உயிர் வாழ்வதற்கான ஓட்டப்பந்தயம் -"Shooting dogs" திரைப்படத்தை முன்வைத்து ஒரு பார்வை



ஈழத் தமிழர்களிற்கு நிகழ்ந்த மனிதப் பேரவலங்களிற்கு ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச நாடுகளோ ஒரு நீதியை பெற்று தர முடியுமா என்ற கேள்வி இன்றும் எம்மை குடைந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அண்மையில் காணக்கிடைத்த திரைப்படம் shooting dogs இயக்கியவர் மைக்கேல் கற்றன் ஜோன்ஸன்(Micheal caton Jones) 2005 ம் ஆண்டில் திரையிடப்பட்ட இப்படம் 115 நிமிடங்கள் நிஜத்தில் இரத்தத்தை சுண்டும் மனித அவலத்தை காட்சிகளாக கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. Heartland திரைப்பட விழாவில்        dramatic feature ற்கான விருதையும் பெற்றுள்ளது. திரைப்படத்தின் தலைப்பே ஒரு விசித்திரமான ஒரு குறியீட்டு வடிவத்துடனான கதையாடலை நிகழ்த்தி உள்ளது. அமைதிப்படையாக ருவாண்டாவிற்கு வந்திருந்தது ஐக்கிய நாடுகளின் இராணுவம். ஹுட்டு அடிப்படைவாதிகளின் தூண்டுதலால் கொல்லப்பட்ட டுட்சி இனத்தவர்களின் பிணங்களை தின்று கொண்டிருந்தன நாய்களுடன் உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். கண்முன்னே கொலைவெறித் தாண்டவம் ஆடிய ஹுட்டு தீவிரவாதிகளிற்கு எதிராக ஐ.நா படையினரின் துப்பாக்கிகள் உயர்த்தப்படவில்லை. நாய்கள் என்கின்ற குறியீட்டு வடிவம் அப்பிரதேசத்தின் அவலத்தினை படம்பிடித்துக் காட்டியது. உண்மை கதையை மையமாக கொண்டு படைக்கப்பட்ட இத் திரைப்படம் ஒரு கத்தோலிக்க மதகுருவினதும் இலட்சிய ஆசிரியர் ஒருவரதும் சாட்சியாக மனிதாபிமானத்திற்கு விரோதமான ஐ.நா படைகளின் கள்ளமௌனத்தை கூறி நிற்கின்றது.

1994 ல் ருவாண்டாவில் இனப்படுகொலை சுமார் 8 இலட்சம் மக்களைக் கொன்றும், பெருந்தொகையானவர்களை ஊனமாக்கியும், உடமைகளை அழித்தும் தன் சூறாவளிக் காற்றை வீசி முடித்து இருந்தது. தப்பி ஓடி ஒளிந்த டுட்சிகளைக் கொல்ல கொலைப்படைகள் ருவாண்டா நாடுமுழுவதும் அலைந்தன.தேவாலயங்கள், பள்ளிகள், வீடுகள், கடைத் தெருக்கள் என ஒளித்திருந்த டுட்சிக்களை பட்டியல் தாயாரித்து தேடிப்பிடித்து கொலை செய்தன. ஐக்கிய நாடுகள் அமைதிப்படை ஏதோ மிருக கூட்டங்கள் தகராறு செய்கின்றன என வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. இந்த நிகழ்வு ஈழத்தில் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் படுகொலை களையும், மனித அவலங்களையும் வேடிக்கை பார்த்து விட்டு வெளியேறிச் சென்றமையை மனக்கண் மீது படிய வைத்து இருந்தது. மேற்குலகத்தின் மனிதாபிமானத்திற்கான  பொய்முகத்தை கேள்விக்கு உட்படுத்தி, அவர்களின் மனிதஉரிமைகள் மீதான கரிசனை முகத்திரையை கிழித்துப் போட்டிருக்கின்றது இத்திரைப்படம். நிற வேறுபாடுகள் என்று வருகின்ற போது அப் போலிமனிதாபிமானிகள் விழித்துக் கொள்வதும், ஒரு பெண் செய்தியாளரின் துணிச்சல், உயிர் பயம், வாழ்தலுக்கான அவா என்பவற்றையும் சிறு சிறு உரையாடல்களின் மூலம் கண்டு கொள்ள முடிந்து.

