"சித்தப்பா பூங்கா"



சமீப நாட்களில் எல்லாம் பஸ் ஏறுவதற்காக ஓராம் கட்டை சந்திக்கு வந்தால் அவனுக்குள் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் அந்தக் கனவு தன் உள்ளத்தில் எங்கேயோ ஒரு புல்லாங்குழல் இனிமையானதோ, துன்பகரமானதோ எனப் புரியாத ஒரு இராகத்தை மீட்டிக் கொண்டிருக்கின்றது. அவ்வளவு எல்லையற்றதாக இருந்தது அவனது மகிழ்ச்சியும், வேதனையும்.

கண்களைத் செருகி கனவில் வந்த சித்திரங்களை ஆராய்ந்தான். விசித்திரமான சீருடையுடன் அழகான மனிதர்களின் அரைப்பட போட்டோக்கள் மதில்கள் முழுவதும் தெரிந்தன.'வீரவணக்கம்' என்னும் தலையங்கத்தின் கீழே.  விசித்திரமான மந்திரப் பாட்டுப் பொட்டியில் இருந்து துள்ளலும் , இனிமையுமான சங்கீதம் பரவிக் கொண்டிருந்தது. கிளைகளும் மரங்களும், இலைகளும் பூக்களும், விந்தையான உருவமுடைய பறவைகளும், மிருகங்களும், மனிதர்களும் அங்கே இருந்தார்கள்.

"உனக்கு தெரியுமா? சிறப்பான அவன் அறிந்த காட்டைப் பற்றியது இக் கனவு."
மனதில் கவலை இருந்தால் உற்சாகம் ஏற்படுவதற்கும், தியாகங்களை மனதில் சுமப்பதற்கும் இக் காட்டைப் பற்றி நினைத்தால் போதும். சில நேரங்களில் நல்ல கனவுகளை நாம் காண்போம். ஆனால் விழிக்கும் போது அது என்னவென்று ஞாபகப்படுத்திக் கொள்ள முடியாமல் போகும்.
○○○

'ஆமிக்காறர்'  யாழ்பாணத்த்துக்கு முன்னேறி வாறாங்களாம். என்ட கதை இப்போதைய சூரியன் எப்.எம். கிரிக்கெட் ஸ்கோர் சொல்லுறமாதிரி ஏதோதோ கதைக்க வேணும் என்டதுக்காக  இடைக்கிடை அறிவிப்பு செய்து கொண்டிருந்தார். துர்ராசா அண்ணை.
' இப்ப ஆவரங்காலாம், அச்சுவேலிக்குள்ளால ஒரு குரூப் தொண்டைமானாறுக்குள்ள இறங்கீட்டுதாம்.'
அருள் மாஸ்டருக்கு கொஞ்சம் சிங்களம் தெரியும் என்ட நம்பிக்கையில எங்கட வீட்டில அயல்வீட்டுக்காற குடும்பங்கள் மூன்றும் சேர்ந்து இருந்தன. கிரி, நான், சாரங்கன், சங்கீதா, சாந்தன், கோசலா, கோபி என்டு எங்கட பின்னேர விளையாட்டு ரீம் எல்லாம் ஒரே இடத்தில மூன்று நாளா இரவு பகலா இருந்ததால எனக்கு ஒரே குஷி. கிளித்தட்டு, மாங்கொட்டை கெந்திக்கோடு, கள்ளன் பொலீஸ், பேணிபந்து, இயக்கம் ஆமி, கிட்டிப்புள்ளு, கொக்கான், ஆடும் புலி யும், என்று ஒரே அமர்களமாய் இருந்தன்.பெரியவர்கள் அதட்டிபேசும் போது மட்டும் கு சு குசுப்போடு விளையாடிக் கொண்டு இருந்தன்.

'சத்தம் போடாதையுங்கோடா வாற ஆமிக்காறன் உங்களைதான் முதல் சுடுவான்'

என்று பெரியண்ணாவும், கோகுலன் அண்ணாவும்( ஏ.எல் படிச்சு போட்டு இருந்தவை) வெலவெலத்துப்போய் முகம் எல்லாம் போயறைந்த மாதிரி இருந்த இரண்டுபேரும்  அடிக்கடி பேசிக் கொண்டிருந்தான்கள் எங்களை.

