கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி


.....................................................................................

கிராமிய பாட சாலைகள் மேம்பாடு என்பது எல்லாக் கிராமங்களிற்கும் அவசியமானதா?
எப்படியான யதார்த்தப் போக்குடைய கிராமப்  பாடசாலைகளின் மேம்பாடுத் தன்மை உணரப்பட வேண்டும்?
                என்ற வினாக்களின் பின்னணியில் கிராமங்களை நான்கு பிரிவுக்குள் உள்வாங்கி அதற்கு விடைகாண முடியும்

1)வளர்ந்த கிராமங்கள்-இது நகரப்போக்குடையது
2)வளர்ந்து வரும் கிராமங்கள்
3)குடியேற்றக் கிராமங்கள்
4)வளர்க்கப்படவேண்டிய கிராமங்கள்

மேற்குறிப்பிட்ட கிராமங்களின் வகைப்படுத்தலில் இறுதியான மூன்று வகைக் கிராமங்களிலும் முழுமையான உருமாற்றத்தைப் பெறமுடியாமல் செல்லரித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளாக வறுமை, தேக்க நிலைகளைக் குறிப்பிடலாம். இக்கிராமிய மக்களின் மேம்பாட்டிற்குத் தடையாக உள்ள சமூகப் பிரச்சினைகள் 'தனிமனித-வறுமை' என்ற ஒற்றைச் சொல்லாடலில் , தேக்க நிலையை அடைந்தாலும் அது பல சமூகப் பிரச்சினைகளுக்குத் தேசிய ரீதியில் தூண்டுதலாக அமைந்து ஒரு சமூகச் சிக்கலாக மாறி மொத்தக் கிராமத்தினதும் எதிர்கால இளைய சந்ததியினரின் கல்வி,நடத்தை முன்னேற்றங்களிற்கு பெரும் தடையாக அமைந்துவிடுகின்றது. இப்பிரதேச மாணவர்களின் கற்றல் இடர்பாட்டிற்கு காரணமாகும் இடர்களை யதார்த்த பூர்வமாக அணுகத் தலைப்படாமல் இருக்கும் திட்டமிடலாளர்களும், அரசியல்வாதிகளும் தாம் சார்ந்த பணிகளைப் பிரக்ஞை பூர்வமான மறுவாசிப்புக்கு உட்படுத்தவேண்டிய அவசியம் பரவலாகத் தற்போதைய கல்விப் பின்னடைவுகளின் பின்னர் உணரப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தி இருக்கின்றது.
           இன்று பல கிராமிய மேம்பாட்டுச் சிந்தனைகள் வறுமை நிலையை ஒழித்தல் என்பதற்கு மேலாக கிராமங்களில் நகரமயமாக்கத்தையும், நவீனமாக்கத்தையும் கட்டியெழுப்பும் தூரநோக்கத்தைக் கொண்டு நகரப்புறங்களிற்கு பொருத்தமான கல்வி முறையையும், சமூக முன்னேற்ற செயற்றிட்டங்களையும் நேரடியாகக் கிராமப்புறங்களில் பிரயோகிக்க முற்பட்டதன் விளைவாக இன்று இப் பிரதேசங்கள் சார்ந்த பெரும்பாலான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கிராமியப் பாடசாலை மாணவர்கள் கல்வி, நடத்தை சார் முன்னேற்றங்களிற்கு சவால் விடும் காரணிகளாக பின்வருவனவற்றைக் கொள்ள முடியும்.

1)பிரதேச புவியியல் அமைவும்,சமூக அசைவியக்கமும்,சனத்தொகைச் செறிவு இன்மையும்
2)மீள்குடியேற்றமும், உயர் வளர்ச்சிக்கான உள்ளார்ந்த வளப்பயன்பாடு இன்மையும்
3)கற்றலுக்கான வீட்டுச் சூழலின்மையும், அடைவுமட்டப் பின்னடைவுகளும்
4)வாழ்க்கைத்தர வீழ்ச்சியும், புதிய வாய்ப்புக்களுக்கான வழிகளின்மையும்
5)எழுத்தறிவு வீதமும், மக்களின் மனோபாவமும்
6)போர்,இடப்பெயர்வு தந்த சமூகப் பின்னடைவுகள்
7)பொருளாதாரமும்,கல்வியும்
8)பாடசாலை-சமூக உறவில் விரிசல்
9)நகர் உருவாக்கங்களின்மை
10)சுகாதார, வைத்திய சேவைகளின் போதாமை