கல்லூரியின் வாகன சாரதியாக இருந்த ஒரு சாதாரணமான ஹுட்டு இன மனிதன் தவறான வழிப்படுத்தலால் உணர்வுகள் ஊட்டப்பட்டு படுகொலைக்கு உடந்தையாக இருப்பது மனித மனங்கள் இனவெறி உணர்வின் பால் இலகுவாக திசைதிருப்ப படுகின்ற தன்மை ஈழத்தில் இன்றும் சில அரசியல்வாதிகளினதும், புலம் பெயர் ஈழ அபிமானிகளினதும் கருத்து நிலையை ஒரு கணம் நினைவுபடுத்தி செல்கின்றது. அவ் உணர்வு ஊட்டல் இலகுவாக சாதாரணர்களை போதையூட்டுவதையும்,  அதிகாரம் தங்களின் இலக்குகளை அடைவதற்காக உணர்விற்கு அடிமையானவர்களை/ சிந்திப்பவர்களை பயன்படுத்துவது உலகின் எல்லா பாகங்களிலும் பொதுவான செயற்பாடாகவே கண்டுகொள்ளப்படுகின்றது. பொதுப்பண்பாடுகளால் இணைந்த குழுக்களிற்கு இடையில் காணப்படுகின்ற வேற்றுமைகளை ஊதிப் பெருப்பித்து தன் வளச் செறிவை அதிகமாக்கும் பெருமை காலனியாதிக்கத்தையே சாரும்.அய்ரோப்பிய நாடுகள் தங்களிற்கிடையில் போட்டி போட்டுக்கொண்டு இயற்கை வளங்களை சூறையாடுகின்ற செயற்பாடு ஆபிக்காவிற்கான அடிதடி(The scramble of Africa ) என்று கூறப்படுகின்றது. இவ் வளப் போட்டிகளிற்காக மேற்கு நாடுகள் இயற்கை வளங்கள் உள்ள நாடுகளின் மக்களிடையே வேற்றுமைகளை அதிகரித்து ஒரு கொதிநிலையில் அவர்களை வைத்து இருக்கவே விரும்பு கின்றன. தங்களின் நலன்களிற்காக எந்த இன குழுமங்களினதும் இருப்பையும் அழித்துவிடும் சூழ்நிலைகளிற்கு ஆதரவாகவே ஐ.நா சபையின் செயல்பாடுகளும் இருக்கின்றது. மனித குலத்தின் மீட்சிக்காக மனிதாபிமானம் கொண்டவர்களான ஒரு இளம் ஆங்கில ஆசிரியரும், மதகுருவும் முற்போக்கு சிந்தனை உடையவர்களாக போராட ஏனையவர்கள் அதிகார வர்க்கத்தின் கட்டளைகளிற்கு கீழ்படிவுள்ள விசுவாசம் மிக்க சேவகர்களாக பெரும் மனித அவலத்தினை கடந்து செல்கின்றனர். ஒரு வெள்ளையினத்தவர் வளர்க்கின்ற நாய்யினது உயிரினும் பார்க்க டுட்சி மக்களினது உயிர் மலிவாக இருக்கின்றமை நெஞ்சை கிலி கொள்ள வைக்கின்றது.

