கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"


கடினமான கணக்குகளை அறிந்து கொண்டும் அந்தக் கணக்குகளிற்குள் ஊடுருவி, கடந்து சென்ற படைப்பின் உயர்வான கவர்ச்சியாக 'அதற்குள் அவராகவே வாழ்வதால்' சாத்தியம் ஆக்கப்பட்டுள்ளது.

தமயந்தியின் கதைகள் இயல்பான நேரடித் தன்மை கொண்டவை. இக் கதைகளின் பின்னனியில் இயல்பான கடல்சார் வாழ்க்கை கண்ணோட்டமும், ஈழப்போராட்ட மனிதம் சார் ஏக்கங்களும் அக்கம்பக்கமாக நிறுத்தப்படுகின்றது. கதைகள் அனுபவத்தையும், உணர்வுநிலைகளையும் மட்டுமே நம்பியிருக்கின்றன. உண்மை யின் யதார்தங்கள் ஆங்காங்கே எமது நனவிலி மனங்களை கட்டுடைத்து வெள்ளம்போல் துரைதிரள உப்பு கலந்த வாசனையோடு எம் நாசிகளை தழுவிச் சொல்கின்றன.

"கள்ளும் நண்டுச் சம்பலும் வயிற்றுக்குள்  சமா வைக்கத் தொடங்கியதும் பூமியில் மானிட ஜென்மம் அடைந்ததைப்பற்றி தொடங்குவார்."
 அப்பு
' கின்றார் பாடகன்'  இசைமீட்டும் நண்பரின் சிறுகதைக்குள் அப்பு தொட்டுச் சென்ற புள்ளிகள் பல ஈழத்தின் கடற்கரை வாசனையுடன் அய்ரோப்பிய மண் கொண்ட அடிப்படை மானுட விடுதலையை பேசி இருக்கிறார்.
" இன்பம் சுவைக்க பட்சமுடைய நண்பர்காள் ! நீங்கள் இன்பம் சுகிக்க நான் பயன்படுவேனாகில் என்னை பாவியுங்கள்! ஆனால் மனித நாகரீகம் சாகும் படியால்ல..."

எமது ஒரு தலைமுறை கடந்த வாழ்வின் அடிப்படை மனித விழுமியங்கள் இன்று "கிழவர்களின் கிற்றார்களை" மீட்டுவதில் தான் ரசனை காண்கின்றதே தவிர நடைமுறை வாழ்வில் ஈழத்திலும் சரி புலத்திலும் சரி மனிதனை தேடி பயணங்கள் செய்யவேண்டிய காண்பியலை துன்பியலாக கூறிவிடுகின்றது. நனவிடை தோய்ந்த தமயந்தி அதற்குள் நடப்பில் உள்ள மனநோய் பிடித்தவர்களை அதற்குள் இணைத்து சற்றே வாசகரை தவிக்க விடவும் தயங்கவில்லை.

ஈழத்தின் ஒருகாலகட்ட வாழ்வின் அவல ஓசையை துன்பக் கனலில் துவண்டு கூற முற்பட்ட புனைவு "ஏழாற்றுக் கன்னிகள்" நாவட்டப் பாறையில் தங்கியிருந்த எம் ஏழு கன்னிகளும்- ஒரு குறியீட்டு வடிவமே! அவ் குறியீட்டு வடிவத்தின் ஊடாக உயிர்ப்பிக்கப்பட்ட வலி ஒரு மீனவனின் பாடுகளை விவரமாக கதையாடல் செய்யதுவிட்டாலும் மீன்வாடிகளின் மீன்வாசனையை எமக்குள் பரப்பி சென்றுவிடுகின்றது.

" மானையும் மீனையும் கண்டமாத்திரத்தில் சொல்லுறவன்தான் சரியான வேட்டைக்காரன்"

"வாழ்வையும், உணர்ச்சிகளையும் அதற்குள் வாழ்ந்துபடைத்தவன் தான் உண்மையான கதை சொல்லி"

இங்கு உண்மை கதைசொல்லியாகவிட்டார் எழுத்தாளர். புனைவைத் தாண்டிய கதை கூறலில் வாசகனை அதற்குள் முக்குளிக்க வைத்து லயிக்க விடுகின்றார்.