அந்தக் காலத்தில நாங்கள் இயக்கம், ஆமி என்று ஒரு விளையாட்டு விளையாடுவம். தென்னைமட்டைய சீவி அல்லது பூவரசம் தடிகளையும் வெட்டி துவக்காக்கி, ( விளையாட்டு பிஸ்டல் ஒன்று இருந்தா அவர்தான் கீறோ விளையாட்டின்  தலைவர்). யார் யார் இயக்கம், யார் யார் ஆமி என்டதை மண்ணில இரண்டு கோடு கீறி அதுக்கு கீழ ஒன்று, இரண்டு என எழுதிப்போட்டு உள்ளங்கையை கிழ்நோக்கி விரித்து மறைக்க இரண்டு ரீமிலையும் கொட்டிக்காற லீடர்மார்(கன்னை பிரிக்கிற ஆக்கள்) கோடுகளைத் தொட்டு யார் ஆமி ரீம் , யார் இயக்க ரீம் என்று தீர்மானிப்பம். துவக்குகளைக் தூக்கி கொண்டு ஆமி ரீம் ஒழிக்க இயக்க ரீம் தேடி தேடி சுடும்' பட்.. பட்.. பட்.. பட் ..டூமில்'  ' பட்.. பட்.. பட்.. பட்...டுமீல்'( பட்.. பட்.. என்று தான் முதல் இருந்தது. ராணி காமிக்ஸ் வாசிக்க தொடங்கிய சாரங்கனும்யும் நானும் தான் மாயாவி சுடும் போது வரும் "டூமில்" என்ட சத்தத்தையும் விளையாட்டில சேர்த்தம்) ஆமி ரீம் ஆக்களை கண்ட உடன 'பட்..பட்.. பட்... பட்.. டூமில்' என்டதும் ஆமியான ஆள் செத்தது போல நடிக்கனும். ஆனால் இயக்கம் சாக மாட்டினம். அடிக்கடி "அலாப்பல்களும்" வந்து கந்தபாலன் சேர் கொத்தி வைச்ச தோட்டத்து மண் கட்டிகளும் ஷெல் ஆக அடிக்கப்படும். அந்த விளையாட்டை யார் சொல்லி தந்தது என்டு சத்தியாமா தெரியல்லை. ஆனாலும் அது எங்கட பேமஸ் விளையாட்டா இருந்தது.

'சுப்பர்சொனிக்', 'புக்காரா' விமானச் சத்தங்களும், குண்டுச் சத்தங்களும் தான் ஆமி என்டு நினைச்சுக் கொண்டிருந்தம்.
அப்ப எல்லாம் எனக்கு ஒரு ஆசை வரும். புக்காரா குண்டு போட குத்தி எழும்போக்க  அதில ஒருக்கா என்டாலும் ஆமியை பார்த்து போடனும் என்டு தீராத ஆசையோடு வானத்தை ஆ என்று பார்த்துக் கொண்டிருப்பேன். அம்மா 'சனியன்' முதல் 'துலைஞ்சுபோவான்' முதல் திட்டாத திட்டெல்லாம் திட்டி பங்கருக்குள்ள இழுத்து வைச்சு கொள்ளுவா.
இருந்தாலும் ஆமிக்காறன் என்டா சுட்டுப்போடுவான் சனம் எல்லாத்தையும் என்டும் அம்மா சொல்லி பயத்தை கொஞ்சம் கூட்டி விட்டு இருந்தா.

'நெல்லியடிக்கு வந்துட்டாங்களாம்' வெளியால நின்ட துர்ராசா அண்ணை சொன்னதும் நான்  பயத்தின் உச்சத்தில் அம்மா க்கு பின்னாலை ஒழிக்க தொடங்கி இருந்தன். விளையாட்டு எல்லாத்தையும் நிப்பாட்டிப்போட்டு.

வீட்டின் பின்பக்க கதவு பாடார் என்ட சத்ததோட உதைந்து திறக்கப்பட்டது. ஏதோ சூடான தேங்காய் எண்ணொயின்ட வாசம் வந்தது. பயத்தில நாங்கள் எல்லாம் குழறி அழத் தொடங்கினோம். பெரிய உயரமான, சிவலையான, முகம் எல்லாம் மீசையில்லாமல் வழிச்ச நாலு பேர் சீருடையோட நிண்டாங்கள் பெரிய துவக்குகளை அப்பாவையும் பெரியண்ணையும், கோகுலன் அண்ணையையும் நோக்கி பிடித்தபடி வீட்டுக்குள்ள வந்தார்கள். ஒருத்தன் முதுகில பெரிய பெட்டியொன்றைக் காவியிருந்தான். அது அடிக்கடி மனித குரல்கள் பேசும் சத்தத்தை வெளி விட அவனும் பேசிக் கொண்டிருந்தான். பித்தளை கலரில கோர்வையா இருந்த ரவைகளை கழுத்தில் சுற்றிப் போட்டிருந்த பென்னம்பெரிய துவக்கு வைத்து இருந்த ஒரு ஆமிகாறன்- நான் என்ட வாழ்க்கையில முதலில கண்ட ஆமிக்காறன் சிங்களத்தில கேட்ட கேள்வி