         ஒவ்வொரு கிராமங்களிலும் காணப்படுகின்ற இயங்கியல் யதார்த்த, சமூகப் பிரச்சினைகளை ஒருபோதும் வேறு ஒரு பிரதேச மக்களோடு ஒப்பீடு செய்து தீர்வுகளை நேரிடையாகப் பிரயோகிக்கப்பட முடியாது. உலக உணவுத்திட்டத்தால் வழங்கப்படும் மதிய உணவைப்  பெற்றுக்கொள்வதற்காகவே பாடசாலைக்கு வருகை தரும் நூற்றுக்கணக்கான மாணவர்களை இன்று இப்பிரதேசத்தில் சர்வசாதாரணமாகக் காணமுடியும் என்பது இவ் உணவைக் குப்பை தொட்டியில் வீசும் நகர் சார்ந்த கிராமப்புற மாணவர்களோ, ஆசிரியர்களோ, அதிபர்களோ , நிர்வாக அதிகாரிகளோ, பெற்றோர்களோ அறிந்திருக்கவில்லை என்பதே இங்கு வேதனை தரும் விடயமாக உள்ளது. அடிப்படையில் உண்மையான வறுமை நிலையை வெளித்தெரியாமல் இருட்டடிப்புச் செய்து கொண்டிருக்கும் பல் நிலை ஊடகங்கள் வெறும் சதைகளையும், அரசியல் கொந்தளிப்புக்களையும் மூன்றாம் தர வாசகர்களைக் குறிவைத்து விற்பனையைப் பெருக்கி சமூக அக்கறை இன்றி செயல்படுவதும் வெள்ளிடை மலை.
        இன்று கல்வி பற்றிய எமது ஈழச்சமூகத்தின் பார்வை ஆதிக்கம் உள்ளதாகவும் ஒரு குழுமத்தின் இருத்தலுக்கான போராட்டமாகவும் போட்டியை மையப்படுத்திய பணம் சிந்தும் வேடிக்கை மையங்களாகவும் மாற்றம் பெற்று வருகின்றமை பல் அவதானங்களூடாகப் பெற முடியும் . பாட சாலைகள் இலகுவில் சாமானியர்களது அன்றாட வாழ்க்கையை அச்சுறுத்துவனவாகவும் உள்ளன. இன்றைய அடையாளங்கள் கடந்த காலத்தின் மீது செலுத்தும் நியாயம் அற்ற  கரிசனை வரலாற்றுப் பூர்வமான ஆதிக்கத்தை மாற்றி இருந்தாலும் இவ் வடிவங்கள் ஏன் மாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றன? இங்கு வடிவங்களாகக் கொள்ளப்படும் ஆசிரியர்கள் எதிர் நோக்கும் இடங்களாக பின்வரும் காரணிகளைக் கொள்ள முடியம்...

1)ஆசிரியர்களுக்குக் கலையார்வம் இல்லாதிருத்தல்
2)வசதிப்படுத்தல் சார்ந்த மேற்பார்வை இன்மை
3) ஆசிரியர்களுக்கான புறக்கற்றலுக்கான சந்தர்ப்பமின்மை
4)ஆசிரியர்களின் மனப்பாங்கு
5)வதிவிட வசதிகளை ஏற்படுத்தாமை/போக்குவரத்து
6)போதிய வருமானம் இன்மை-மேற்படிப்புக்களிற்கான தேவை
7)அதிகாரத்தைத் திணிக்கும்-பரந்துபட்ட நோக்கமும்-வசதிப்படுத்தும் செயன்முறையும் அற்ற உள்ளக-வலய-மாகாண மேற்பார்வைகள்
8)மாணவர் சார் உளவியலை விளங்கிக் கொள்ளல் தொடர்பான சேவை முன் பயிற்சிகள் இன்மை.
9)தீர்மான இணைப்பாட விதானச் செயற்பாடுகளும் மாணவர் தொகையும்.
10) பரந்து பட்ட வாசிப்பு ஆசிரியர்கள் மத்தியில் இன்மை/மாற்றங்களை எதிர் கொள்ளத் தயங்குதல்