அள்ளி மீன் கொண்டுவரும் மீனவர் கடலோடு மட்டும் போராடவில்லை எம் இனத்தின் இருப்பை கேள்விக்கு உட்படுத்திய வல்லூறுகளாலும் தான். அப்பாவிகள் என்றும்  தசை கொத்தி ஊண் வடிய வைக்கப்பட்ட துன்பகரமான வாழ்க்கை யை தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். துயரத்தின் கொடுங்கனாவை கடல் அன்னையாக நின்று எழுத்தில் வடிவமைக்க முற்பட்டிருக்கின்றார் தமயந்தி.

" காலகாலமாய் அவர்களது சந்ததியினரை வளர்க்க எமது மடியில் இருந்து அள்ளி அள்ளி கொடுத்தோம், அதே மகன்கள் தான் இன்று எம்மை சிதைக்கிறார்கள் என ஏழாற்றுக் கன்னிகளின் ஓலக்குரல்கள் மகன்களை இழந்த இலங்கை நாட்டின் மானிடத் தாயின் விசும்பலாகவே மனதை நெருடிவிடுகின்றது.

ஈழத்தவரின் வாழ்வும் தங்கு தாணையம் வைத்தது போலவே இன்று அவரவர் அரசியல் தேவைகளுக்காக இயந்திரத் தனமாய் சுரண்டப்படுகின்றது. இதற்கு நேர் எதிரிடையான ஒரு பல்இன சகவாழ்வையும், ஒத்த இன வேரறுப்புக்களையும், காழ்ப்புணர்சிகளையும்  நிதர்சனமாக கூறும் புதினம் " நாச்சிக்குடா எழுபத்தேழு" களங்கண்டி வலையும், பாய்ச்சுக் கம்புகளும் மீனவர் வயிற்றுப்பாட்டிற்கான தங்கப்பாளங்களாக கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதாக காட்சி இருந்தாலும் பல சமயங்களில் வாழ முற்பட்ட கனவு வாழ்க்கை முபாரக் நானா வளர்த்த சேவல் கழுத்து அறுக்கப்படும் போது கூவிய இறுதிக் கூவலாகி விடுகின்றது.

ஆக உணர்வைத் தொடும் எந்த ஒரு படைப்பும் ஆர்த்மார்த்தமாக இருக்க வேண்டும் எனில் அதன் மையக்கூறு பொய்யாகவும், போலியானதாகவும் இல்லாதிருக்க வேண்டும். தமயந்தியின் எழுத்துக்களில் இப் போலி தெரியவில்லை. என்பது சிறப்பியல்பே.

" பகல் சோத்துக்கே வழிய காணல்லையாம் இதில போக்கத்த மனிதனுக்கு பழஞ்சோத்து விடாய் பெரும் விடாயாய் தான் கிடக்கு"

ஈழத்தின் விடுதலைச் சாம்பலுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்புத் தணலாக காணப்படும் சாதீயத்தையும், வசைபாடல்களையும் "அப்பு" தனியொருவனாக கடந்த கதையும், அச் சூழலுக்குள் எம் தலைமுறை கொடுக்கப்போகும் விலையையும் நாசுக்காக ஒரு மைய விலகல் இன்றி கூறிய கதை தான் இது. கடல் கடந்த கந்தக வெடிகளிற்கு அநியாயமாக பறிகொடுக்கப்பட்ட உயிர் களையும் , சிங்கம், புலி விளையாட்டில் இறைச்சி துண்டமான அப்பாவி மக்களையும் தனது பார்வையில் நீதி, நியாயங்களின் ஊடாக எடுத்துரைத்த பாங்கு அழகே..!

