எம் அடுத்த தலைமுறையும் எம்மை சபிக்காது இருக்க....


கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் ஏற்பட்ட சமூக அரசியல், பொருளாதார மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகையில் ஏற்படுதியிருக்கும் தாக்கங்கள் தீவிரமானவை. நம் மரபின் அடையாளங்களாக அறியப்பட்டிருக்கும் குடும்பம், அறவீயல் மதிப்பீடுகள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், உணவுப் பழக்கங்கள்,கலைகள் என எல்லாவற்றின் மீதும் நவீன வாழ்வின் செல்வாக்கு மேலோங்கி வருகின்றது. உலகளாவிய அளவில் மூன்றாம் உலக நாட்டு மக்கள் தமது பண்பாடு பற்றிய கற்பிதங்களை, மரபின் அடையாளங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் திணறிக்கொண்டிருக்கின்றார்கள். இலங்கை தமிழர் வாழ்விலும் பண்பாட்டுக் கூறுகளிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் இப்போக்கின் ஒரு பகுதி என்ற போதும் அவர்கள் சிங்கள பெரும்பான்மை அதிகாரத்தின் ஆக்கிரமிப்பு க்கும், தமிழ் அரசியல் தலைவர்களின் தப்பான முன்னெடுப்புக்களிற்கும் மேலதிகமாக போராட வேண்டியவர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

நூற்றாண்டின் பாரிய வன்முறைக்கு உள்ளான ஒரு இனமாக உயிர்கள், சொத்துக்கள், அடிப்படைச்  சமூகக்கட்டுமான அமைப்புக்கள் என அனைத்தையும்  இழந்து நிற்குமாறு  ஆக்கப்பட்டிருக்கிறோம்.

 ஒரு மாபெரும்  தோல்விக்குப் பின்னரான உரிமைகள், அதிகாரம், சீரமைக்கப்பட்ட சமூகக் கட்டுமானம் போன்றவை முறையாக கிடைக்கவேண்டிய தேவை அவசியமாக உள்ளது.  இதை யாரும் மறுத்துரைக்க முடியாது.

ஆனால் தற்போதைய சூழலில் தமிழ் அரசியல் இவற்றை முன்வைத்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றதா...?. அது ஆரோக்கியமான உரையாடல்களுக்கான வழிகளை தன்னகத்தே கொண்டுள்ளதா..? எமது அடுத்த சந்ததியினரின் நிரந்தர இருத்தலை ஆரம்பிப்பதற்கான தொடக்கப் புள்ளியை தளத்திலும் புலத்திலும் ஆரோக்கியமாக உருவாக்கியிருக்கின்றதா? என்பது ஆயுதப்  போர் முடிவுறுத்தப்பட்ட பின்னரும்  தொக்கி நிற்கும்  கேள்வியாகவே உள்ளது.
தமிழ் தேசிய உணர்வு அல்லது தீவிரமான தமிழ் இன வாதம் , தனிமனித ஆதர்ஷ வழிபாடுகள் என்பவற்றைத் தாண்டி எமது அடுத்த சந்ததியினருக்கு இவ் வெறும் உணர்வுகள் கொந்தளிப்பு / கொதிநிலை வடிவங்களை உட்செலுத்தாது ஆரோக்கியமான சிந்தனைக்கு, எதிர்கால இருப்புக்கு வழியேற்படுத்தும் பொறிமுறைகளை ஈழத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் ஈழ அரசியல் பிரக்ஞை உடைய முன்நாள்- இந்நாள் போராட்டவாதிகளாகட்டும், தளத்தில் செயற்படும் அரசியல் தலைவர்களாகட்டும், கட்சிகளாகட்டும், ஆரம்பித்து இருக்கின்றார்களா...?

அதிகாரத்தின் போட்டியாகவும், என் இயக்கம் பெரிது ,உன் இயக்கம் சிறிது, தியாகி-துரோகி, கொலை-வதம் என்ற சொல்லாடல்களுக்குள் மட்டுப்படுத்தபட்டதாகவே எமது அடுத்த சந்ததியினரை சிந்திக்கத்  தூண்டிக் கொண்டிருக்கின்றோம்.

இன்று மத்தியை தாண்டிய பிராந்தியங்களில் ஏனைய இன அதிகாரம் வலுப்பெற்று வருகிறது. அது மெல்ல மெல்ல உருத்தெரியாமல் ஒரு இனத்தின் இருப்பை அடியோடு இல்லாமற்செய்யும் நீண்டகாலத் திட்டத்தின் ஊடாக செயன்முறைப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் சில உணர்வு வழிப்பட்ட சொற் பிரயோகங்களை அன்றாட பேசுபொருட்களாக்கி தமிழ் மக்களை என்றுமே ஒரு விளிம்புநிலையில் வைத்திருப்பதையே தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் விரும்புகின்றனர். இதனை உணர்ந்தும் உணராமலும் கண்மூடித்தனமாக இலாபங்கள் தேடும் படித்த தமிழ் வர்க்கத்தினரும் இலகுவாக இனவாதம், பெருமிதப்போராட்ட வரலாறு பேசி அதனை நடைமுறைச் சாத்தியங்கள் அற்ற நியாயங்கள் கொண்டு நிறுவி என்றுமே போராட்டத்தின் பங்காளர்களாக இருக்கின்ற இருக்கப் போகின்ற மூன்றாம் நிலை மக்களை உணர்வு ஊட்டல்களின் ஊடாக தமது சொந்த இருப்பை தக்க வைத்து கொண்டிருக்கின்றனர்.
எமது மக்களின் எதிர்கால இருப்பைப் பேணக்கூடிய, வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய  செயன்முறைகளை எவரும் காத்திரமாக முன்னெடுக்கவில்லை.

