அச்சமுற்ற போராளிகளின் மீதான #வன்முறைகள்.... தமிழினி ஜெயக்குமாரன் எழுதிய 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றிய ஒரு வாசிப்பு அனுபவம்



ஆயுத போராட்டம் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் செலுத்தும் நியாயம் அற்ற தன்மையும்,தனி மனித அதீத கொண்டாட்டங்களும்,மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட மூளை சலவையும் சரியான புரிதலை ஏற்படுத்துவதில் பல தடைகளை செய்கின்றன. இன்றைய அரசியல் மோதல் இவ்வடிவத்தை ஏன் எடுத்து இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுவதற்கு 'வடிவங்கள் மாறுதல்' பற்றி ஆராய்வது இன்றியமையாதது ஆக்கப்பட்டுள்ளது.இனவாத அடையாளங்களை சுமக்க விடப்பட்ட சிந்தனை வயப்படாத தலைமுறையாக எமது போருக்கு பிந்திய மூன்றாம் தலைமுறை ஆக்கப்பட்டு கொண்டிருக்கும் சந்தர்பத்தில் ' தமிழ் ஆயுத போராட்ட  தலைமைகளின்' மீதான ஒரு மறுவாசிப்பை கோடு இட்டு காட்டி சென்றுள்ளது 'ஒரு கூர்வாளின் நிழலில்'
'இனத்தின் விடுதலைக்காக என்ற நியாயத்திற்குள் புதையுண்டு போன உண்மைகளுக்கு எந்த ஆராய்ச்சி மணியை அடித்து யாரிடம் நீதி கேட்க முடியும்..?'
என்ற வரிகள் இறுதிவரை ஆதங்கமாகவே விட்டுச் செல்லப்பட்டு இருக்கின்றது. இறுதிக்கட்ட போரின் அவலங்களிற்குள் தங்களை தொலைத்துவிட்டு இருந்த அப்பாவி பொதுமக்களில் இருந்து சாதாரண போராளிகள் வரை யாவருக்கும் தெரிந்து இருந்தது இதுவரை பெறப்பட்ட ஆயுத போராட்ட வெற்றிகளும், அவரின் தீர்க்கதரிசனமும் நம்பிக்கையும் ஒரு கையடக்க கடதாசியாக கசக்கி போடப்பட போகின்றது என்பது....

''இயக்கத்தின் நிர்வாக தவறுகள் எம்மைவிட மக்களுக்கே அதிகமாகத் தெரிந்து இருந்தன. அதனால் இயக்கத்தின் நிர்வாக கட்டமைப்புகளின் மீது மக்களிற்கு பல சந்தர்பங்களில் கசப்புணர்வும்,கோபமும் ஏற்பட்டது''

இறுதிக்கட்டங்களில் ஏற்பட்ட தியாகங்கள் அனைத்தும் வீணடிக்கப்பட்டது அவை அனைத்தும் உயிரின் மலிவான தன்மையை காட்டி இருந்தது என்பது மறுக்கபட முடியாத உண்மையே!

''நான் கண்ட காட்சிகள் ஒவ்வொன்றும் எமக்கொரு அமைதியான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை''

ஒரு தோல்விகண்ட போராளிப் பெண்ணாக யாதார்த்தம் இப்படியும் பார்க்கப்பட்டு இருந்தது.

''தமிழ் சமூகத்தில் பெண்கள் விடுதலைக்கான பாய்ச்சல் வளர்ச்சியானது ஆயுதப் பெண்களின் பிம்பமாகவே தொடங்கி ஆயுதபோராட்டத்தின் தோல்வியுடனே அது முடிந்தும் போனது''

எள்ளல் நகையாடலூடாக இப்போராளிப் பெண்ணை சிங்கள அரசும்,தமிழ் சமூகமும் பார்த்தவிதம் தனியே ஒரு தமிழினி என்ற குறியீட்டை குற்றம்சாட்டிவிட்டு கைகட்டி வேடிக்கை பார்த்தது.

''உதுகள் உயிரேடா வந்ததுக்கு சயனைட்டை கடிச்சிருக்கலாம்''

என்ற மனிதம் தாண்டிய கோரத்தை காட்டி இருந்தது. எய்தவன் யாரோ..? அம்பை நொந்து கொண்டார்கள்.

