" மனிதன் மனிதர்களைத் தேடல்- சிவப்பு நிற பலூன் சொல்ல வந்த கதை."



நடப்பியல் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு கற்பனையில் உறவாடி நேசிப்பின் நுண் உயிர் அணுக்களை ஸ்பரிசிக்கும் ஒரு குட்டிச் சிறுவனுக்கும் ஒரு சிவப்பு நிற பலூனுக்கும் கிடையிலான காட்சிகளை பேசுகின்றது இப்படம்.
 அதே நேரத்தில் முற்றிலும் இயந்திரமாய் மாறிப்போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் இப்படத்தைப் பார்க்கும் போது நாமும் இழந்துவிட்ட குழந்தைப் பருவத்தை  நிச்சயம் பெறுவோம் என்று  உறுதியாகச் சொல்ல முடியும். 1956 இல் வெளியான இப்படம் கேன்ஸ் ,ஆஸ்கர் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இப் படத்தை இயக்கியவர் ஆல்பர்ட் லாமோரைஸ்."

குழந்தை உளவியலையும், பெரும்பான்மை விருப்புக் கொண்ட மனிதர்களிற்கும் சிறுபான்மை விருப்புக்கொண்ட மனிதர்களிற்கும் இடையிலான சிக்கலையும், மென் உணர்வும், நட்பை உயிர் கடந்து ஆராதிப்பவர்க்களை நேர் எதிர் சிந்தனை கொண்டவர்களால் துரத்தி துரத்தி இம்சிக்கப்படுவதையும், " அறிவு" என்ற சுவரை சில கண்மூடித்தனமான நம்பிக்கைகள், கேள்விக்குற்படுத்தபட முடியா கோட்பாடுகளை கொண்டு இருப்பவர்களால் இலகுவில் தாண்டி வெளிவர முடிவதில்லை என்பதையும், அழகான 60 வருடங்களிற்கு முந்தைய பாரிஸ் நகரத்தின் முன்னிலையில் 34 நிமிடங்களில் காட்சிப்படுத்திய ஒரு படைப்பு தான்.' The red baloon'.

குழந்தைகள் உளவியலூடாக பெரும் அரசியல் கதையாடலை குறி இட்டுச் சென்றுள்ளது. 1956 களின் தொழில்நுட்பத்தில் இவ் குறும்படம் வியத்தகு உத்திகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டமை இன்றைய நவீன சினிமா நுட்பத்திற்கு ஒரு அனுபவ பாடமாகவே நிச்சயமாக இருந்து இருக்கும்.

"சாதாரணமாக பலூன்களை வைத்துக் கொண்டாடும் மனநிலை என்பது சிறுவர்களை பொறுத்தவரை அதனுடன் உறவாடி உடைப்பதில் முடிந்து விடுகன்றது."- இது ஒரு பெரும்பான்மை மனோ நிலை விருப்பு.
பொதுப்புத்தி மனோநிலைக்கு அப்பால் ஒரு சிறுவன் சிவப்பு நிற பலூனுடன் உறவைக் கொண்டாடி அதன் உடன் ஆழ்மன அன்பு செலுத்தலும். அவ் பலூன் அவன் மீது கொண்ட பிரேமமும் பலூனை ஒரு உயிர் பொருள் ஆக்கிய வினைப்படு நிலை(transitivity) ஒரு சிறப்பான உத்தியாக கையாளப்பட்டுள்ளது. இருவரின் அன்பும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் மனநிலைக்கு இட்டுச் செல்ல பொதுப்புத்தியின் பால் செயலூக்கம் கொள்ளும் மனிதர்கள், சிறுவர்களால் பலூன் உடைக்கப்படும் போது அதனுடைய முக பிரதிபலிப்புக்கள் மனதை தொட்டுக் செல்கின்றன.

பலூனின் இறப்பின் சோகத்தில் ஆழ்ந்த சிறுவனுக்கு ஆறுதல் சொல்ல பாரிஸில் உள்ள எல்லா பலூன்களும் கூட்டம் கூட்டமாக அந்த சிறுவனிடம் சென்று சேர்கின்றன. பலூன்கள் மீது அவன் கொண்ட காதலால் குதூகலம் அடைகின்றான். அக் குதூகலத்தின் உச்ச மாக பல வர்ண பலூன்களோடு வானத்தில் பறக்கின்றான்.
" உலகின் அபத்தஙகளை சுமந்து செல்பவர்களிற்கு வானத்தில் பறக்கும் அபூர்வமான வாய்ப்பு கிடைப்பது இல்லை."
"பெரும் அன்பும், செயலூக்கமும், அர்ப்பணிப்பும் கொண்டவர்கள் கட்டுக்களை உடைத்து சுதந்திரமாக வானத்தில் பறக்கும் வாய்ப்பு கிடைத்து விடுகின்றது."

படைப்புக்களின் தன்னியல்பானதும், சுயாதீனமாகிய இயல்பு அதற்குள் உள்ளமைந்த தனிமங்கள், பண்புகள்,விழுமியங்கள் என்பவற்றை ஒரு பலூனை வைத்து மிக நுணுக்கமாக கூறிச்சென்றுவிடுகின்றது. விரைந்து வளர்ந்து நிகழும் உலகமயமாதலில் தொழில்நுட்ப பரவலும், செல்வக்குவிப்பில் ஏறுமாறான நிலமைகளும் தனிமனிதர்களிற்கிடையே தோற்றுவித்த அறநிலை நோக்கையும் , அந்நியமாதலையும் குழந்தைகளின் இயல்பைக் கொண்டு படைத்து " கைவிடப்பட்டமை" என்ற அவலத்தில் முகிழ்ந்த தனிமனித இன்பங்கள், சிதறிய மன உணர்வுகளின் ஏக்கங்களை, பொது வாழ்வின் பிரத்தியேக வாழ்க்கை முறையும், சேர்ந்து இயங்கி அடக்குமுறைக்குள் வைத்து இருந்தாலும் அவர்கள் அகப்புலக் காட்சியில் தங்கள் இருப்பை விசாரணைக்கு உள்வாங்கிக் கொண்டே உணர்வுகளின் நுண் அதிர்வுகளில் வாழ்ந்து விடுகின்றனர்.

"சிவப்பு பலூன்" குழந்தையும் பலூனும் கொண்ட கதையல்ல. மனிதன் மனிதரகளைத் தேடிய கதை."


# தர்ஷன் அருளானந்தன்#
நன்றிகள்- "ஜீவநதி" நவம்பர் 2016

Comments

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"