மதங்களின் அரசியல்



இன்று சமயங்கள் பற்றிய எமது ஈழ சமூகத்தின் பார்வை ஆதிக்கம் உள்ளதாகவும் ஒரு குழுமத்தின் இருத்தலுக்கான போராட்டமாகவும் போட்டியை மையப்படுத்திய பணம் சிந்தும் கேளிக்கை மையங்களாகவும் மாற்றம் பெற்றுவருகின்றமை பல் அவதானங்களின் ஊடாக பெற முடியும். சமயநிறுவனங்கள் இலகுவில் சாமானியர்களது அன்றாட வாழ்கையை அச்சுறுத்துவனவாகவும் உள்ளன. இன்றைய அடையாளங்கள் கடந்தகாலத்தின் மீது செலுத்தும் நியாயம் அற்ற கரிசனை வரலாற்றுப்பூர்வமான ஆதிக்கத்தை மாற்றி இருந்தாலும். இவ் வடிவங்கள் ஏன் மாற்றப்பட்டுக்கொண்டு இருக்கின்றது...?
இங்கு வடிவங்கள் மாறுதல் பற்றி நிறையவே சிந்திக்கவேண்டி உள்ளது.
1) நீண்டகால உள்நாட்டு யுத்தத்தால் ஏற்பட்ட மனநிலை- கேளிக்கைகளுக்கான இயல்பான ஆழ்மன உந்துதல்.
2) சுகந்திரத்தை அனுபவிப்பதான பாவனை-அடக்குமுறைகளிற்கு உட்பட்டதாக உருவகித்தல்
3)பணம் சார்ந்த போட்டி-புலம்பெயர் தேசத்தில் இருந்து பெறப்படும் மிகைப்பணம்
மேற்குறிப்பிட்ட வடிவங்களில் ஏற்படுகின்ற மாற்றங்களிற்கான சமூக பொருத்தப்பாடுடைய கேள்விகள் பலவாறு கேட்கப்படலாம்.

மதம் இன்றைய சமூகத்தில் இருவேறு எண்ணக்கருக்களின் மீது மையங்கொண்டு முனைப்புப் பெறுகின்றது.
1) மத அடிப்படைவாதம்(Religious fundamentalism)
2) மதச்சார்பின்மை(secularization)
இவ்விரு எண்ணக்கருக்களும் நேர், எதிர் முனைகளாக ஒன்றை ஒன்று எதிர்த்து மேற்கிளம்ப முயன்று கொண்டு இருக்கின்றன. ஆனால் இன்று உலகின் மேன்மை வெளிப்பாட்டுக் குரலாக ஒலித்துக் கொண்டு இருப்பது மத அடிப்படைவாதமே. மூன்றாம் உலக நாடுகளின் சமூகப்புலங்களில் மிகையான தாக்கத்தினை ஏற்படுத்தி அவற்றிற்கிடையிலான முரண்பாட்டிற்கு தோற்றுவாய்யாக காணப்படுவது மத அடிப்படைவாதமாகும். இவ் மதஅடிப்படைவாதம் மதத்தின் சில கூறுகளை ஆவேசமாக மிகைப்படுத்துகின்ற போக்கையே குறித்து நிற்கின்றது. பழமைபேணும் பண்பு, மதசகிப்புத்தன்மை இல்லாமை, பிற்போக்குச் சிந்தனை, தீவிரப்போக்கு, பலத்கார வழிகளைக் கையாண்டு தமது கருத்துக்களை நிலைநிறுத்துதல் போன்ற பல விடயங்களை மத அடிப்படைவாதத்தில் இனம் கண்டுகொள்ளலாம்.''Religion is an illusion'' என்று கூறும் Karl Marx- 'கடவுளில் இருந்து மனிதன் அந்நியப்படுவதை சமயம் ஊக்குவிப்பதால் தான் காணும் கம்யூனிச சமுதாயத்தில் சமயம் வலுவிழந்து போகும்' என்று விளக்குகின்றார்.
புவர்பாக் -'தனக்குள் ஏலவே சுயமாக உள்ளதை மறந்து அவற்றை வெளியில் தேட முற்பட்டதன் விளைவே சமயங்கள்'
மத அடிப்படைவாதம் கொண்டுள்ள அதி தீவிர போக்கை நவீன உலகின் அழிவுச் சக்தியாகிவிடாது தடுக்கும் முயற்சியாகவே மதச்சார்பின்மை வன்மை பெற்று செயலுருவாக்கம் ஆகுவதற்கான காரணமாக கொள்ளலாம்.

பொரும்பாலான சமயங்கள் மெய்ப்பிக்காமலே ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டவையாக இருந்த போதிலும் மனிதனது சமூக இயங்கியல் தன்மையில் ஏற்படுகின்ற மனச்சோர்வு, ஏக்கங்கள், பதட்டநிலைகள் என்பவற்றிற்கு வடிகாலாகவும் இருக்கத் தவறவில்லை. கூட்டு உணர்வு(collective consciousness), கூட்டு பிரதிநித்துவம்(collective representations) போன்ற சமூக ஒருங்கிசைவான இயக்க படிநிலைகளிற்கு சமயநிறுவனங்கள் பங்குசெய்கின்றன.பல்நிலை வழிகாட்டுதல் மூலம் சமூக கட்டுப்பாடு, விழுமியங்கள் என்பவற்றை போதிக்கும் போர்வைக்குள்ளேயே சமயங்கள் சமூக சமமின்மை, பால்நிலை வேறுபாடுகளை பிரதிபலிப்பதாகவும் அவற்றை சட்டபூர்வமானதாக நியாயப்படுத்தவும் முனைகின்றது. ஆக மொத்தத்தில் சமயத்தின் அரசியல் என்பது அடிப்படைவாதம்(fundermentalism) , பழமைவாதம்(conservertism), மதப்பன்மைவாதம்(religious pluralism), போன்ற கருதுகோள்களிற்கும் பகுத்தறிவுவாதம்(rationalism), தனித்துவம்(induvidualism), மதச்சார்பின்மை(secularism) போன்ற எண்ணக்கருக்களுக்குமான போட்டிகளிற்கு இடையிலான நிலையற்ற தடுமாற்றமான அரசியலாகவே சமயம் காணப்படுகின்றது.

#தர்ஷன் அருளானந்தன்#

உசாத்துணைகள்
1)Wulff, David.M.(1991)-Psychology of Religion, N.Y.John willy and sons
2) Gould, A(1978)-The secularisation of social order, Chanakya publications, Delhi

Comments

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"