒடுக்கு முறைக்கு எதிரான ஓர் எதிர்வினை , செயற்பாட்டு போராட்டத்தின் ஒரு வடிவம். பேசாப்பொருளை பேசும் ஒரு செயன்முறை. அதுவும் பேச முடியாத இடத்திலிருந்து கொண்டு பேசமுனைதல் என்பது பெண்கள் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஆசுவாசப்டுத்திக் கொள்வதற்கான ஒரு வடிவமே.
பெண்ணின்  இருப்பு என்பது எப்போதும் கண்காணிப்புக்குள்ளாகக் கூடியதாக , புறக்கணிக்கப்படக் கூடியதாக மாறி நெடு நாட்களாகி விட்ட ஒரு சமூகத்தில் பெண்இருத்தல் என்பதை பறைசாற்ற கூடியதாக பகிரங்கமாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளக் கூடியதான எழுத்துக்களை உருவாக்கி இருக்கின்றார். பெண்ணுக்கானநியதிகள், பெண் உடல் மீதான அரசியல் வன்முறை அனைத்தையும் கேள்விக்குட்படுத்தும் விதமாக சந்திராவின் படைப்புகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.
பெண்கள் சிறுகதை எழுதுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது.  எழுதுவதையும் வாழ்க்கையையும் தொடர்புபடுத்தி பார்க்கும் எமது சமூகம் படைப்பில் ஆண்களிற்கு இருக்கின்ற சுதந்திரத்தை பெண்ணுக்கு வழங்க ஏனோ முன் நிற்பது இல்லை. இதையெல்லாம் தாண்டி எழுதி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றார் சந்திரா ரவீந்திரன். ஒரு பெண்னுடைய நாட்குறிப்பை போல துயர் மிகுந்த உணர்ச்சி மிக்க படைப்புக்கள் இருக்க முடியாது என்பதை ஆர்த்மார்த்தமான கதை களாக படைத்து இருக்கின்றார்.
மனித உறவுகளின் பிணைப்பையும் , சிக்கல்களையும் அவ் மனிதர் சார்ந்த சமூக, அரசியல் பின்னணியில் பதிவு செய்யும் கதைகளில், தனி மனிதர்களின் அன்றாட அண்டை உறவு களின் மனித நேயமும், நட்பும் நிலவுவதை தன் கதைகளில் பதிந்து செல்கின்றார். 'தரிசு நிலத்து அரும்பு', 'அவர்கள் இல்லாத தேசம்', 'வல்லைவெளி தாண்டி' சிறுகதைகளில் உருவகிக்கப்பட்ட பாத்திரங்களிற்கு இடையிலான உறவுகளில் வெளிப்படுகின்ற சினேகமும், நேயமும் பொதுத் தளத்தில் நிலவிய முரண்பாடுகள் நிறைந்த போராட்டங்கள் என்னும் கரிய தடித்த கோடுகளால் தூரதரிசனமாக வரையப்பட்டுள்ளது. இருள் படிந்த கடந்த காலத்தின் ஒரு பகுதியை பிரதிபலிக்கும் கண்ணாடி கதைகளான 'என் மண்ணும் என் வீடும் என் உறவும்' , 'முறியாத பனை', சிறுகதைகள் ஈழ யுத்தத்தை எதிர் கொண்ட முதல் இளைஞர்களின் அனுபவங்களாகவே உள்ளது. மண்ணுக்காக போராட முயன்ற, விடிய லை கோரி நின்ற மக்களின் துக்கமான வாழ்வை பெண் சார் சுயத்தில் நின்று ஒரு நேர்கோட்டுப் பொதுமையில் கதைகளை நகர்த்தி செல்லும் பாங்கு கோட்பாடுகளை தாண்டிய எழுத்தாளரின் தனித்துவமே என எண்ண தோன்றுகிறது.
