தந்தி அறுந்த தம்புராவில் சுருதி மீட்ட முனையும் நாரதர்கள் ..................................................................


ஆய்வரங்குகள், பேருரைகள், கலைநிகழ்ச்சிகள், கண்காட்சிகள் என வலயங்கள் தோறும் ஆரவாரங்கள் ஒருபுறம்,ஆசிரியர் மாநாட்டிற்கு கலந்து கொள்ளாதவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் என அட்டகாசம் ஒருபுறம் . தொழில்சார் வாண்மை ,  தொழில் சார் ஊக்கம், நவீன கற்பித்தற் சாதனங்களின் மூலம் கற்பித்தல், கற்பித்தல் அனுபவம் என முழக்கங்கள் ஒருபுறம். இந்த மாதிரி மாநாடுகள்  தவறானவையா? சரியானவையா? என்பதை விவாதிப்பதற்கு முன்  இது தொடர்பில் சில  விடயங்களைத் தெளிவுபடுத்துவதே எனது நோக்கம்.

பாடசாலைகளில் நடைபெறும் கற்றல், கற்பித்தற் செயற்பாடுகளுக்கு இன்றியமையாத தேவைகளாக பௌதிக மற்றும்  மனித வளங்கள்  உணரப்பட்டாலும், அவற்றின் பிரயோக முறையானது  நகரங்கள், கிராமங்கள் சார்பில் பெரிதும் வேறுபடுகின்றது. இவை சார்ந்து, மாணவர் மையத்தில் இருந்து ஆசிரியர் மாநாடுகள் நடாத்தப்பட்டனவா? ஆசிரியர்கள் சார்ந்த வாண்மை விருத்தி மற்றும்  குறைந்தபட்சமாவது பின்தங்கிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இம்மாநாடுகள் வளர்க்கப்பட்டனவா ?  ஆசிரியர் மாநாட்டின் நோக்கம் என்பது ஏதேனும்  வரையறைகளுக்கு உட்பட்டதா? இல்லையேல் ஒதுக்கப்பட்ட பணத்தை முற்றுமுழுதாகச் செலவிட்டுக் காட்டவேண்டிய கட்டாயத்தில் நிகழ்த்தப்பட்டதா? என்ற பெரும் கேள்விகளைக் கண்முன்னே நிறுத்திச்சென்றிருக்கிறது  அண்மையில் நடைபெற்று முடிந்த வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு.

பெரும் தொகையானதும் ,அருமையானதும், தொடர் பயன்பாடுகள் உடையதுமான வளங்களை(மனித, பௌதிக, நிதி ,நேரம்) ஈடுபடுத்தி ஆசிரியர் மாநாடு என்ற போர்வையில் நடாத்தப்பட்ட  ஒன்றுகூடல்களின் வெளியீடு யாது? ஏற்கனவே மிகவும் கஷ்ட வலயமான இவ்வலயத்தில் ஆசிரியர்கள், பெரும் சிரமத்தின் மத்தியிலேயே பணியாற்று கின்றனர்,போக்குவரத்து,தங்குமிடம்,உணவு,நிதி போதாமை, என அல்லல்படும் இவர்கள் வசதியாக தமது அன்றாட வாழ்கையை வாழ வில்லை.இவர்கள் கடும் உள நெருக்கடிகளுக்கும், உளப்போராட்டங்களுக்கும்  இடையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பது நிச்சயமாக   மிகைப்படுத்தப்பட்ட  கூற்று அல்ல.
இவர்களின்  மீதும் பெருஞ்சுமையை இலகுவாக யாரோ சிலர் திணித்து விட்டிருக்கின்றார்கள்.

 ஆசிரியர் மாநாட்டிற்கான தயார்ப்படுத்தல்கள், ஒத்திகை பார்த்தல் என மொத்தமாக 4-6 வேலை நாட்கள் விடுக்கப்பட்டன.வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இயங்கு நிலையில் உள்ள 76 பாடசாலைகளில் 26 இடைநிலைப் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள், மாணவர்களின் கற்றற் செயற்பாட்டிற்கு மிகக் குறைந்த வளங்களும்,  வசதிகளுமே உள்ள நிலையிலேயே இயங்குகின்றன. ஒதுக்கப்பட்ட நிதியை வலயங்கள் சார்ந்த மிகவும் அத்தியாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யப்யன்படுத்தி இருக்கலாம்.இல்லாது போயின்  பற்றாக்குறை ஆசிரிய ஆளணியின் சம்பளத் தேவைக்காகப் பயன்படுத்தியிருக்கலாம்.