" ரூ வலசு இன்னே கொகெத? "
○○○
குளிர் காற்று மரங்களின் மேலே வீசியது. கடும் நீலநிறமாக இருந்த ஆகாயத்தின் மேகங்கள் பனிக்குவியல்கள் போல தோன்றின. புதிதாக முளைத்த பறவைகளின் கூடுகளில் இருந்த மணத்தையும், பச்சை இலைகளால் நிறைக்கப்பட்ட இடத்தை விட்டு குட்டையான புல்லை கடித்துப் பறித்து தின்று கொண்டிருந்தது 'மரை', தனது குட்டிகள் பின்னால் நிற்கின்றனவா எனப் பார்த்துக் கொண்டு வாலை ஆட்டியபடி சுறுசுறுப்பாக குழைகளைச் சப்பிக் கொண்டிருந்தது 'மான்' . கூட்டினுள் தலையசைத்து , தரையை உதைத்து தேன் வதைகளின் மீது புரண்டது ஒரு 'கரடி' இன்னொன்று பற்களைக் காட்டி முனகி கூட்டின் இரும்புக் கம்பிகளை கடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

அந்தக் காடு முழுவதும் குயிலினதும், கிளிகளினதும், லவ்போட்ஸ்களினதும், புறாக்களினதும், பிஞ்சேர்ஸ்களினதும்,தாராக்களினதும், புறாக்களினதும், கூழைக்கிடாக்களினதும் பாடல்களைக் கேட்டது. இன்னும் துக்கம் நிறைந்ததும், மென்மையானதுமான பல பெயர் தெரியா குருவிகளினதும் கீதங்களை கேட்டது காடு. அடங்காத அழகில் அந்த அற்புதக்காட்டின் நடுவில் மெழுகுவர்த்திகள் போன்ற பல்புக்கள் பல வர்ணங்களில் ஒளிவீசின.சுவர் களின் நிழல்களில் நீலம், பச்சை,சிவப்பு, கறுப்பு,ஒரேஞ் வர்ண தோகைகள் கொண்ட மீன்களின் தொட்டிகள் அற்புதமான கண்கவர் கட்சிக் கூட்டத்தை நடாத்திக் கொண்டிருந்தன. கூரையின் மேலே ரிப்பன் கடதாசி மாலைகள் சரசரவென ஒலி எழுப்புகின்றன. பனிபடர்ந்த மேற்கூரையின் கீழே தூய வெண்ணிறத்தில் ஒளிர்ந்த வாழைத்தண்டு சாயலிலே உயரமாக, வரிச்சீருடையணிந்த ஒரு முழுப் படம் சித்திரமாக வரையப்பட்டிருந்தது. அதன் கீழ் "மேஜர் றஞ்சன் சித்தப்பா' எனப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
○○○
புழுக்கொடியலை உரலில இடித்து அரிச்சு தும்பு எடுத்த மா வுடன் தேங்காய் பூவும், சீனியும் போட்டு உருண்டை உருண்டையா செய்த மா உருண்டையையும் தேத்தண்ணீயையும் குடித்துக் கொண்டிருந்த நான் அப்படி ஒரு பேய் கேள்வியை அம்மாட்டக் கேட்டிருக்க கூடாது தான்.

"எணே அம்மா ஆமிக்காறங்கள் எங்களையெல்லாம் சுடுவாங்கள் என்று எல்லோ சொன்னீங்கள், எங்கட வீட்ட வந்த எட்டு ஆமிக்காறங்களும் ஏன் எங்களைச் சுடேல்லணை?"