போராட்டத்தின் தீ நாக்குகளிற்குள் தன் உறவுகளை தாரைவார்த்துக் கொடுத்த குடும்பங்களின் மன ஏக்கங்களையும், ஒப்பாரிகளையும் ஈழத்தின் பெரும்பாலான வீடுகளிலே கேட்க முடியும். பிள்ளைகளை இழந்த தாய், தந்தையின் துயரம் சுமக்கும் மனதின் துக்கத்தையும் இந்த மண் கண்டுகொண்டே இருக்கின்றது. 'சில நேரங்களில் சில நியதிகள்', 'எரியும் தளிர்கள்' சிறுகதைகள் பல மாவீரர்களையும், சில தனியாத விடுதலை வேட்கை கொண்ட போராளிகளையும் கண்ணில் மறையா உருவங்களாக்கி சென்றுள்ளது. என் சிறுவயது போராளி கீறோ "மொறிஸ் அண்ணையும்" நனவிடை தோயச் செய்து சென்றது.
சந்திரா ரவீந்திரனுடைய சிறுகதைகளில் மூடிய வரலாற்றின் ஒரு சில கதவுகள் திறக்கப்பட்டு இருக்கின்றன என்று நினைக்கிறேன். சில கதவுகளை திறக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றார் போலும். இன்றும் பல கதவுகள் எமக்கு தெரியாது இணைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. காயப்பட்டுவிடுவோம் என்பதற்காக இக் கதவுகளை உடைக்காது விட்டுவிட முடியாதே..! சந்திரா வினது படைப்புக்களில் நேர்கோட்டு அனுபவ வடிவமாக விரவியிருக்கின்ற போர் வாழ்க்கையின் துயர ஓலத்தையும் விட சமூகம் சார்ந்த பொது நோக்கையே என்னால் காண முடிகின்றது. அன்பின் பொறுப்பு கூற லை, உறவு களின் பிணைப்பை, பெண்ணின் எழுச்சியை வெளிக்கொண்டு வரும் அவரது தனித்துவ எழுத்து அழகை போர் சார்ந்த துன்பியல் மறைத்து விட்டது என நினைக்கிறேன். அவரது எதிர்கால எழுத்துக்களில் இவை பெரும் கோஷமாகி நிச்சயமாக எழுத்து உலகில் கொண்டாடப்படும்.
கவிஞரும் எழுத்தாளருமான "சல்மா" அவர்கள் லண்டனில் நடைபெற்ற 40 வது இலக்கிய சந்திப்பில் பதிவு செய்த விடயத்தை இங்கு நினைவு கூருவது பொருத்தமாக இருக்கும்.
"பெண் தனது படைப்புகளில் வழியே எதை அடைய ,எதை நோக்கி பயணிக்க முயற்சிக்கிறாள், ஆண்களைப்போல அதிகாரத்தை நோக்கியல்ல .தனது விடுதலையை நோக்கிய பயணம் அது.அதற்கான வேண்டல் வேட்கை தவிப்பு படைப்புகளில் பதிவாகின்றன.   ஆனால் அந்தபடைப்புகள் இந்த ஆணாதிக்க மைய அதிகார நிலைப்பாடு கொண்டவர்களால் எளிதாகபுறந்தள்ளப்படுகிறது. தயவுதாட்சண்யமின்றி. மதவாத பிற்போக்குசக்திகளுக்குப்பின் என்ன மனநிலை இயங்குகிறதோ அதுதான் ஏனைய ஆணாதிக்க படைப்பாளிகளின் மனநிலையுமாக இருக்கிறது."
ஆனால் தனது சிறுகதைகளில் சந்திரா என்றும் நேரிடையாக இந்த ஆணாதிக்க அதிகார மையங்களை எதிர்க்கவில்லை. அன்பின், போரின் வலி களின்,நனவிடை தோய்தலின், அரவணைப்பின், கொஞ்சலின், மௌனத்தின் வழியே அவரின் எழுத்துக்களின் வேட்கை பதிவாகின்றது. இருப்பினும் சந்திரா ரவீந்திரனுடைய சிறுகதைகளின் மறைமுகமான அரசியல் என்பது மைய அதிகாரங்களை வெறுக்கும் / உடைக்கும் வழிமுறையாகவே உள்ளது.

தர்ஷன் அருளானந்தன்

Comments

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"