ஆடம்பரமான வரவேற்புடன் குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கப்படாது தொடங்கிய  இம்மாநாட்டிற்கு, ஆசிரியர்களின் பங்குபற்றுதல் தொடர்பான அழைப்பில் சிறப்புக்கோடிட்டுக் காணப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பதத்தின்  பிரதிபலிப்போ என்னவோ, ஆரம்பத்தில் இருந்தே மண்டபம் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. ஆண், பெண் ஆசிரியர்கள் ஆங்காங்கே காணப்பட்ட மரங்களின் கீழாகவும், கட்டட ஓரங்களிலும் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தார்கள். சுமார் 750 இற்கும்  மேற்பட்டோர் கலந்து கொள்ளும் நிகழ்வுக்கான இருக்கை வசதிகளோ,காட்சிகாண் கூடங்களோ திட்டமிட்டு அமைக்கப்படவில்லை. போதாக்குறைக்கு கண்காட்சிக்கூடங்களிற்குள் சென்றால் அவை வெறும் பார்வைக்கு கூட விருந்தாகத்தெரிய வில்லை.பிறகு எப்படி மனதில் நிறுத்தி செயற்படுத்த முடியும்.ஆனால்  சித்திரம்,சங்கீதம்,நடனம்,ஆரம்பக்கல்விக் கூடங்கள் ஓரளவு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு இருந்ததை இங்கு  மறைக்கவும் முடியாது.  கண்காட்சிக்கூடங்கள் ஏனோ தானோ என்ற மனப்பாங்கில் ஒழுங்கமைக்கப்பட்டு இருந்தமை பரிதாபமாகவும், அதே நேரம் இவ் வலய ஆசிரியர்களின் வாண்மைத்துவம்,தேடல்,கற்பித்தல் சார்பில் ஐயப்பாடுகளையும் தோற்றுவித்தது உண்மையே.

இது சார்ந்து கேள்வி எழுப்பப்படும் போது, இவ்வலயம் மூன்று மாவட்டங்களின் எல்லையைத் தொடும் பரந்த சனத்தொகை குறைந்த பிரதேசமாகும், பெரும்பாலும்   போக்குவரத்து வசதிகள் இன்றும்  அற்றவையே, அவ்விடங்களில் இருந்து பொருட்களை ஓரிடத்தில் குவியப்படுத்துதல் சவாலான விடயமே, வாகன வசதிகள்
 செய்யப்பட்டிருந்தாலும் அதன் பிரயோகத் தன்மை வீச்சு  உள்ளதாக அமையவில்லை என்பது குற்றச்சாட்டு.
தொடர்ந்து பிரயாணக்களைப்புடன் வெயிலில் காய்து கொண்டிருந்த ஆசிரியர்கள் மதிய உணவுக்காக சென்றடைந்த போது அங்கு போதியளவான உணவு, இருக்கை வசதிகள் செய்யப்பட வில்லை. ஆங்காங்கே மரநிழல்களிலும், நின்ற நிலையிலும் ,அடிக்கும் காற்றினால் ஏற்பட்ட புழுதியையும் சேர்த்து உண்டுகொண்டிருந்தமை பெரும் பரிதாபத்துக்கு உரியதாக இருக்க ,உணவு தரம் குன்றியதாகவும், அனைத்து ஆசிரியர்களுக்கும் போதுமானதாகவும் இல்லாமல் இருந்தமை அதை விட மோசமான ஒன்றாகும். இதைவிட சரியான குடிநீர், குப்பை போடும் தொட்டிகள் ஏற்படுத்தாமல், பெரும் களேபரச்சந்தையாக காணப்பட்டமையும் குறிப்பிடப்படவேண்டியதே.

