சிங்களமொழியில் பிரதியாக்கம் செய்யப்பட வேண்டிய - சித்தாந்தன் சபாபதி சிறுகதை ''#புத்தரின் கண்ணீர்'' (ஜீவநதி 9 வது ஆண்டு மலர்)

#

ஈழப்போரின் மௌனிப்பிற்கு பின்னரான 'மனநிலை' விகாரங்களிற்கு உள்ளான ஒரு சிங்கள இராணுவ வீரன், குடும்பத்தினது 'உணர்வு பிரளயத்திற்குள்' சென்று எழுத்தாளர் கதையாடலை நிகழ்த்தியிருக்கின்றார். போரினால் தோற்கடிக்கப்பட்ட ஒரு தரப்பின் பிரதிநிதியாக இருந்து கொண்டு போரில் வெற்றிபெற்றவர்களின் உணர்வுகளை அககண் கொண்டு ஒரு பார்வை செய்திருக்கின்றார்.
கதை இருத்தலின் இயல்பு என்பது அறிவர்த்தத்தின் மற்றும் இருத்தலின் இயல்பைப்பற்றிய யதார்தங்களை வற்றிவிடச் செல்வது இல்லை என்ப
து 'புத்தரின் கண்ணீர்' என்ற சிறுகதையினூடாக நிதர்சனம் ஆக்கப்பட்டுள்ளது.

இங்கு கதையாடல் மையத்தில் வைத்து பார்க்கப்படும் 'சமரசிங்க' வும் 'சந்தன' வும் சாதாரண சிங்கள விவசாய மக்களாக இருந்த போதிலும் அவர்களிற்கேயுரிய கிராமப்புற ஆழகியல் வாசனையை வெளிக்கொண்டுவருவதில் எழுத்தாளர் சற்று பின்னடைவை சந்தித்துதான் உள்ளார்.
'ஒரு குண்டு வெடிப்பு சம்பவம்' சாதாரண சிங்கள இளைஞன் மத்தியில் ஏற்படுத்திய வன்மம் 'புலிகளை' அழித்தலில் இருந்து பின்வாங்கி இறந்த பெண் உடலங்களின் பால் உறுப்புகளின் மீது வெற்றியை கொண்டாடி மகிழ்ந்து இருந்தது. கருணையும் ஜீவகாருண்யமும் மிக்க அன்பான குடும்பத்தில் பிறந்து, வளர்த்து எடுக்கப்பட்ட ஒரு சிங்கள இளைஞன் இலகுவாக வன்முறை சார் விடுதலையின் மீது விருப்புக்கொள்கின்றான். இவ் விடயம் உளவியல்ரீதியாக இனம் கடந்து அவதானிப்பிற்கு உட்படுத்த வேண்டிய விடயமாகவே உள்ளமை எழுத்தாளரால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. 'மனிதர்களின் சூழ்நிலைகளே முடிவெடுக்கும் மாற்றத்திற்கு அவர்களை உட்படுத்துகின்றது.'' மனிதனால் நற்பண்புகளாக கோடுகாட்டிய அனைத்து ஒழுக்கவிழுமியங்களும் ஒரு கணப்பொழுதில் வெற்றியின் மமதையில் தூக்கிவீசப்பட்டு இருத்தலின் இயங்கியலுக்கு பொருத்தமற்றவர்களாக மாற்றிவிடுகின்றது அவர்களை.

'சமரசிங்க' என்ற தந்தையின் அன்பும் , புரிதல்பாடும்  ஒரு சராசரி தந்தையாக எழுத்தாளரால் அவரை வர்ணித்து இருந்தாலும் அவரின் வாழ்க்கை முறைக்கு அப்பாற்பட்ட 'பாரிய சிந்தனை கிளறல்களை' சமரசிங்க என்ற பாத்திரத்தினுள் திணிக்க முற்பட்டு இருக்கின்றார். சமரசிங்க-சாதாரண-கிராமப்புற-பௌத்தமதத்தை நம்பும்-ஒரு விவசாயியே ! அவர்சார்ந்த மானிடம் பற்றிய அதிஉச்ச புரிதல்களை எதிர்பார்க்க முடியாது.
நடுநிலைவாதியாக இருத்தல் என்பது பல விடயங்களில் இரு இனங்கள் சார்ந்த நியாயப்படுத்தல்களை முன்வைத்தல் அன்று.
''இராணுவமும் தமிழ்ச் சனங்களை கொன்று குவிப்பதை சொன்னான்'' மேற்குறிப்பிட்ட வசனப்பரப்பில் பெரும் விமர்சனம் உண்டு. இக்காலப்பகுதியில் சாதாரண சிங்கள பொதுமக்கள் மத்தியில்  பெரும் இனவாத பிரச்சார முன்னெடுப்பு செய்யப்பட்டு இருந்தது. சரியான செய்தி  ''செய்தி தணிக்கை'' என்ற பெயரில் எதிர்தரப்பில் கொல்லப்படும் அனைவரும் புலிகள் என்ற விம்பத்தையே ஏற்படுத்தி இருந்தது.இக்காலப்பகுதியில் சமரசிங்க  அடிப்படை முரண்களை புரிந்த பாத்திரபபடைப்பாக காட்டப்பட்டமை புனைவின் அதி உச்சம் என்றே நினைக்க தோன்றுகின்றது.