தன்னிலை சார்ந்த குற்ற உணர்ச்சியாக பெருமூச்செறியும் ஒரு பெண்ணாக நாங்கள் நமக்கு என்று ஒன்டும் உழைக்கவில்லை, ஒரு சமூகத்தை வாழவைக்க வேண்டும் என்பதற்காக போனோமே தவிர  அதே சமூகத்தின் சீரழிவிற்கு நாங்களே காரணம்,பங்காளிகள் என்று தங்களை தாங்களே நொந்து கொண்ட மனப்பாங்கு பல தலைவர்கள் மீது ஆத்மார்த்தமாக பெரும் கேள்வி ஒன்றை விட்டுச் சென்றுள்ளது...கூர்வாள் அங்கு குத்தி நிற்கட்டும்...!!

பலருடைய விமர்சனங்கள் சமூகத்தில் இவர்களை வேண்டாதவர்களாக பார்க்க வைத்ததில் சிங்களபேரினவாதமும், தமிழ் தேசியம் பேசிய ஊடகங்களும் பெரும்பங்காற்றி உண்மைகளை இருட்டடிப்பு செய்து ஒருபக்க பார்வையை மக்கள் மீது திணித்து கொண்டு இருப்பது தமிழினியின் பார்வையில் மட்டும் அல்ல பாதிக்கபட்ட அனைவரதும் வெளிவராத ஆதங்கமாகவே உள்ளது. சமூகத்தின் மீதான அக்கறையுடன் போராடிய  பெண்களை சமூகத்தின் மீது வெறுப்படைய வைத்து ஊடகங்கள்,தேசிய தலைவர் என்ற ஒற்றை சொல்லாடலில் குளிர்காய்பவர்கள் மற்றும் வலியை உணராத அல்லது ஆயுத போராட்டத்தின் கறுப்பு பக்கங்களை அறிய முற்படாதவர்கள் மத்தியில் இவர்கள் சரணடைந்த காரணத்திற்காக கைவிடப்பட்டார்களா....? போராளிகளும் சாதாரண மனிதர்களே உயிர்வாழும் ஆசை கனவு சாத்தியபடாது போகும் போது வந்தது குற்றமா?  அப்பாவி பொதுமக்கள் சிங்களபோரினவாதத்தால் மட்டும் கொல்லப்பட்டோ வன்புணரபட்டோ கலாசார சீர்கேடுகளிற்கோ உட்படுத்தபடவில்லை... இதற்கான தோற்றுவாய்களை உருவாக்கியவர்களுமே இதற்கு துணை போயிருக்கின்றார்கள் கட்டாய ஆட்சேர்ப்பின் ஊடாக... இவற்றை மறைக்க முயல்பவர்கள் ஒரு சமயத்தில் தமிழினியையும் துரோகி ஆக்க முனைவார்கள்

எழுத்தை வியாபாரம் ஆக்கும் உத்தி,தேசியத்தை விலை பேசுகின்றனர் என்று கண்மூடித்தனமாக கதறாமல் இவற்றை ஒரு மறுவாசிப்பு செய்வதில் தவறு ஏதும் இல்லையே..!

யதார்த்தத்தில் உள்ள பல விடயங்களை பாராது இது தமிழினியால் எழுதப்பட்டதோ இல்லையோ? என்ற விடையை தேட முற்பட்ட எவரும் விளிம்பு நிலை போராளிகள் பக்கத்தில் ஆயுத போராட்டம் பற்றிய ஒரு மறுவாசிப்பு இருந்ததை கண்டும் காணாமல் விட்டமை ஏன்.?
இங்கு தமிழினி என்பவர் விவாதத்திற்குரியவர் அன்று. அவருடைய குறியீட்டின் ஊடாக கூறப்பட்ட விடயங்களின் சாத்தியதன்மை இறுதி போரிலே சிக்க வைக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமாகதான் இருந்தது.இவை வெளிக்கொண்டு வரப்படுகின்றபோது பல மையநோக்கு சிந்தனை கொண்டவர்கள் மையவிலகலை பற்றி தூற்றுவது அறியமையே...!

''ஒரு கூர்வாளின் நிழலில் அச்சமுற்ற போராளிகளின் மீதான வன்முறையை சொல்லிதான் சென்று இருக்கின்றது''

Comments

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"