அப்பாவியாய், சின்ன பொடியனாய், வெகுளியாய் கேட்ட கேள்வி ரீச்சரா இருந்த என்ட அம்மாவை சிறுவர் உரிமைகள், துஷ்பிரயோகங்கள் எல்லாத்தையும் மறந்து அகப்பை காம்பால அடிக்க வைச்சது. அந்த அடி இப்பவும் வலிக்கிறமாதிரிதான் இருக் குது.( அம்மான்ட தம்பியார்- என்ன சின்ன மாமா யாழ்பாண சண்டையில செத்தவர் என்டது பிறகுதான் தெரிஞ்சது)

'புக்காரா' குண்டு போட குத்தி எழும்புற நேரம் ஆமியை பார்க்க ஆசைப்பட்ட நான் இப்ப எல்லாம் அடிக்கடி எங்கட ஒழுங்கேக்கை காவல் நிக்க கண்டன்.அடிக்கடி வீட்டை வந்து அப்பாவையும், பெரியண்ணையையும் விசாரித்தார்கள். ஆசையண்ணா கோழிபிடித்த கள்ளன் மாதிரி முழுசிக் கொண்டு நிப்பான். அப்பவும் ஒன்றும் விளங்கேல்லை. பள்ளிக்கூடங்களும் நடக்கேல்லை ஆனா ரீச்சர் அம்மா " கொலசிப்புக்கு" -அடிக்கடி மண்டையில குட்டிக் குட்டி வீட்டில வைத்து படிப்பிச்சா.

"இலங்கையின் தலைநகரம் எது?"
'சிறீ ஜெயவர்த்தன புர கோட்டே'

"இலங்கையின் இறப்பர் ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது?"
'அகலவத்தை'

எனக்கு அம்மா கேட்ட அப்போதைய பல 'கொலசிப்' கேள்விகளுக்கு விடை தெரிந்து இருந்தது. ஆனால் என்னுடைய ஒரு கேள்விக்கு மட்டும் தான் அம்மாவிற்கு விடை தெரிந்து இருக்கேல்லை.

" ஏன் எங்களை ஆமிக்காறன் சுடவில்லை?"

அப்பாவும் அம்மாவும் சைக்கிள்ள போய் பருத்தித்துறை 'ஹாட்லிக்' காம்ப் ல உள்ள ஆமிக் கன்ரீனில நீண்ட கியூவில நிண்டு வாங்கி வந்த  'எட்னா' கண்டோசும், 'செவன் அப்' சோடாவும் தான் நான் வயது அறிஞ்சு குடிச்ச, தின்ட மிகப்பெரும் அற்புதங்கள்( ஆனால் 'புத்தூக்கி' சோடாவையும், ' புழுட்டோ' ரொபியையும் போல வராது என்று இப்ப விளங்குது) எட்னா கண்டோஸ் பைக்கற்றுக்குள்ள இருந்த 'அரவிந்த டீ சில்வா' ட ஸ்ரிக்கர்தான் நான் முதன் முதலா சேர்த்த கிரிக்கெட் ஸ்ரிக்கராகவும் இருந்தது.

சோடா தாறாங்கள், கண்டோஸ் தாறாங்கள் , அடிக்கடி வீட்டை செக்கிங் பண்ண வாறாங்கள் என்ட உடனேயே கொஞ்சம் கொஞ்சமாய் ஆமிக்காறர் சுடமாட்டாங்கள் என்ட நம்பிக்கை வரத்தொடங்கீச்சுது எனக்கு இவ்வளவு காலமும் அப்பாவுக்கு பின்னால ஒளித்து ஆமிக்காறனை பார்த்த நான் ஒரு படி மேல போய் அப்பாவுக்கு முன்னால போய் அவர்களைப் பார்த்து பல்லைக் காட்டி 'ஆ' என்று சிரிக்கத்,தொடங்கினேன்.
○○○

காலை வெய்யிலில் நீல நிற சூரிய வெளிச்சத்தில் இலையான்கள் 'நெய்ங்' என்ற சத்தத்தோடு பறந்தன. எங்கோ அழுகிய தசைப்பிண்டங்களின் மணம் காற்றில் மிதந்து வந்தன. ஒரு பருந்து உயரத்தில் இருந்தாலும் தனது கூரிய கண்களை கொண்டு காட்டை கண்கள் பிதுக்கி பயத்துடன் பார்த்துச் சென்றது. பிண வாடையடித்த ஒநாய் குலச் சின்னம் வாலை உயர்த்தியவாறு வெளிப்பட்டது. காட்டினை நோக்கி மக்களின் பால் தன் பாவனையின் மூலம் பணிவையும் , நல்ல குணத்தையும் காட்டிக் கொண்டது. இளம் சிவப்புநிற வாயைத் திறந்து கோரப்பற்களைக் காட்டி அது 'ஊ... உ..'  'ஊ...உ' என்று மிகப் பலமாக கத்தியதை செவிமடுப்பது சிரமமாக இருந்தது. வீரவணக்கங்களுடன் மதில்களில் சீருடையில் இருந்தவர்களின் படங்கள் மேல் "ஒயில்" அடிக்கும் கலாச்சாரம் கற்பிக்கப்பட்டது. நெடுநேரம் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு காட்டின் குழலோசையின் சப்தம் அடங்கிப் போயிருந்தது. மான்களும், மரைகளும்,கரடிகளும், பலவர்ண குருவிகள், மீன்களும்,தாராக்களும், கூழைக்கடாக்களும் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்தன.