 தொடர்ச்சியாக  ஏற்பட்டுக் கொண்டிருந்த அசௌகரியங்களால் ஆசிரியர்கள் தங்கள் வீடுகளை நோக்கி கலைந்து சென்று கொண்டிருந்தனர் .ஆனால் இடைவிடாது
 நடைபெற்றுக் கொண்டிருந்தது ஆய்வுக் கருத்தாக்கங்கள் .இவை கூட வெறும் மரபு வழி சார்ந்த விளைதிறனை அடிப்படையாகக்  கொண்ட, நடைமுறைச் சாத்தியம் அற்ற, பட்டங்களைப் பெறுவதற்கு மட்டும் பயன்படும் ஆய்வுப் பிரதிகளாகவே அமைந்திருந்ததோடு வவுனியா வடக்கு மாணவர்களதோ, ஆசிரியர்களதோ கல்வி வளர்ச்சிக்கும், வாண்மை உயர்ச்சிக்கும், பொருத்தமில்லாது வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. வாசிக்கப்பட்ட ஆய்வு அறிக்கைகள் வெறும் தரவு வெளியீடாக மட்டுமே இருந்தது என்பதை ஆசிரியோதயம் என்ற மாநாட்டை முன்வைத்து வெளியிடப்பட்ட பிரதியின் ஊடாக தெரிந்து கொள்ளலாம்.
 காத்திரமான பாடவிதானங்கள், மாணவர்களின் புறச்சூழல் தாக்கம், என்பன சார்ந்து ஆய்வு அரங்குகள் ஏற்படுத்தாமை விசனத்திற்கு உரியதாகவும் நேரத்தை  வீணடித்த செயற்பாடாகவுமே எண்ணப்பட்டது.

இரண்டாம் நாள் அமர்வில் குறைவான ஆசிரியர்களே கலந்து கொண்டாலும், கலைநிகழ்வுகளில் ஆசிரியர்கள் பின்னி எடுத்து இருந்தார்கள்.தங்களுடைய ஆளுமைகள், திறமைகளை, மாணவர்- ஆசிரியர்களின் களப் பிரச்சினைகளை தங்களது ஆற்றுகைகளின் ஊடாக கூறியது சிறப்பாக இருந்தமை வரவேற்புக்குரியதே.குறிப்பாக கர்நாடக சங்கீத ரீமிக்ஸ்நடனம், பலரையும்  கைதட்டலுக்கு உட்படுத்தியது.பட்டிமன்றம்,சுழலும் சொற்போர், என ஆற்றுகைகள் தொடங்கிய போது அந்தோ பரிதாபம் ! இது குறித்து கரிசனை கொள்ளக்கூடிய, அமைச்சரோ, கல்விப்பணிப்பாளர்களோ,ஆசிரிய ஆலோசகர்களோ, சபையில் இருக்கவில்லை, சுமார் 600 பேராவது இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 100 பேரிற்கே ஆற்றுகைகள் அளிக்கப்பட்டு இருந்தன.
ஆசிரியர்களின் பணிச்சுமை, பிரயாணத்தூரம், அர்ப்பணிப்பு, என்பன இங்கு கவனத்தில் கொள்ளப்படாமல் இருந்தமை மேலதிகாரிகளின் விஷமப் போக்கையும், பணியைத் தட்டிக்கழிக்கும், பொறுப்புணர்வு அற்ற தன்மையையும், பெரும் தொகையாக ஒதுக்கப்பட்ட பணத்தை மோசடிகள் செய்வதற்கான வழிவகைகளையும் உருவாக்கி இருந்தமை தூரநோக்கற்ற மாநாடு என்பதற்கு வரைவிலக்கணம் கொடுக்க முனைந்தவருக்கு வெளிச்சமாக இருக்கவில்லை.ஆசிரியோதயம் என்ற நூல் வெறுமனே இயங்குநிலை பாடசாலைகளின் ஆசிரியர்குழுக்களின் படங்களை மட்டுமே தாங்கி வெளிவந்து இருந்ததையும்,ஏற்கனவே குறிப்பிட்ட பொருத்தமற்ற ஆய்வுக் கருத்துக்களையும், 18 வாழ்த்துச் செய்திகளையும் தாங்கிய விலையுயர்ந்த காகிதக் குப்பையாகவே இருந்தது வெளிப்படை. மட்டுப்படுத்தப்பட்ட பிரதிகள் குறிப்பிட்ட ஒரு சிலருக்கே மண்டபத்தில் தேடித்தேடி வழங்கப்பட்டமை  விசனத்தை ஏற்படுத்தவும் தவறவில்லை.