எமது இனத்தின் இரத்தமும் சதையுமான வாழ்வை வெளிக்கொண்டுவர முனைந்த இடம் " தொள்ளாயிரம் சரிகளும் இரண்டாயிரத்திற்கு அதிகமான காயங்களும்"  போராடட்ட அரசியலாகட்டும்,இன்றைய ஜனநாயக அரசியலாகட்டும் இரண்டும் அப்பாவி மக்களிற்கு கொடுத்த ரணங்கள் எண்ணிக்கையில் கூடுதலாக வே இருந்தன. ஆனால் மிக சில சரி களை மட்டும் கொண்டு அநியாயத்திற்கு நியாயமாக எங்கள் உயிர் ஒலித்த கணங்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. " அல்போன்ஸா" வடிவான கறுப்பிதான்..! - எங்கள் ஊர் வடிவான கறுப்பிகள் கந்தக புகைக்குள் சுவாசித்து , பழக்கப்படாத நிலத்தில் வாழ்ந்து கஞ்சிக்காக கையேந்த வைத்தவர்கள் தற்புகழ்ச்சியும் பதவிமோகமும் கொண்டாவர்களே. அவர்கள் என்றும் எம்மால் சபிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

"மண்டா" கொண்டு செய்த சண்டித்தணங்களும், இறந்த கால நினைவு மீட்டல்களும் ஈழத்தின் போராட்டக்குழுக்களின் தன் இன மக்களின் மீதான அடக்குமுறைகளையும், உயிர்க் கொலை களையும் இத் தலைமுறை அறியாக் கதைகளை உயிர்ப்பிப்பதில் தொடங்கியது. ஆழமான பெருமூச்சு அடிவயிற்றில் இருந்து தெடங்கி நாசிகளின் ஊடாக வெளிப்பட்டு ஆசுவாசப்படுத்தினாலும் சொந்த கடல் தாய் தந்த கும்பிளா மீனும் நேர் வே நாட்டு மக்ரல் மீனும் ஒரே சுவையை கொண்டிருந்தாலும் பெயர் வேறு தானே.!  மண்டா கொண்டு அடிபட்டாலும் எம் சனம் ஒரே மாதிரி சிந்திக்க வழிப்படுத்தி விடுதலை கொடுக்க  உருவாகியவர்களாலும், அமைதியை நிலைநாட்ட வந்தவர்களின் வினையாலும் வினையாகியவர்கள் ஐயாவின் நண்பர்கள் அல்ல- எங்கள் வீடுகளில் இருந்து கொலை செய்யப்பட்டவர்களே.

தன்னைவிட மண்ணையும், தன் சனங்களையும் அதிகளாவாக நேசித்த பல மனிதர்கள் சாய்ந்துதான் போனார்கள். இல்லை இவர்கள் சாயவைக்கப்பட்டார்கள். தமயந்தியின் ஆற்றெணாத் துயரம் கொண்ட கனவுகளில் அப்புவும், லூர்த்துராசனும், பவுல் ப்ரூனோவும் கொட்டிவிட்டுச் சென்ற மரண ஓலத்தின் ஊடான தெறிப்புக்கள் தான் முபாரக் அலி நானாவும், விநாயகமூர்த்தியாரும்.
கப்பல்காத்த கன்னிமாதா கோவிலின் அறுந்து வீழ்ந்து மல்லாந்து கிடக்கும் மணி வன்னியில் பழக்கப்பட்ட துறவிகளாலோ, கிழத்துறவிகளாலோ, அல்லது அவர்களின் மந்திரக்கோல் கொண்டோ என்றுமே இனிய நாதத்தை தரப்போவதில்லை.
திருச்சபை அதிகாரத்தின் உச்சகாட்சிகளையும் பதிவுசெய்து போகின்றார்.
நேர்வேஜியன் கடல் கரைகளிற்கும், ஈழத்தின் கடற்கரைகளிற்குள்ளும் தொட்டுச் செல்லும் கடல் அலைகள் என்றும் சாதி மதம் பார்க்கவில்லை. ஆனால் பல முடிச்சுகளை கதையின் ஊடாக அறிமுகம் செய்த எழுத்தாளர் சில இடங்களில் முடிச்சு அவிழ்ப்புக்களில் தடுமாற்றம் கொண்டது போல் உள்ளது.' எட்டாம் பிரசங்கம்"  பல மைய விலகல்களைக் கொண்டிருந்தாலும். அது ஒரு நாவலுக்குரிய போக்காகும்.
உண்மையான மீன்பிடி காரர்களின் கதையிது. விடுவலைத் தோணியும், தோட்டுப் பறியும் மறக்காத தற்போதைய நேர்வேஜியன் மீனவர் தன் அசைமீட்டல்களில் எம்மையும் ஈழக்கடற்கரைகளிற்கும், அட்லாண்டிக் கடற்கரைகளிற்கும் அழைத்துச் சென்ற உத்தி சிறப்பே.