வட மாகாணத்தின் வன்னி பிராந்தியத்திலும் கிழக்கில் அம்பாறை , மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மூன்றாம் நிலை மக்களின் வாழ்வாதாரங்களின் அடிப்படைக் கட்டுமானங்கள் சீர்குலைந்து போய் இருக்கின்றது. அவர்களது அன்றாட தேவைகளை பேசு பொருளாக்கி பேரம் பேசும் ஒரு வகையான இந்திய தமிழ் நாட்டு அரசியல் பழக்க வழக்கம் உருவாக்கப்படுகின்றமையும், மெல்லென எம்மை ஆக்கிரமிப்பதையும் உணர நாம் முயற்சிக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில்-புலம்பெயர் நாடுகளில் இருந்துகொண்டு இணையங்களின் ஊடாக அன்றாடம் வெற்றுகதையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றோம். யாருமே இணைந்து செயல்படுவதற்கு, அல்லது ஆதரவளிக்க தயார் நிலையில் இல்லை. செயற்படுபவர்களை அரசியல் அடையாளப்படுத்துவதிலும் துரோகியாக்குதலிலும் காலத்தை கடத்திக் கொண்ருடிக்கின்றனர்.

வாழ்வாதாரத்துக்கான நீண்டகால திட்டங்களாகட்டும்,அரசியல் இருப்புக்கான பொறிமுறைகளாகட்டும், இன்றைய இளைஞர்களை நாளைய தலைவர்களாக்குவதிலும் விவாதப் பொருள்கள் ஆகிவிட்ட உணர்வு, தேசியம் உரையாடல்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளனவா...??

அன்றாடம் அதிகார தளங்களின் போக்குகள் எமது இருப்பை செல்லரித்துக் கொண்டு இருப்பதை இலகுவாக கடந்து செல்கின்றோம். செயற்பாட்டுத் தளங்களில் உள்ளவர்களை சிந்தனை பிரக்ஞை அற்றவர்களாக்குவதற்கும், கூட்டு உணர்வு அற்றவர்களாக்குவதற்கும் அரசியல்/இயக்க அடையாளங்களை வைத்து சமூக முன்னேற்ற செயற்பாடுகளை வெள்ளையடித்துவிடுகின்றோம்.
தனிமனித அரசியல் விருப்பு என்பது அவரது சிந்தனைமட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அவரை மக்கள் நலன்சார்ந்து சிந்திக்க விடாத மனோபாவத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தும் தியாகி-துரோகி அளவுகோல்கள் எதிர்நிலைக் கருத்துகளை ஜீரணிக்கும் மனோபாவத்தை அல்லது ஜனநாயக நீரோட்டத்தை உள் வாங்கும் மனோநிலையை இன்றும் ஏற்படுத்தவில்லை.

எனவே எமது இருப்புக்கான தேவை உறுதிப்படுத்தப்படாமலே.. 70 வருடங்களும் கடக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான பொறிமுறையை உருவாக்க வேண்டிய கடமை எங்கள் எல்லோரையும் சார்ந்து இருக்க நாம் மீண்டும் மீண்டும் உணர்வு வயப்பட்டு எமது அடுத்த தலைமுறையையும் போராட்ட நிர்ப்பந்திக்க போகின்றோமா..?
இனவாத கட்டுக்குள் எம்மை முடக்கி கொண்டு ஒரு இனத்தின் விடுதலை நோக்கிய பயணத்தில் ஏற்பட்ட   இன அழிப்பை விமர்சனத்திற்கோ அல்லது மறுவாசிப்பிற்கோ உட்படுத்த முனைகின்றோமா...?

தமிழ் சமூகத்தின் வாழ்வியல் இருப்பு படிப்படியாக கேள்விக்குறிகளாக்கப்படுகின்றன. எதிர்காலம் மோசமான சீர்குலைப்புக்களை எதிர்நோக்கியிருக்கின்றது. இராணுவ, பெரும்பான்மை அதிகாரம் அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக  போராடும் நிர்ப்பந்தம் கொண்ட வரலாறாகவே எமக்கான வரலாறு கட்டமைக்கப்பட போகின்றதா...??

இதனால் தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் கருதிய செயற்பாடுகள் பன்முக ரீதியில் வெளிப்பட வேண்டிய அவசியம் , நமது சிந்தனையின் ஆழமும், புலமை வீச்சும் ஒருங்கே தம் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கான திறவுகோல்களை வெளிப்படுத்த வேண்டும். அரசியல் -புலமை செயற்பாடுகளில் நாம் முகம் கொடுத்த - முகம் கொடுத்து வருகின்ற பிரச்சினைகளின் பன்முகத்தன்மையை, அதன் ஆழமான கருத்தாடல்களையும் விளங்கி கொள்ள நாம் எவ்வளவு தூரம் முற்பட்டுள்ளோம். என திரும்பி பார்க்க வேண்டியது காலத்தின் விசையுந்தலில் எமது எதிர்கால தலைமுறையின் இருப்பு க்கு தேவையான ஒன்றே.

#தர்ஷன் அருளானந்தன் #

Comments

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"