பாடசாலைக் கல்வியை சமுதாயத்திற்கான கல்வியாக வென்றெடுக்க தவறுகின்றோமா....??



கற்பிக்கும் மையங்களின் பரிணாம வளர்ச்சி:

எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளும் வகையிலான பரிணாமத்துடன் குழந்தைகள் பிறக்கின்றன; இயற்கை விஞ்ஞானத்தில் இதற்கான ஆதாரம் உண்டு. பாடசாலையில் நுழைவதற்கு முன் தாய்மொழியை அவர்கள் கற்று விடுகின்றனர்.
 அப்போது, பாடசாலை என்பது எந்த சூழலில் அமைய வேண்டும்?
 குழந்தைகளிடையே இயற்கையாக அமைந்துள்ள கற்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும் அல்லவா?
 குழந்தைகளை மையமாகக் கொண்ட கற்கும் சூழலை, 1907ல் முதன் முதலாக ஏற்படுத்தியவர், இத்தாலியை சேர்ந்த மரியா மாண்டிசொரி.

 “கற்பது என்பது, மனிதன் தன்னிச்சையாக மேற்கொள்ளும் நடவடிக்கை. வார்த்தைகளை கொண்டு மட்டும் கல்வியை அடைய முடியாது; அனுபவத்தால் அறிந்து கொள்வது தான் கல்வி’

 என்று அவர் நம்பினார்.

இந்த மாற்றத்தை, கல்விப் புரட்சி என்று கூறக் கூடாது;
 பாடசாலைக் கல்வியின் பரிணாம வளர்ச்சி என்றே கூற வேண்டும்! செயல்வழிக் கற்றல் , கற்பித்தலில் தொடங்கி கற்றல் வரை, பல முக்கிய படிகளை தாண்டி வந்துள்ளது. பாரம்பரிய வகுப்புகள், கற்பிக்கும் சூழ்நிலையில் அமைந்திருக்கும்.
ஒரு ஆசிரியர் அதிகாரத்துடன் பாடம் நடத்தி கொண்டிருப்பார். அவர் நடத்தும் பாடத்தை, மாணவர்கள், பயத்துடன், சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியாத வகையில் கேட்டு கொண்டிருப்பர்.
செயல்வழிக் கல்வித் திட்ட வகுப்பு, கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. இங்கு, மாணவன் தான் ஹீரோ; தன் சொந்த முயற்சியில் பாடங்களைக் கற்றுக் கொள்ள அவனுக்கு முழு அதிகாரம் உண்டு. கற்கும் முறையில் அவனுக்கு உதவுவது மட்டுமே ஆசிரியர் பணி. இது, மிகவும் நுட்பமான, ஆனால்,
குறிப்பிடத்தக்க மாற்றம். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது?

ஒரே நாளில் நிகழ்ந்ததா? இதற்கு யார் யாரெல்லாம் பொறுப்பு?

 இது குறித்து வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும் போது, இது புரட்சியல்ல; நூறு ஆண்டுகளாக முயன்று அடித்தளம் போட்டு, அதன் காரணமாக உருவான பரிணாம வளர்ச்சி என்பதை நாம் உணர்வோம்.

வளர்ந்து கொண்டிருக்கும் மரம், மண்ணுக்கு அடியில் தன் வேரை பரப்பி, பலமான அடித்தளம் அமைக்கும்; பலமான வேர் அமையும் போது தான், மரமும் செழிக்கும். நம் கண் முன் தெரிவது, மண்ணுக்கு மேல் உள்ள மரம் தான்; பலமாக அமைந்துள்ள வேரை அரித்துக் கொண்டிருக்கும் பல அதிகார மையங்கள் சார்ந்த பிரச்சனைகளை யாரும் காண்பதில்லை.

கல்வி என்பது ஒரு வாழ்க்கை; கற்றுக்கொள்வதற்கு வயது வரம்பு என்பது கிடையாது. அதைப்போல் மாணவர்களிடமிருந்தும் ஆசிரியர்கள் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. எனவே அந்த வகையில் ஆசிரியர் மட்டுமல்ல மாணவர்களும் பல விடயங்களை ஆசிரியர்களுக்கு கற்பிப்பவர்களே.

மாணவர்களுக்கு நாம் சரியாக சொல்லித் தரவில்லையானால் அது தேசதுரோகத்துக்கு ஒப்பானது.
ஆசிரியர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பிவிட்டால் வகுப்பறை வசந்தமாகும்.
தொழிற்சாலைகள் உள்ள ரோபோக்கள் போல, குழந்தைகள் எழுந்து நின்று, “குட்மார்னிங் சேர்…’ சொல்வதில்லை.
மாறாக, தங்கள் செயல்பாடுகளில் உன்னிப்பாக ஈடுபடுகின்றனர். இது, வகுப்பறைகளில் இரண்டு பெரிய, நல்ல மாற்றங்களை உணர்த்துகின்றன; கற்கும் முறையில் குழந்தைகள் ஆழமாக ஈடுபடுகின்றனர் என்பதும், பழைய முறையிலான அடிபணியும் கலாசாரத்திலிருந்து, பள்ளிகள் மாறிவிட்டன என்பதும்!

