எனது பார்வையில் ''#லெனின் சின்னத்தம்பி'(நாவல்)



குறுகிய வட்ட முதலாளித்துவ சிந்தனைகளால் பிரசவிக்கப்பட்ட, 'மேன்மை மனிதர்களால்' கட்டமைக்கப்பட்ட மேற்கத்திய தொழில் கூடங்களில் முதலாளி-தொழில் வர்க்க நிலை பிரிவு-தொழிலாளி என்ற தளங்களில் தனி மனிதனாக-கடைநிலை வர்க்க தொழிலாளியாக லெனின் சின்னத்தம்பி என்ற பாத்திரப்படைபின் அக நெருக்குதல்களை தனது நாவலின் மூலம் சித்தரித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர்.
இன்றைய பின்-நவீனத்துவ எழுத்துக்களில் புரையோடி நிற்கின்ற போராட்டத்தின் முன்-இடை-பின் வாழ்வியலை விட்டு ஜரோப்பிய தொழில்கூடங்களில் புலம்பெயர் தமிழர்கள் சுரண்டப்படுகின்ற முரண் நிலை ஒரு தளத்தில் இருந்து கூறப்பட்டு இருக்கின்றது.
பல்வேறுபட்ட இனக்குழுமங்களை சேர்ந்தவர்களின் தொழிலாளித்துவத்தில் காணப்படுகின்ற முதலாளித்துவ மனப்பாங்குகளை பெரும் அவதானிப்புகள் இன்றி இலகுவாக செய்துவிட முடியாத ஒன்றே! ஆனால் இவற்றை எல்லாம் உடைத்து எறிந்து தொடர்ச்சியாக ஒரு சிறிய 'உணவு உற்பத்திகூடத்தில்' ஒரு கடைநிலைத் தொழிலாளியின் பெரும் அவதானிப்புக்களின் தொகுப்பாக கதை? நகர்த்தபட்டுள்ளது ஒரு விதமான சலிப்பையும் ஏற்படுத்தவும் தவறவில்லை.

புலம்பெயர்ந்த நாடுகளில் எம்மவர்கள் வாழ்வியல் ஒரு இயந்திரத்தனமான-கடிகாரத்தின் முட்களிற்குள் சிக்கவைக்கப்பட்டு தமது வாழ்வை  வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பது 'மூன்றாம் தலைமுறையாக இலங்கையில்' வாழ்ந்து கொண்டிருப்பவர்களிற்கு
 இந் நாவலின் ஊடாக வலியை ஏற்படுத்தியிருக்கின்றது.
'என்ட மகன் வெளிநாட்டில' என்று கூறித் திரியும் தாய்,தந்தை உறவு சுற்றத்திற்கு அவர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள சிலுவையின் கனதி புரிந்து கொள்ளப்பட்டு இருக்கின்றது.நாவலில் வருகின்ற சிறிய சம்பவங்களின் ஊடாக.
இன்றைய இலங்கைதமிழர்களிடையே காணப்படும் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தினை நாவலில் மிகவும் நாசூக்காக உடைத்து போட்டிருக்கின்றார் ஜீவமுரளி பின்வரும் இறுதி வரிகளினுடாக...

''லெனின் சின்னத்தம்பி கையை எட்டி மனைவியின் தலையை கோதிவிட்டார். அந்தச் செய்கை திருமதி வொல்வின் மார்பகங்களை அக்சல் குறுப்ப தொட முயன்றது போலவேயிருந்தது. தலையைக் கோதிய கை ஆழ்ந்த தூக்கத்திலும் திருமதி லெனின் சின்னத்தம்பியால் மிகப்பலமாக தட்டிவிடப்பட்டது''

மணிக்கம்பிகளுக்குள்ளும்,சமையல்கூட பாத்திர ஒலிகளிற்கும் இடையில் ஒரு அன்பான-திருப்திகரமான குடும்ப சமநிலையை பேண முடியாது தோற்கடிக்கபட்டு இருக்கின்றார் லெனின் சின்னத்தம்பி. அவரின் பதினைந்து வருட தொழில் அனுபவம் இறுதிவரை அவரை ஒரு நல்ல 'சமையல்காரனாகவோ' அல்லது நல்ல 'கணவனாகவோ' உருவாக்கி விடவில்லை. இன்றைய கடிகார-இயந்திரமயமாதலில் சிக்கவைக்கப்பட்ட ஓவ்வொரு மனிதர்களினதும் துயரமாகவே உள்ளமையை எடுத்துக்காட்டிய தோழர் ஜீவமுரளியின் எழுத்து காலமாற்றத்தின் வெற்றியே!

'சாப்கோஸ்கி' என்ற முதலாளிகள் எப்படி தன் நிறுவன இலாபத்திற்காக பயன்படுத்தப்பட்ட ''சண்டைக்காரர்களை'' கசக்கி எறிந்தார்களோ, 'அக்சல் குறுப்பவ' என்னும் நிர்வாகிகள் எவ்வாறு நிறுவன முதலாளிக்கு விசுவாசமாக நடித்து தாங்கள் இருப்பை தக்கவைத்து இறுதியில் 'திவாலாகி' போகின்றார்களோ, கடைநிலை தொழிலாளிகள் எப்படியாக கசக்கி பிழியப்படுகின்றார்களோ, இவ்மூன்று மைய கதைத்தளங்களும் இன்றைய தனியார், அரச வேலைத்தளங்களில் ஓவ்வொரு பணியாளர்களும் அன்றாடம் அனுபவிக்கும் ஒன்றே!
ஒரு பாடசாலையில் கூட நாவலில் கூறப்பட்ட சுரண்டல்களையும்,அடிமைத்தனங்களையும் சர்வசாதாரணமாக காணக்கூடியமை அவல நிலமையே! பாடசாலைகள் -அறிவு உற்பத்தி கூடங்களில் இப்படியான சிந்தனை மைய மாணவர்கள் வெளியீடுகளாக விடுகின்றமை பல லெனின் சின்னத்தம்பி போன்ற கடைநிலை தொழிலாளர்களை ஐரோப்பாவில் மட்டுமல்ல ஈழத்திலும் உருவாக்கி, இட்டு செல்கின்றன...

Comments

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"