திரைப்படத்தில் ஆரம்பத்தில் ஓட்டப்பயிற்சி செய்யும் சிறுமியின் ஓட்டம் அவளின் வாழ்க்கை க்கான ஓட்டப்பந்தையமாக இறுதிவரை நகருகின்றது. டுட்சி இன கத்தோலிக்க கன்னியாஸ்திரி களை கற்பழித்து கொலை செய்யும் இனவெறிக் குழுக்களின் கொலை வெறி இறுதியில் மனிதாபிமான போராளியான வெள்ளைநிற  கத்தோலிக்க மதகுருவின் வயிற்றில் துப்பாக்கியால் சுட்டு முடித்து வைக்கப்படுகின்றது. கொலைவெறியுடன் துப்பாக்கிகள், வாள்கள், கோடாரிகளுடன் அலைகின்ற ஹுட்டுக்களினது வன்ம உணர்வே திரைப்படம் முழுவதையும் ஆக்கிரமித்து செல்கின்றது. பெரும் மனித பேரவலங்களிற்கு பன்னாட்டு சமூகம் உடந்தையாக இருந்தமையை ஒருவகையான ஆவணப்படுத்தல் உத்தி மூலம் காட்சிகளாக விவரித்து செல்கின்றது திரைப்படம்.

மேலும் ருவாண்டா இனப்படுகொலை அதன் பின்னணி பற்றிய தகவல்களை பின்வரும் திரைப்படங்களூடாக அறிந்து கொள்ள முடியும். Ghost of Rwanda  (2004), 100 Days (2001), The diary of Immaculee (2006) , Rwanda living forgiveness  (2005) , sometimes in April  (2005)

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளை மீட்டுப் பார்க்கவும் ஈழத்தவர்களிற்கான உயிர்வாழ்தலுக்கான ஓட்டப்பந்தயம் இன்னமும் முடிவடைய வில்லை என்பதையும் கோடு காட்டி சென்றுள்ளது இத் திரைப்படம். மனித குலத்தின் இருப்பு க்கு விரோதமான ஆட்சியாளர்களும், செயற்பாட்டாளர்களும் இன வெறி உணர்வை தூண்டிக் கொண்டிருக்கும் வரை உலகில் எந்த சாதாரண மனிதர்களும் அச்சுத்தல்கள் இன்றி வாழ்க்கையை வாழ்ந்து விட முடியாது. மன்னிப்புக்களும், காலம் கடந்த தண்டனைகளும், நல்லிணக்கங்களும், அவலங்களை அனுபவித்தவர்களிற்கு என்றுமே ஆறுதல் களை தந்துவிடுவதில்லை. தொடர்ந்தும் அவர்கள் உள நோய் பீடித்தவர்களாகவே நடைப்பிணங்களாக வாழ்ந்து செத்துவிடுகின்றனர். ஈழத்தின் வலிகளோடு ஓரளவு பொருத்தி பார்க்க கூடிய ருவாண்டாவின் இனப்படுகொலை படமான "சுடப்பட்டுக்கொண்டிருக்கின்ற நாய்கள்" ஈழத்திலும் அடுத்த தலைமுறையினருக்கான வரலாற்றுக் கையளிப்பில் பெரும்பான்மை, பன்னாட்டு அதிகாரங்கள் எம் மீது நடாத்திய இனப்படுகொலையை ஆவணமாக  படைக்கப்பட வேண்டிய தேவையை உணர்த்திச் செல்கின்றது.
 2014 ல் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் பின்வருமாறு கூறியிருக்கிறார்.
" ருவாண்டாவின் படுகொலைகளை தடுக்க தவறிமைக்காக ஐ.நா வின் மீது இன்னமும் வெட்க கேடு ஒட்டிக் கொண்டிருக்கிறது " என்று.

இவர்களின் வெட்க கேடு உலக நாடுகளில் இந்த நூற்றாண்டில்  இறுதியாக நடந்த ஈழத்தின் இனப்படுகொலைகளிற்கு நீதி வழங்கப்படும் வரை ஒட்டிக் கொண்டே இருக்கும். அது வரை படுகொலைகளிற்கு உள்ளான மனிதர்களின் சந்ததிகள் என்றுமே சபித்துக் கொண்டே இருப்பார்கள் உங்களை.

#தர்ஷன் அருளானந்தன்#
நன்றிகள்- "அம்ருதா"( நவம்பர் 2016)

Comments

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"