சாதாரண ஒரு நிகழ்வையே காத்திரமாக ஒழுங்கமைத்து நடத்தத் தெரியாதவர்களின் கைகளில் மிக பெறுமதிவாய்ந்த எதிர்காலம் உடைய மாணவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளமை எமது கல்வி தரத்திற்கு விடப்பட்டுள்ள சாபமே.

 மேற்குறிப்பிட்ட ஒழுங்கமைப்பாளர்களை எப்படி,  தாம்  சார்ந்த பணியில் அர்ப்பணிப்பு, வினைத்திறன் போன்ற சொற்களின் பெறுமதியை  அறிந்தவர்களாகக் கொள்ள  முடியும்?
வடமாகாணக் கல்வி நிலையின் மோசமான நிலைமைக்கு கல்வி அதிகாரிகளின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளே காரணம் என்பது ஆசிரியர்கள் மாநாட்டின் பெறுபேறுகளின் மூலமாக தெரிந்துகொள்ளமுடிந்தமை மாநாட்டின் மூலமான ஒருவகை வெற்றியே....!

 சிறந்த நிர்வாகத்திறன், பிரச்சினைகளை இனங்காணும் தன்மை,பிரதேசம் சார்ந்த அறிவு,சமூகப் பொறுப்பு, அர்ப்பணிப்பு உள்ள சேவையாளர்களே இப்போதைய கல்விப் புலத்தின் எழுச்சிக்கு மிகவும் தேவையே தவிர  வெறுமனே ஆசிரியர்கள் மீதும், பெற்றோர்களின் மீதும் குற்றச்சாட்டுக்களை வீசி எறிபவர்கள் அல்லர்.யதார்த்தத்தில் உள்ள அடிப்படை  முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை, ஆசிரியர்கள் சுதந்திரமாகக் கலந்துரையாடல் செய்வதற்குரிய வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படல், அடிப்படைக் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டில் உள்ள குறைந்த பட்சப் பிரச்சினைகளையாவது வலய மட்ட அளவில் தீர்வுகாணல், இவை கூட கவனத்தில் கொள்ளப்படாத மாநாடு எதற்கு?கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான காத்திரமான வேலைத்திட்டங்கள் பிரதேசங்கள் சார்ந்தே அணுகப்படவேண்டும். அதுவரை வவுனியா வடக்கு வலயத்தில் ஆசிரியர் மாநாட்டிற்கான தேவைகள் ஏற்படப்போவதில்லை.
2008 ஆண்டு வவுனியா வடக்கு வலயத்தில் செய்யப்பட்ட காத்திரமான ஆய்வுச் செயற்பாடுகளை முன்னெடுத்து செயற்படுத்தியிருந்தாலே பல குறைகளிற்கு நிறை கண்டிருக்க முடியும்.

ஆசிரியர் மாநாடுகளின் மூலமாக பெற்றுக்கொள்ளப்படும் விளைவு என்ன என்பது இப்போது வரை புரியாத புதிராகவே உள்ளது....

ஆனால் நாரதரின் அபிப்பிராயத்தில்

 "ஆசிரியர்களின் பணிச்சுமையைக்கூட்டி, நிர்வாக அதிகாரிகளின் மிரட்டல்,அதிகாரத் துஷ்பிரயோகம்,மோசடி நடவடிக்கைகளின் வீரியத்தை  அதிகரித்து, மாணவர்களின் தொடர்ச்சியான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளைக் குழப்பி, பிழையான முன்னுதாரணங்களான அரசியல்வாதிகளை அழைத்து கௌரவித்ததுடன், திட்டமிடல்,ஒழுங்மைப்பில் குறைகளைச் சுட்டியவர்களை கலகக்காரர்கள் என்று பெயரிட்ட மாண்புமிகு மாநாடு  இந்த ஆசிரியர் மாநாடு.

#தர்ஷன் அருளானந்தன் #

Comments

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"