' அந்த படங்கள் எதற்காக வரையப்பட்டிருக்கின்றது என்று துப்பாக்கிகளிற்கு புரியவில்லை. என்பது தான் துப்பாக்கிகளிற்கு கோபம் வந்தது' என்பதாக பேசிக்கொண்டன அங்கு இருந்த ஊஞ்சல்களும், ராட்டினங்களும், சறுக்கீஸ்களும். தாங்கள் இரும்பு என்பதால் தப்பித்தோம் என நினைத்துக் கொண்டன.

சரித்திரத்தை பேசும் என்று நினைத்த "கடல்புறா" கப்பல் கூன் விழுந்த முதுகும், முகத்தில் தழும்புகளும் கொண்ட கொன்கிறீட் குவியல்களாக பிளக்கப்பட்டிருந்தன.
மரங்களும் இலைகளும், குரோட்டன்களும் ரோஜாக்களும்,மல்லிகை பந்தலும் 'கடவுளே எங்கள் பாவங்களை மன்னியுங்கள் என்பது போல் மிதிக்கப்பட்டு காலில் விழ வைக்கப்பட்டு இருந்தது.
மொத்தத்தில் காடு வன்புணர்வு செய்யப்பட்டு இருந்தது.
○○○

காப்பெற் ரோட்டின் வெக்கை முகத்தில் அடித்து வழிந்தோடிய வியர்வையை துடைத்துக் கொண்டு ஆசுவாசமாக நிற்பதற்கு இடம் தேடினேன்.'சித்தப்பா பூங்கா' என்று அழைக்கப்பட்ட அதே இடம் பல தாக பிரிக்கப்பட்டு பல உயரமான கட்டடக்காடுகள் கட்டப்பட தயாராகிக் கொண்டிருந்தது.

மனிதர்களையும் இப்படித்தானே, நேரத்திற்கு நேரம் தங்கள் தோற்றம் பொலிவுகளை பழைய கொன்கிறீட் கற்களை உடைத்து, புதிய கற்களை கொண்டு தங்களை கட்டி வர்ணப்பூச்சுகளை பூசிக் கொள்ளுகின்றார்கள்.என எண்ணத்தோன்றியது.

அரைகுறையாக இடித்து ஒதுக்கப்பட்ட கென்கிறீட் குவியல்கள் ஒருபுறத்தில் குவியல் குவியலாக ஒதுக்கப்பட்டு இருந்து.அந்த கொடிய வெய்யிலிலும் பல நிர்மூலமாக்கப்பட்ட கொன்கிறீட் கற்கள் என் குழந்தைபருவங்களை பகல் கனவு காண வைத்து விட்டது.

"கொடிகாமம், போறாக்காள் ஏறுங்கோ..., 'கொண்டக்ரர் கத்துகின்றார். கனவு குலைய பஸ் ஏறுகின்றேன். பெருமூச்சை விட்டபடி...

தர்ஷன் அருளானந்தன்.

Comments

  1. அப்பிடியே ஒருக்கா 96 கு கொண்டுபோய்க்கொண்டந்து விட்டிட்டியள்...வெறும் நினைவுகளா மட்டும் இல்லாமல உங்கட எண்ணச்சிதறல்களும் மனசில பட்டுத்தெறிச்சோடுகின்றன...

    ReplyDelete
  2. கனவுகள் கலைந்து போன ஏக்கம் கதையில் இழையோடுகிறது...கனவுகள் எப்போதும் உண்மையாவது இல்லை. நிஜ உலகிற்கு வாருங்கள்! கதையில் அதிகமாக தங்கள் நிஜ வரலாறு படர்ந்திருந்தாலும் அதுவே கதைக்கு உயிரூட்டுகிறது. சிறுகதை வரைவிலக்கணம் மற்றும் அதன் கூறுகள் என்று அதிகம் ஆராயாமல் நமது கடந்த அனுபவங்களின் பிரதிபலிப்பு என்பதனால் கதையோடு ஒன்றிப் போக முடிகிறது... வாழ்த்துகள்...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"