மாணவர்களுக்கு ஈடுபாட்டுடன் கற்பித்து அவர்களின் ஈடுபாட்டையும் கொண்டுவருவதாகக் கல்வி இருக்க வேண்டும். நமது வீட்டில் நம் பிள்ளைகளுக்குத் தேவை என்ன என்பதை அறிந்து அதற்குகந்த வகையில் ஒவ்வொரு பிள்ளையும் விரும்புவதை வழங்கி அவர்களைப் பராமரிப்பது போல தங்களிடம் பயிலும் மாணவர்களின் தேவை மற்றும் போதாமைகளை உணர்ந்து அதற்குகந்த வகையில் கற்பிப்பவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

பெற்றோர்கள் வெறுமனே அன்பு, பாசத்தை மட்டும் செலுத்தினால் போதாது. எல்லா பெற்றோர்களுக்கும் ஆசிரியர் பயிற்சி தர வேண்டும். ஏன், எதற்கு? என்ற கேள்விகளுடன் வரும் குழந்தைகள், பாடசாலையில் சேர்ந்த பிறகு, பல்கலைக்கழக  படிப்பு முடியும் வரை அவ்வாறு கேட்பதை மறந்துவிடுகின்றன. இந்த மௌன கலாசாரத்தை உடைக்க வேண்டும். அப்போதுதான் கற்றல் விசாலப்படும்.

ஆனால் இங்கு குழந்தைகள் மையக் கல்வி என்பது அதிகாரத்தை மையப்படுத்திய கல்வி முறையாக வே காணப்படுகிறது. கல்வி அமைச்சர்கள் கூறுவதை செயலாளர்கள் செய்கின்றார்கள் செயலாளர்கள் கூறுவதை கல்விப்பணிப்பாளர்கள் செய்கின்றனர் கல்விப்பணிப்பாளர் கூறுகின்றதை அதிபர்களும் ஆசிரியர்களும் செய்கின்றார்கள். யதார்த்தத்தில் ஆசிரியர்கள் சொல்வதைத்தான் மாணவர்கள் கேட்க வேண்டும்.

பாவம் அப்பாவிகள் குழந்தைகள் கூறுவதைத்தான் இங்கு கேட்பதற்கு யாருமே இல்லை...? (சிறுவர் உரிமைகள் ஆணைக்குழுவும், பொலீஸ், நீதிபதிகள் இருக்கின்றார்கள்...? அது வேற கதை)

போட்டிப்பரீட்சையின் சித்தி வீதத்தில் தான் குறிக்கோள் கொள்கின்றனர். இம்முறை "சித்தி வீதம்" அதிகரிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவுக்கு அமைய குழந்தைகள் சித்திரவதை செய்யப்படுகின்றனர். (மனநிலை விவகாரங்கள் கொண்டவர்களாக எதிர்காலத்தில் உருவாக்கப்படுகின்றனர்.) இதனை விட ஒரு உரிமை மீறல் மனித குலத்தில் நடைபெற்று விட முடியுமா...??

மொத்தத்தில் இங்கு இயக்கப்படும் கல்விமுறைகள் எத்தனை சீர்திருத்தம் , கற்பித்தல் உத்தி முறைகள், நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் குழந்தைகளை மையப்படுத்தி இயக்கப்படவில்லை. அது ஆசிரியரையும் மையப்படுத்தவில்லை. மாறாக அதிகாரத்தையும், அதிகாரங்களையும் மையப்படுத்தி இயங்கும் கல்வி முறைமை. முரட்டுத்தனமாய் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக பரீட்சை சித்திவீதங்களை குழந்தைகள் மீது ஆசிரியரைக் கொண்டு திணிக்கப்படும் முறைமை. இச் செயற்பாடே ஒருவரை ஒருவர்(ஆசிரியர்-மாணவர்) எதிர் நிலை கொள்ளச் செய்கின்றது. ஆசிரியர் மீதான மனோநிலை குறிப்பிட்ட பாடத்தின் மீதான வெறுப்பானது ஆசிரியர் மீதான குழந்தையின் ஆத்திரமாகவும் மாறிவிடுகின்றது.

இந்தக் கல்வி முறை சமூக அணுகுமுறையில் ஏற்படுத்திய கோளாறு, முற்றிலும் வணிக மயமாகிப்போன கல்வியின் அவலம், முழுக்க முழுக்க பயிற்சி மட்டுமே தரப்படுகின்றபோது வாழ்க்கையின் பிரச்சினைகள் குறித்து உரையாடுவதற்கு இக் கல்வியில் இடமில்லை.

அநீதிகளுக்கு எதிராக ரௌத்திரம் பழகச் செய்வதாகத்தான் கல்வி முறை இருக்க வேண்டும். சமூக மாற்றத்தை இந்தக் கல்வி முறை சொல்லித் தர வேண்டும். அவ்வாறு இருக்கிறதா? என்றால், பாடத் திட்ட முறையில் ஓட்டை இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதி தேவை, மதம் தேவை, பேதங்கள் தேவை என்று இந்தச் சமூகத்தை அப்படியே வைத்திருக்கிற மனோபாவத்தை அரசு கொண்டிருக்கிறது. அதனால், அரசு தனக்கேற்ற கல்வி முறையை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறது. சமூக மாற்றத்துக்கான கூறுகள் பாடத் திட்டத்தில் இல்லை. அது வந்துவிடாமலும் பாதுகாக்கப்படுகிறது.

#தர்ஷன் அருளானந்தன்#

தொகுப்பிற்கு உதவிய இணையங்கள்
1)தாய்மொழி
2)வல்லமை
3)விழித்தெழு இளைஞர் இயக்கம்
4)தமிழ் கனடியன்
நன்றி கள் - ஆயிஷா இரா. நடராசன்

Comments

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"