அடிமட்ட கிராமப்புற சிங்கள மக்கள் பழகுவதற்கு இனிமையானவர்களாகவும், இலகுவில் உணர்ச்சிவயப்படுபவர்களாகவும், பெரு இனத்துவேச கதையாடலுக்குள் ஒளிந்து இருக்கும் வன்முறையை அறியாதவர்களாகவும், தமிழர்களோடு பழகுவதற்கான விருப்போடும் இருக்கின்றனர். என்பது போருக்கு பிந்திய காலங்களிலேயே அறியக்கிடைத்தது பெரும்பாலான எம்மவர்க்கு,  ஆனால் அவர்கள் இன்றும் தமது பிள்ளைகள் இராணுவத்தில் பணியாற்றுவதை, புலிகளை தோற்கடித்தமையை கௌரவமாக நினைப்பவர்கள். 'தமிழ் மக்கள் இனஅழிப்பு செய்யப்பட்டார்கள் என்ற அவலத்தை/  செய்தியை அவர்களால் இன்றும் ஏற்றுக் கொள்ளாதவகையில் மூளை சலவை செய்யப்பட்டிருக்கின்றார்கள். என்பது அடிமட்ட கிராமப்புறமான வடமத்திய மாகணத்தின் ''வலகம்பாஹுவ'' பிரதேச மக்களோடு வாழ்ந்து பழகும் சந்தர்பத்தின் போது அறியக்கிடைத்தது.

எனவே இங்கு சித்தாந்தன் கதைக்களத்திற்குள் கொண்டுவந்த சமரசிங்க என்ற பாத்திரபடைப்பு அடிமட்ட கிராமத்தவனா?,கிராமத்தவனா?,நகரம்-கிராமத்திற்கிடைப்பட்டவனா?, நகரப்புறத்தவனா? பெரும் கேள்விக்கு பதில் சொல்லாமலே சென்றுவிட்டது. வாசகர்களிற்கு மேற்குறிப்பிட்ட நான்குவகையான பிரதேச  சிங்கள மக்களுடனான பழக்கத்தில் அவர்களிற்கிடையிலான வித்தியாசத்தை உணர்தே இருப்பார்கள் என்பது புரியப்படாமல் கதையின் சில பகுதிகளில் சமரசிங்க ஒரு நகரப்புற சிங்களவராக சிந்திக்க வைக்கப்பட்டு இருந்தமை ஒரு பின்னடைவே..! 'சந்தன' போர்க்களத்தில் செய்த கொடூரச் செயல்களிற்கு பின்னர் மாற்றம் சமரசிங்கவில் ஏற்படுத்தப்பட்டு இருந்தால் மிகவும் நன்றாகவே பாத்திர படைப்பு வலிதலுக்குட்படாமல் அதன் போக்கிலேயே விடப்பட்டு இருக்கும்.

''போருக்கு பின்னரான வெற்றியில் திளைத்த சந்தன வீட்டில் அனுபவித்த அந்நிய நிலைப்பாடும் அவனின் மனமாற்றமும்''
இவ்விடத்தில் சித்தாந்தன் 'சந்தன' என்ற படைப்பை சுதந்திரமாக விட்டு வெற்றி பெற்று இருக்கின்றார். சாதாரண மனிதனில் ஏற்படும் குழு உணர்வும் தனிமனிதனாகும் போது ஏற்படும் 'ஏதிலித்தன உளவியல்' மிக அழகாக நல்ல ஆழகியலாக கொடுக்கப்பட்டு இருக்கின்றது. 'பெண்களின் பிறப்பு உறுப்புகளின் மீது சப்பாத்து கால்களை வைத்து போர் வெற்றியை கொண்டாடியவன்'' வீட்டிற்கு வந்தபோது சொந்த தங்கையாலும், தாயாலும் நிராகரிக்கப்பட்டான் .குற்றவாளியாக உணர வைக்கப்பட்டான். இங்குதான் சிறுகதையின் உச்சம் இருந்து கொண்டிருக்கின்றது.
பலராலும் மனம் நோகப்பட்ட கொடூரம் சிங்கள ராணுவ வீரனின் குடும்பத்தின் சார்பாக பார்க்கப்பட்டு இருப்பது பொதுவெளியில் மையங்களை தகர்த்து எறிந்து ஏனைய பாத்திரங்களையும் ஆழகாக சித்தரித்தது மட்டுமல்லாது தமிழ் வாசகர்களிடையே  ஒரு மன ஆறுதலையும் தந்துவிட்டு செல்கின்றது.
சித்தாந்தன் சிந்தனையில் வெற்றிபெற்றே உள்ளார் . சில மெருகூட்டல்களோடு நிச்சயமாக இச்சிறுகதை சிங்கள மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு சிங்கள வாசகர் மத்தியில் உரையாடு தளம் ஒன்றை அமைக்க வேண்டியது காலத்தின் தேவைகளில் ஒன்றே...!

#தர்ஷன் அருளானந்தன்#

Comments

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"