       அடிப்படைச் சுகாதார வசதிகளைக் கூட பெற்றுக் கொள்ளத் தவறிய முப்பது மாணவர்களின் குடும்பப்பின்னணியில் காணப்படுகின்ற முரண் நிலைகளை வெறும் 40 நிமிடம் பாடம் எடுக்கும் ஆசிரியரால் பூர்த்தி செய்து தீர்வு காணப்பட்டு, கட்டுருவாக்கம் செய்து விட முடியும் என்பதில் நம்பிக்கை கொண்ட கல்வி முறைமை இன்றைய புலத்தின் கேள்விக்குறியே! மொத்தத்தில் இவ்வாறான சமூக அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து தனியே மாணவர்களது கல்வி, ஒழுக்க வளர்ச்சியில் அக்கறைகாட்டும் தன்மை இப் பிரதேசங்களில் பணிபுரியும் அதிபர், ஆசிரியர்களுக்கு மேலதிகமான ஒரு பணிச்சுமையே! தொடர்ச்சியான அழுத்த நிலை இவர்களை இயக்கம் அற்றவர்களாக்கி வெறும் கஷ்ட,அதி கஷ்ட பிரதேச சேவையை முடித்தால் என்ற வரையறைக்குள் தள்ளிவிட்டுவிடுகின்றது.

எனவே வட மாகாண கல்வி அமைச்சர், திட்டமிடல் அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், கல்வி சார்ந்த பேராசிரியர் களின் நடைமுறை யதார்த்தம் சார்ந்த பணிக்கூறுகள் என்ன? என்பது மீண்டும் பெரும் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது.
   பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியிலே பாடசாலை,பெற்றோர்,சமூகம் என்பன அக்கறைகாட்டாது விட்டால் சமூக வளர்ச்சி பின்தள்ளப்படும் இதற்கான வழிமுறைகளாக "பிரதேச பெற்றோர்களை பாடசாலைக்கு அழைத்து கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்கள், ஆலோசனைகளை வழங்கலாம்"என்று விதப்புரை கூறுபவர்களை தளத்தில் தொடர்ச்சியான பணியாற்றலுக்கு உட்படுத்தவேண்டும்.அன்றாடம் காய்ச்சிகளான அவர்களை அழைக்கும் போதுள்ள நடைமுறைச் சிக்கல்களைத் திட்டமிடலாளர்கள் உணரத் தயாராக இல்லை உணர்ந்தாலும்  கடமை முடிந்தது போலச் செய்வர். சாதாரண படித்த மக்களுள்ள நகரப்புறங்களிலேயே  பெரும் சாத்தியங்களைக் கண்டிராத திட்டங்களை நேரிடையாக ,குறிக்கோள் கிராமத்திற்குப் பிரயோகித்தலை தவிர்த்து, அப் பிரதேசம் சார்ந்து தொடர்ந்து செயற்படும் முற்போக்கான, வினைத்திறனான ஒரு குழுவை அமைத்து களப்பணியாற்றல் குறித்து சிந்திக்கப்பட்டுள்ளதா? வெறுமனே கண்காட்சி ஆற்றுகைகளை நம்பிய ஆசிரியர் மாநாட்டிற்கு கொட்டி தீர்க்கப்படும் பணத்தைக் கொண்டு ஒரு கிராம மாதிரிப்பாடசாலையை உருவாக்கி காட்டி இருக்க முடியாதா?

மேற்குறித்த பணிகளை நிறைவேற்றுவது என்பது அறிவு,நுட்பத்திறன்கள்,ஆழமான சமூகப்பற்றுக் கொண்ட மனிதவளத்தை உருவாக்க கூடிய கல்வி முறையினாலேயே சாத்தியமாக இருந்த போதிலும் இன்றைய நிலையில் கிராமப்புறங்களில் பாடசாலை மாணவர்களிடையே அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் முன்னேற்றங்களை பெறமுடியாதவாறு,சமூக,பொருளாதார,அரசியல்,கலாசார, உளவியல்,உடலியல் ரீதியான பெரும் தடைகள் பல நடைமுறையில் உள்ளமையையும் நாம் "மேம்பாடு" பற்றி சிந்திக்கும் போது கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

#தர்ஷன் அருளானந்தன் #

Comments

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"