' வாடி ராசாத்தி பொலிஞ்சு வாடி, கூட்டாளிமார் எல்லோரையும் கூட்டிக் கொண்டு வாடி, சுத்திப் பட டி நாச்சியார். வலைக்குப் பத்தாக தூக்கிப் போட டி.'
லூர்த்து ராசன் துள்ளிக் குதிக்கும் மீன்களோடும், வலைகளோடும், காற்றோடும் போசிய கதைகள் புளியாணத்தின் கம கம வாசனையாகி எம் மில் கலந்து நாவில் எச்சில் ஊற வைத்து விடுகின்றது. கடந்த பெரும் கதையொன்றை பெரும் இடைவெளிப் பாய்ச்சல்கு உட்படுத்தி விடுகின்றார். சாதீயச் சண்டையில் இருந்து ஈழப்போராட்டத்தின் கொடும் இன வெளியேற்றம் வரை விரிவடைந்து அப்புவுக்கும் எழுத்தாளருக்கும் கிடையிலான அன்பின் பிரமாணம் மட்டும் வாசகனை சலிப்படையச் செய்யவில்லை.

தயமந்தியின் உடனான ஒர் உரையாடலில் அவரின் படைபின் நோக்கம் பற்றி பின்வருமாறு கூறியிருந்தார்.

"இன்று எமது கடல்சார் அரசியல் மிக அபத்தமான, ஆபத்தான நிலைக்குத் தள்ளப் பட்டு விட்டது. இதனை எந்த மொழியிலும் நமது அரசியல்வாதிகளுக்கு எடுத்துச் சொல்லி எதுவும் ஆகப்போவதில்லை என்பது விளங்கி விட்டது. கடலைப் பாதுகாக்க அரசாலோ, அரசியல்வாதிகளாலோ முடியாது என்பதை தெட்டத் தெளிவாகவே நான் புரிந்து கொண்டேன். ஆக, நமது கடலை நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்பதை கடலவ மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டம் இது. தமிழ் இலக்கியத்துக்கு ஊழியம் செய்வதாகச் சொல்லிக்கொண்டு சுற்றிவளைக்காமல் அந்தச் சனத்துக்கு எடுத்துச் சொல்லவேண்டிய மொழி இதுவாகத்தான் என்னால் அடையாளம் காண முடிகிறது.
உண்மைதான். நவீன தமிழ்ப் புனைவு இலக்கியத்துக்கு கடல்கன்னிகள் எந்தவகை பணி செய்கிறார்கள் என்றால் ஒன்றுமில்லைத்தான். இப்போதுள்ள கடல் அரசியலின் ஆபத்தை கடல்சார் மக்களுக்கு எடுத்துச் செல்வதில் ஒரு சிறு குரலாகவேனும் கடல்கன்னிகள் அமையுமானால் அதுவே போதும்."

இங்கு படைக்கப்பட்ட மொழி  கதைகளை கடலவ மக்களிடம் மட்டுமல்ல கடலை நம்பி இருக்கும் அனைவரிடமும் எடுத்துச் செல்லப்படும். என்ற நம்பிக்கை துளி வாசிப்பின் பின்னர் வாசகருக்கு ஏற்படுவது மறுக்க முடியாத ஒன்றே.

ஒரு படைக்கப்பட்ட அழகு, சில சமயங்களில் திகிலூட்டும் விவகாரத்தின் அழகாகக்கூட இருக்கலாம். பிரதிகளை பிழைப்பது அவசியம். நாம் ஒரு அழகி ன் மீது ஐயம் கொள்ளும் போது அரைகுறையாக புரிந்து கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன. முழுமையாக அனுபவம் கொள்ளும் போது. அது அழகான உச்ச உணர்ச்சிகளைக் தொங்கவிடும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள் உப்புகடல் சார்ந்து படைக்கப்பட்டு இருந்தாலும் அதில் உப்புக் கரிக்கவில்லை. சமூகம் பற்றிய ஆதங்கமும்,
அன்பின் நனவிடைதோய்தலும், தலமுறை இழந்த கடற்கரை கிராமத்தானின் வாழ்வும் சுவைக்கின்றது.

Comments

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி