போருக்கு பிந்திய சமூகத்தில்- "அடுத்த கட்டப் போராட்டம்" - மனித மனங்களிலேயே.



சராசரி குடும்ப வாழ்வை வாழ விரும்பாமல் போராளிக் குடும்பமாக வாழ்ந்த வீட்டை துறந்து முழுமையான மனிதத்தை நோக்கி வீடு திரும்பும் போது மன இறுக்கத்தை தூண்டும் மௌனங்களாலும், கலவரமூட்டும் சப்தங்களாலும் , புனிதத்தின் பெயரால் வரலாற்றின் நியாயங்களை வன்முறைக்கு உட்படுத்தும் ஒரு சமூகத்தைக் கண்டு புன்னைகைக்கின்றான். ஒரு போராளி - இளங்கீரன்.

'இயக்கப் பொடியனையே கலியாணம் கட்டப்போறாள்'

' ஜெயம் அண்ணாவின் பொடியள் இருபது முப்பது பேர் நேரடியாக வந்து நின்று வேலை செய்தார்கள்' 

சிம்பிளாகவும் பம்பலாகவும் நடந்து முடிந்த திருமணம். இதையெல்லாம் பெருமையாக நினைத்த சுவேதாவின் அம்மா- இளங்கீரனின் மாமி மிகப் பெரும் தோல்விக்கு பின் அனைத்தும் மறந்து மனசுக்குள்ளும், வெளியிலும் திசை தெரியாமல் பறந்தாள்.

சிறுமைப்படுத்தப்படும் மனம் மனிதனுக்கு எப்போது வந்தது? தான் இல்லாத உலகம், வீடு, வாழ்க்கை பற்றிய பயம் மனிதனை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது. அந்தப் பயத்தில் அலறும் மனிதர்கள் ஒரு விடுதலை போராளியின்  மீது ஏற்படுத்திய அவஸ்தை தான் தெய்வீகனின் ' அடுத்த கட்டப் போராட்டம்' சிறுகதை.

' உன்னைக் கூப்பிட்டாங்கள் எண்டு சொன்னா, என்னை விட்டுட்டு போயிராத?'
என்று கூறிய சுவேதா- இளங்கீரனின் அன்பு மனைவியை படைப்பு சித்தரிப்புக்குள் கொண்டு வராது தொக்கி நிற்க செய்யப்பட்ட உத்தி இன்னும் ஒரு கதை களத்தை அதிலிருந்து தொடங்கும் முதலடியாக இருக்கலாமோ? இருவரையும் பிரித்து வைத்த வறட்டு சாதீய பெரும்பான்மை மனது என்னளவில் ஒரு கேள்வியை எழுப்பிச் சென்றது.
' போராட்ட காலங்களில் சாதீயம் முற்றாக ஒழிக்கப்பட்டு இருந்ததா?'
இயக்கத் திருமணங்கள் கூட சாதீயம் சார்ந்து முரண்பட்ட கதைகள் மக்களின் திரைமறைவுக் குசு குசுப்புக்களில் முன்னிலையில் இருந்தது மறுக்கப்படமுடியாதது.இவ் வரலாற்று உண்மையை ' தெய்வீகன்' பாவ மன்னிப்பு செய்ய முயன்று இருக்கின்றாரா?' இருந்த போதும் எமது ஈழ சூழலில் கொழுந்து விட்டு எரியப்போகும் முரண்பாட்டை எதிர்வு கூறி நிற்கின்றது படைப்பு.

தீர்க்கமான கட்டு இறுக்கப்பட்ட ஒரு தேசிய சிந்தனையில் இருக்கும் சாதீயச் சாம்பல் உலகத்தில் வெளிச்சத்தை தேடுகின்ற ஒரு புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் வெளிக் கூறத்தயங்கும் மனத்தின் ரணங்களில் கொப்பளிக்கும் குருதிச் சிறு தட்டுக்களின் வெளித்தெரியா நடனம் இது.

நாம் விரும்பியபோது அவர்கள் போராட வேண்டும் என நினைப்பது போல நாம் விரும்பியவாறுதான் அவர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் ஒரு சமூகத்தின் வன்முறையை போலித்தனமான பாவனைகள் ஏதும் அற்று மேல்பட்ட பார்வையில் தெரியாது இருக்கின்ற பேதமைகளை சுட்டிக்காட்டிய படைப்பாளியின் துணிச்சல் எழுத்துச் சூழலில் நம்பிக்கை தரும் வெளிப்பாடாகவே உள்ளது.

போரிற்கு பிந்திய சமூகத்தில் பல மாற்றங்கள், விரோதிகள் நாயகர்கள் ஆகின்றார்கள்,  நாயகர்களாய் இருந்தவர்கள் உள்நோக்கம் வெளிப்பட்டு துரோகிகளாகின்றார்கள். ஆனால் ரத்தத்தின் மீதும் மண் மீதும் தீரனாய் போராடியவர்கள் திட்டமிட்டு வழுக்கி விழ வைக்கப்படுகின்றனர் - கோமாளிகள் ஆக்கப்படுகின்றனர். இங்கு வறட்டு கௌரவத்தின் காதல் முற்றிக் கிறுகிறுத்து மனிதர்கள் சாதியினர் பெயரால் கொடிய விலங்குளாக தம்மை பாவனை செய்கின்றார்கள். விருட்சமாய் இருந்த ஒரு விதையின் எதிர்காலம் கொதிநீரில் போடப்பட்டு உயிர் இழக்க வைக்கப்படுகின்றது.

" வடிவம் சார்ந்து குறுநாவலாக படைப்பாக்கம் செய்யப்பட வேண்டிய கதைக்களப் பரப்பு சிறுகதையாக சுருக்கப்பட்டுள்ளது.சில உயிரோட்டம் மிக்க கணங்கள், நினைவேக்கத்தால் மீட்டு எடுக்கப்பட்டிருக்கின்றன. சுண்டி இழுக்கும் கதையிது, இருந்தாலும் சில இடங்களில் வார்த்தைகளிற்கு உணர்வூட்டி நெஞ்சின் நரம்புகளை சுண்டி இழுத்திருக்காலாம்  என்றே தோன்றுகின்றது. விடா முயற்சியே மனிதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது. அவன் அதனை தனது சொந்த அனுபவத்திலேயே அதனை உணர முடியும்.

சிறுகதையின் முக்கிய கூறுகளான  முரண்பாடு(conflict), உச்ச நெருக்கடி(crisis), இறுதித்தீர்வு(resolution) கொண்டு இளங்கீரன் என்னும் பாத்திரம் படைக்கப்பட்டு இருக்கின்றது.

"எவ்வளவு பெரிய போராட்டம் ஒன்றை இவ்வளவு சிறிய மனிதர்களுக்காகச் செய்து இருக்கின்றோம். என்று ஒரு கணம் யோசித்துக் கொண்டு கிணற்றடியை நோக்கி போனான் இளங்கீரன். இதைதான் அடுத்த கட்டப் போராட்டம் என்கின்றார்களோ என்றும் நினைத்துக் கொண்டான். ஏனென்று தொரியாமலே அவனுக்கு சிரிப்பு வந்தது."

உச்ச  நெருக்கடி என்பதை தெய்வீகன் எந்த சந்தர்பத்திலும் திணிக்க முற்பட்டிருக்கவில்லை. இயல்பாக நிகழ விடப்பட்டமை வாசகர் மனதில் பெரும் நெருடலை ஏற்படுத்தி சென்றமை தெய்வீகனின் எழுத்தின் வெற்றியே...!

தர்ஷன் அருளானந்தன்

Comments

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"